10 டிச., 2009

கோடை குளிருமா!..? வாடை வருடுமா!..?


வாழ்வைத் தேடி வயல்வரப்புகளை

விற்றுவிட்டு வந்த நாங்கள்

வறுமையை போக்க வாலிபத்தை

தொலைத்து வீடு திரும்பும்போது

வயோதிகத்தையும் வியாதியையும்

கொண்டுசெல்லும் எங்களுக்கு

கோடையென்ன! வாடையென்ன!



கோடைவெயில் கொடூரமாய்

கொழுந்துவிட்டு எறிய –அதன்

கொள்ளிக்கட்டைகளாய் நாங்கள்மாறி

குளிர்காயும் கோடீஸ்வரர்களுக்காக

கட்டிடம் கட்டும் எங்களுக்கு

கோடையென்ன வாடையென்ன!



கண்ணுக்கெட்டிய தூரம்வரை

கானல்நீர் கரைபுரண்டு ஓட

உச்சிமுதல் பாதம்வரை

உதிரம் வியர்வைகளாய் நனைய

சாலையின் இருபுறத்திலும் புல்வெட்டி

களையெடுத்து பூச்செடிகள் நடும் எங்களுக்கு

கோடையென்ன! வாடையென்ன!



அதிகாலை குளிரில்


நாடியெல்லாம் நடுநடுங்கி

நரம்புகள் விறைத்துக்கொள்ள

சாலைகளை சுத்தப்படுத்தி

அடுத்தவர்களின் அசிங்கங்களை

அப்புறப்படுத்தும் எங்களுக்கு

கோடையென்ன! வாடையென்ன!



வாடைக்காற்று வதைப்படுத்த

வாதநோய் வருத்தப்படுத்த

எங்களின் கஷ்டங்களை தீர்க்க கச்சடா

[குப்பை] தொட்டிக்குள் கைவிட்டுபிளாஸ்டிக் தனியே,

தகரடின் தனியே, என பிரித்தெடுக்கும் எங்களுக்கு

கோடையென்ன! வாடையென்ன!



பாலைவமணலிலே!

புழுதிபறக்கும் அனலிலும்

உறையவைக்கும் குளிரிலும்

ஒட்டகத்தோடு ஒன்றிவாழும் எங்களுக்கு


கோடையென்ன! வாடையென்ன!

நாங்களும் காத்திருக்கிறோம்

எதிர்பார்த்திருக்கிறோம்!!!

கோடை என்றாவது குளிருமென்றும்

வாடை என்றாவது வருடுமென்றும்...



கவிதை:மலிக்கா

source:நீரோடை

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "கோடை குளிருமா!..? வாடை வருடுமா!..?"

கருத்துரையிடுக