சித்தூர்: "தெலங்கானா தனி மாநில போராட்டத்தால் ரூ.4,500 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது" என்று ஆந்திர முதல்வர் ரோசய்யா கூறியுள்ளார்.
தெலங்கானா தனி மாநிலம் அமைக்க கோரியும், அதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் ஆந்திராவில் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக போராட்டங்கள் நடந்து வருகின்றன. இதனால், தகவல் தொழில்நுட்பம், திரைப்படம், போக்குவரத்து போன்ற பல்வேறு துறைகள் மூலம் கிடைக்க வேண்டிய வருமானம் பாதிக்கப்பட்டு உள்ளது.
ஆந்திர அரசுக்கு ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடி பற்றி ஐதராபாத்தில் நேற்று முன்தினம் இரவு அமைச்சர்களுடன் முதல்வர் ரோசய்யா அவசர ஆலோசனை நடத்தினார். அப்போது அவர் பேசியதாவது: "நடப்பு ஆண்டு பட்ஜெட்டில் ரூ.10 ஆயிரம் கோடிக்கு மேல் துண்டு விழும். தெலங்கானா பிரச்னையால் முக்கிய துறைகளில் பெருத்த நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதுவரை ரூ.4500 கோடி வரை வருவாய் இழப்பு ஏற்பட்டு உள்ளது. இதனால், ஆந்திர அரசுக்கு மிகுந்த நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதே நிலை நீடித்தால் அரசு ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்க முடியாத நிலை ஏற்படும்.
இந்த நிலையில், அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்கள் சம்பளத்தை உயர்த்த கோரிக்கை விடுத்துள்ளனர். இல்லாவிட்டால் போராட்டத்தில் இறங்குவோம் என எச்சரிக்கை விடுத்துள்ளனர். அரசின் இப்போதைய நிலையை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். நிதி நெருக்கடியை சமாளிக்க, மின்சார பாக்கி, வரி வசூல் போன்றவற்றில் அரசு ஈடு பட வேண்டும்". இவ்வாறு ரோசய்யா கூறினார்.
source:dinakaran
0 கருத்துகள்: on "தெலங்கானா போராட்டத்தால் ரூ.4,500 கோடி இழப்பு ஊழியர்களுக்கு சம்பளம் தர அரசிடம் பணமில்லை"
கருத்துரையிடுக