டெல்லி: பாஜக தலைவராக இருந்த ராஜ்நாத் சிங் அந்தப் பதவியிலிருந்து விலகியுள்ளார். இதையடுத்து நிதின் கட்காரி புதிய தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். அதே போல மக்களவை எதிர்கட்சி தலைவர் பொறுப்பில் இருந்து பாஜக தலைவர் அத்வானி விலகியுள்ளார். அந்தப் பொறுப்பில் சுஷ்மா சுவராஜ் நியமிக்கப்பட்டுள்ளார். சுஷ்மா இதுவரை மக்களவை எதிர்க் கட்சித் துணைத் தலைவராக இருந்தார்.
ராஜ்நாத்துக்குப் பதில் கட்சியின் தேசியத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள நிதின் கட்காரி, மகாராஷ்டிர மாநில பாஜக தலைவராக இருப்பவர் ஆவார். பாஜகவில் முக்கிய பொறுப்புகளில் இளைய தலைமுறையினரை நியமிக்க வேண்டும் என்று ஆர்எஸ்எஸ் நெருக்கடி தந்தால் இந்த மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
குறிப்பாக கட்சியின் அகில இந்தியத் தலைவர் பதவிக்கு 60 வயதுக்கு உட்பட்டவரையே நியமிக்க வேண்டும் என்றும் ஆர்எஸ்எஸ் உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது. சுஷ்மா எதிர்க் கட்சித் தலைவராவகியுள்ளதால் அவர் வகித்து வரும் எதிர்க் கட்சித் துணைத் தலைவர் பதவியைப் பிடிக்க அனந்த் குமார், ஷாநவாஸ் உசேன், கோபிநாத் முண்டே ஆகியோர் இடையே கடும் போட்டி உருவாகியுள்ளது.
அத்வானி லோக்சபா எதிர்க்கட்சி்த் தலைவர் பதவியிலிருந்து விலகிய பின்னர் அதுகுறித்து அத்வானி செய்தியாளர்களிடம் கூறுகையில், எனது யாத்திரை தொடர்ந்து கொண்டிருக்கும். அதற்கு முடிவில்லை என்றார்.
பதவி விலகிய அத்வானி கட்சியின் பாராளுமண்ற தலைவராகவும், கட்சியின் மூத்த ஆலோசகராகவும் செயல்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு தகுந்தபடி கட்சியின் விதிகளில் திருத்தம் கொண்டுவரப்படும்.
கடந்த 30 ஆண்டுகளாக முக்கிய இந்திய அரசியல் தலைவராக வலம் வந்த அத்வானி, பாஜகவின் மத்திய ஆட்சியில் உள்துறை அமைச்சராகவும், துனைப் பிரதமராகவும் பணியாற்றினார்.
இவர் உள்துறை அமைச்சராக இருந்தபோது தான் பாராளுமண்றத்தின் மீது தீவிரவாத தாக்குதல் நடந்தது. அதனை தொடர்ந்து பொடா சட்டம் கொண்டு வரப்பட்டது.
இவர் அமைச்சராக இருந்த போது தான் ஆப்கானிஸ்தானிற்கு இந்திய விமானம் கடத்தப்பட்டு, தீவிரவாதிகள் விடுதலை செய்யப்பட்டனர். இவர் பாஜக தேசிய தலைவராக இருந்த போது தான் ராமர் யாத்திரை நடத்தப்பட்டு, பாபரி மசூதி கரசேவகர்களால் இடிக்கப்பட்டது. பாஜக ஆட்சியில் இரண்டாவது இடத்தில் இருந்த அத்வானி இவ்வருடம் நடந்த பாராளுமன்ற தேர்தலில் பிரதமர் பதவிக்கு முன்னிறுத்தப்பட்டார். எனினும் கட்சி பெரும் தோல்வியடந்ததையடுத்து, அவர் அரசியலிலிருந்து விலக வேண்டும் என கட்சிக்குள் அதிருப்தி தோன்றியது, ஆர் எஸ் எஸ்-ம் அத்வானியை விலக்க பாஜகவை நிர்ப்பந்தம் செய்தது குறிப்பிடத்தக்கது.
0 கருத்துகள்: on "ராஜ்நாத்-அத்வானி விலகல்: பாஜக தலைவரானார் நிதின் கட்காரி!: எதிர்க்கட்சித் தலைவரானார் சுஷ்மா"
கருத்துரையிடுக