காபூல்:ஆஃப்கானிஸ்தான் அதிபர் மாளிகை உட்பட அரசு அலுவலகங்களை லட்சியமிட்டு தாலிபான்கள் நடத்திய ஒருங்கிணைந்த தாக்குதலில் 12 பேர் கொல்லப்பட்டனர். ஐம்பதிற்கு மேற்பட்டோருக்கு காயம் ஏற்பட்டுள்ளது.
பாதுகாப்பு மையமாக கருதப்படும் அதிபரின் மாளிகையில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட அமைச்சர்களின் பதவியேற்பு விழா நடைபெற்றுக்கொண்டிருக்கும் வேளையில்தான் சிறிதளவு தூரத்தில் ஆஃப்கான் அரசையும், ஆக்கிரமிப்பு படையினரையும் நடுங்கச்செய்யும் இத்தாக்குதல் நடந்தது.
நேற்று காலை 10 மணிக்கு அதிபர் மாளிகை, சட்டத்துறை அமைச்சகம், மத்திய வங்கி, ஷாப்பிங் மால், சினிமா தியேட்டர் ஆகியவற்றிற்கு அருகிலிலுள்ள பஷ்தூனிஸ்தான் சதுரங்கத்தின் அருகில்தான் முதல் தாக்குதல் நடந்தது.வெடிப்பொருட்களுடன் வந்த போராளி தானாகவே அதனை வெடிக்கச்செய்தார்.அரை கிலோமீட்டர் தூரமேயுள்ள ட்ராஃபிக் சர்க்கிளில் சில நிமிடங்களிலேயே அடுத்த குண்டுவெடிப்பும் நடந்தது. ஆம்புலன்ஸில் வந்த போராளிதான் இந்த தாக்குதலை நடத்தியுள்ளார்.
இத்தாக்குதலில் மத்திய வங்கி, ஐந்து நட்சத்திர ஸெரீனா ஹோட்டல், நிதித்துறை அமைச்சகம் ஆகியன தீக்கிரையாயின. நான்கு போராளிகளும், ஏழு பாதுகாப்பு அதிகாரிகளும் கொல்லப்பட்டவர்களில் அடங்குவர்.காயம் ஏற்பட்டவர்களின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.நிதியமைச்சகத்திற்கு அருகிலிலுள்ள கிராண்ட் ஆஃப்கான் ஷாப்பிங் செண்டருக்கு வந்த போராளிகள் அங்கிருந்த சிவிலியன்களை வெளியேறுமாறு கூறிவிட்டு தாக்குதலை நடத்தியதாக நேரில் கண்ட சாட்சிகளை மேற்க்கோள் காட்டி செய்தி ஏஜன்சிகள் கூறுகின்றன.
ஆஃப்கான் பாதுகாப்பு அதிகாரிகளுடன் ஐந்து மணிநேரத்திற்கு மேலாக போராளிகள் மோதியுள்ளனர்.தாக்குதலைத் தொடர்ந்து காபூல் நகரம் நிசப்தமானது.
தாக்குதலின் பொறுப்பை தாலிபான் ஏற்றுள்ளது. 20 உறுப்பினர்கள் கொண்ட போராளிக்குழுவை காபூலுக்கு அனுப்பியதாக ஸஹீபுல்லாஹ் முஜாஹித் கூறுகிறார். தங்களையும் ஆக்கிரமிப்பு அரசின் அங்கமாக்க அமெரிக்கா நடத்தும் முயற்சிகளுக்கான பதிலடிதான் இது என்று அவர் தெரிவித்தார்.
தாங்கள் போராடத்தயார்.அதற்கான வலு எங்களுக்குள்ளது. தாலிபான்களை விலைக்கு வாங்க அமெரிக்கா மற்றும் சர்வதேச ராணுவத்தினரின் திட்டம். தாங்கள் விற்பனைப்பொருள் அல்ல என்பதை நிரூபிப்பதுதான் இத்தாக்குதலின் நோக்கம் என ஸஹீபுல்லாஹ் மேலும் கூறினார்.
அடுத்த மாதம் லண்டனில் நடக்கவிருக்கும் சர்வதேச மாநாட்டில் தங்களுடைய திறமையை வெளிப்படுத்துவதற்கான கர்ஸாயி அரசின் முயற்சிக்கு கிடைத்த பதிலடியாக இது கருதப்படுகிறது.சாதாரணமாக கிராமப்புறங்களிலேயே தாக்குதல் நடத்திவரும் தாலிபான் தற்ப்போது நகரங்களிலும் தாக்குதலை வலுப்படுத்தியுள்ளதற்கான அடையாளம்தான் இத்தாக்குதல்.
கடந்த பிப்ரவரி மாதம் ஐ.நா விருந்தினர் மாளிகை மீது நடத்தப்பட்ட தாக்குதலில் எட்டுபேர் கொல்லப்பட்டிருந்தனர்.நிலைமைகள் கட்டுப்பாட்டிற்குள் வந்ததாகவும் தாக்குதலைக் குறித்து விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் அதிபர் ஹமீத் கர்ஸாயி அறிவித்தார்.
அமெரிக்கா, பிரிட்டன் உட்பட்ட நாடுகள் இத்தாக்குதலை கண்டித்துள்ளன. காபூலில் இந்தியர்கள் பாதுகாப்பாக உள்ளதாக இந்திய தூதரக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்
0 கருத்துகள்: on "காபூலில் தாக்குதல்:12 பேர் மரணம்"
கருத்துரையிடுக