மாஸ்கோ: வடக்கு ஐரோப்பாவில் உள்ள லிதுவானியா நாட்டில் அமெரிக்க சி.ஐ.ஏ ரகசிய சிறைச்சாலைகளை வைத்திருந்தது தெரியவந்துள்ளது. ஆனால் அங்கு மனித உரிமை மீறல்கள் நடந்தனவா என்பது குறித்து தகவல்கள் இல்லை.
அமெரிக்க புலனாய்வுத் துறையான சி.ஐ.ஏ அதிமுக்கிய ரகசிய குற்றவாளிகளை பாதுகாக்கவும், விசாரணை நடத்தவும் சில ரகசிய சிறைகளை வைத்திருத்தது. ருமானியா, போலாந்து ஆகிய இடங்களில் அவை இயங்கியதாகவும், அந்த சிறைகளில் மனித உரிமை மீறல்கள் நடந்ததாகவும் சில மாதங்களுக்கு முன்பு செய்திகள் வெளியாயின.
இந்நிலையில் லிதுவானியா நாடாளுமன்ற கமிட்டி சமீபத்தில் வெளியிட்ட அறிக்கை ஒன்றில் அமெரிக்க சி.ஐ.ஏ.வுக்காக லிதுவானியாவில் இரண்டு ரகசிய சிறைகள் இயங்கி வந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த 2001ம் ஆண்டில் அமெரிக்காவின் உலக வர்த்தக மைய இரட்டை கோபுரங்கள் தாக்கப்பட்ட சம்பவத்துக்கு பின்னர் இவை உருவாக்கப்பட்டதாகவும், 2005, 2006ம் ஆண்டுகளில் சி.ஐ.ஏ விமானங்கள் இங்கு வந்து சென்றதாகவும் கூறப்பட்டுள்ளது.
தலைநகர் வில்நியஸ் அருகே புறநகர் பகுதியில் குதிரை ஓட்டப் பயிற்சி பள்ளி இருந்த இடத்தை சி.ஐ.ஏ தேர்வு செய்து பயன்படுத்தி வந்ததாக தெரிகிறது. 2004 மற்றும் 2005ம் ஆண்டில் விசாரணைக் கைதிகள் அங்கு அழைத்துவரப்பட்டனர். இந்த ரகசிய சிறைகளில் மனித உரிமை மீறல்கள் நடந்திருந்தால், சி.ஐ.ஏ.வுக்கு அனுமதி அளித்த அரசியல் தலைவர்கள் தான் அதற்கு பொறுப்பு என்றும் அந்த அறிக்கை குறிப்பிட்டுள்ளது. ஆனால், சி.ஐ.ஏ என்ன செய்தது என்பதை அதிபர் கூட தெரிந்துகொள்ள வாய்ப்பிருந்திருக்காது என அக்குழுவினர் கூறுகின்றனர்.
thatstamil
0 கருத்துகள்: on "ஐரோப்பாவில் சிஐஏவின் ரகசிய சிறைகள்!"
கருத்துரையிடுக