மும்பை தாக்குதலில் வீரமரணமடைந்த தீவிரவாத தடுப்புப் பிரிவு தலைவர் ஹேமந்த் கர்கரே, தாக்குதலின்போது அணிந்திருந்த குண்டு துளைக்காத அங்கியை குப்பைத் தொட்டியில் போட்டு விட்டதாக வாக்குமூலம் அளிக்க மும்பை போலீசார் தனக்கு ரூ.50 ஆயிரம் தருவதாக கூறினர் என்று மருத்துவமனை துப்புரவு தொழிலாளி திடுக்கிடும் தகவலைக் கூறியள்ளார்.
சென்றவருடம் மும்பையில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியபோது தீவிரவாத தடுப்புப் படையின் தலைவர் ஹேமந்த் கர்கரே உட்பட 3 போலீஸ் அதிகாரிகள் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலின்போது கர்கரே அணிந்திருந்த குண்டு துளைக்காத அங்கியையும் துளைத்துக் கொண்டு துப்பாக்கி குண்டுகள் உடலில் பாய்ந்ததால் அவர் இறந்ததாகச் சொல்லப்பட்டது.
தாக்குதலின்போது அவர் அணிந்திருந்த அங்கி தரம் குறைந்தது என்ற குற்றச்சாட்டு எழுந்த நிலையில் மாயமானது. இது தொடர்பாக, மும்பை நீதிமன்றத்தில் சந்தோஷ் என்பவர் வழக்கு தொடர்ந்தார். இதை விசாரித்த நீதிமன்றம், காணாமல் போன புல்லட் புரூப் ஜாக்கெட் பற்றி வழக்கு பதிவு செய்து விசாரிக்கும்படி போலீசாருக்கு உத்தரவிட்டது.
இந்த நிலையில், கர்கரேயின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்ட ஜே.ஜே. மருத்துவமனையில் துப்புரவு தொழிலாளியாக பணியாற்றும் கட்டார், நீதிமன்றத்தில் சில தினங்களுக்கு முன்பு வாக்குமூலம் அளித்தார். அதில், ‘கர்கரே அணிந்திருந்த புல்லட் புரூப் ஜாக்கெட்டை கழிவுப் பொருட்கள் வைத்திருந்த பிளாஸ்டிக் பையில் போட்டு குப்பைத் தொட்டியில் வீசி விட்டேன்’ என்று கூறியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
மறுநாள் அவர் தனது வாக்குமூலத்தை மாற்றி கூறியுள்ளார். கட்டாரின் பேட்டியை ஆங்கில செய்தி சேனல் ஒன்று நேற்று முன்தினம். வெளியிட்டது. அதில் கட்டார் கூறியதாவது: "கர்கரேயின் புல்லட் புரூப் ஜாக்கெட்டை குப்பையில் போட்டு விட்டதாக வாக்குமூலம் அளிப்பதற்கு போலீசார் எனக்கு ரூ.50,000 கொடுக்க முன் வந்தனர். வாக்குமூலம் அளித்த பிறகு குற்றப் பிரிவு போலீசார் என்னை வேனில் ஏற்றி அவர்களின் அலுவலகத்துக்கு கொண்டு சென்றனர். அங்கு, ‘புல்லட் புரூப் ஜாக்கெட்டை மறைத்து வைத்து இருக்கிறாயா? அல்லது யாருக்காவது விற்று விட்டாயா?’ என கேட்டனர். உடையை திருப்பி தந்தால் பணம் தருவதாகவும் சொன்னார்கள். யாருக்காவது விற்று இருந்தாலும் எங்களிடம் உண்மையை சொல். அதற்கும் ரூ.50,000 தருகிறோம் என்றனர். ஆனால், அந்த உடையை நான் குப்பையில் போடவில்லை என்று சொன்னேன். அதை ஒரு பிளாஸ்டிக் பையில் போட்டு 4வது வார்டில் வைத்திருந்தேன். அந்த பை என்ன ஆனது என்று தெரியாது" என்று கட்டார் கூறியுள்ளார்.
இந்துத்துவா சக்திகளின் தீவிரவாத நடவடிக்கைகளை விசாரித்து வந்த கர்கரே படுகொலையில் சாட்சிகளின் முன்னுக்குப்பின் முரணான வாக்குமூலங்களை வைத்துப் பார்க்கும்போது அதிகார மட்டத்தில் பெருங்கைகள் பின்னணியில் இருந்து செயல்பட்டிருப்பார்களோ என்ற ஐயம் எழுகிறது.
source:inneram
0 கருத்துகள்: on "கர்காரே படுகொலையில் தொடரும் மர்மங்கள்! மருத்துவமனை துப்புரவு தொழிலாளியின் திடுக்கிடும் தகவல்"
கருத்துரையிடுக