புதுடெல்லி :வெளிநாடு வாழ் இந்தியர் சங்கத்தின் ஆண்டு விழாவை டெல்லியில் பிரதமர் மன்மோகன் சிங் நேற்று தொடங்கி வைத்து பேசினார். அவர் பேசியதாவது:
நமது பொருளாதார, சமூக வளர்ச்சி மற்றும் அரசியலில் வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் பங்கேற்க வேண்டும். இந்திய தேர்தலில் வாக்களிக்க அவர்கள் ஆசைப்படுவது நியாயமானது தான். அடுத்த பொதுத் தேர்தலில் அவர்களுக்கு வாக்களிக்கும் உரிமை கிடைக்கும் என்று உறுதியாக நம்புகிறேன்.இன்னும் ஒருபடி மேலே சென்று கேட்கிறேன். இந்திய அரசியலிலும், பொது வாழ்விலும் வெளிநாட்டில் வாழும் நீங்கள் ஏன் அதிக அளவில் பங்கேற்கக் கூடாது? ஏனெனில் இந்தியாவில் நீங்கள் அதிக அளவில் தொழில் செய்கிறீர்கள். இந்தியாவை நீங்கள் பழமை கண்ணோட்டத்துடன் பார்க்காதீர்கள். இன்றைய இந்தியாவில் முதலீட்டுக்கு நல்ல வாய்ப்பு உள்ளது.
முதலீடுகளை பெறுவதற்கு இந்தியா தயாராக இல்லை என்று எல்.எல். மிட்டல் போன்ற நல்லெண்ணம் கொண்டவர்கள் கூறினார்கள். அவர்கள் ஏமாற்றம் அடைவதற்கு காரணம், தேசிய வளர்ச்சியில் நாங்கள் எல்லா தரப்பு மக்களையும் அழைத்துச் செல்ல விரும்புகிறோம் என்பது தான். நாங்கள் மெதுவாக செல்லும் யானை என்பது உண்மையாக இருக்கலாம். யானை மெதுவாகச் சென்றாலும் ஆழமாக தடம் பதித்துச் செல்லும். ஒவ்வொரு அடியையும் அளந்து வைக்கிறோம்.
7 சதவீத வளர்ச்சி:
இந்த நாட்டு பிரஜைகள் ஒவ்வொருவரும் தங்களது குரல் அரசால் கேட்கப்படுகிறது என்பதை உணர வேண்டும். அப்போது தான் வளர்ச்சி விரிவடையும். நாட்டு நலனுக்கும் அது தான் ஏற்றது.இதுவரை இல்லாத அளவுக்கு உலக பொருளாதார சிக்கல் ஏற்பட்ட போதிலும், இந்த ஆண்டில் 7 சதவீத வளர்ச்சியை அடைவோம். இது உலகின் வேகமான வளர்ச்சிகளில் ஒன்று. அடுத்த இரண்டு ஆண்டுகளில் 9 முதல் 10 சதவீத ஆண்டு வளர்ச்சி விகிதத்தை அடைந்து விடுவோம் என்ற நம்பிக்கை உள்ளது.
கடந்த இரண்டு ஆண்டுகளில் வேகமான பொருளாதார வளர்ச்சியால் லட்சக்கணக்கான மக்கள் பயன் அடைந்தனர். ஆனால், இன்னும் வேகமான வளர்ச்சி வேண்டும்.நாட்டு மக்களுக்கு கல்வி, சுகாதார வசதிகளையும் பொருளாதார வாய்ப்புகளையும் பெரிய அளவில் வழங்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். இந்த விஷயத்தில் எங்கள் குறிக்கோள் நிறைவேற நீங்கள் உதவ வேண்டும்.
சமூக பாதுகாப்பு திட்டம்:
வெளிநாடுகளில் பணியாற்றும் இந்தியர்களுக்கு ஏற்படும் பொருளாதார பிரச்னைகளை நாங்கள் அறிவோம். அவர்களுக்கு சமூக பாதுகாப்பு அளிப்பதற்கான திட்டம் தயாராகி வருகிறது. கடந்த ஆண்டில் சுவிட்சர்லாந்து, நெதர்லாந்து போன்ற நாடுகளுடன் சமூக பாதுகாப்பு ஒப்பந்தம் செய்து கொண்டோம். இன்னும் பல நாடுகளுடன் இதுபோன்ற ஒப்பந்தம் செய்வதற்காக பேச்சு நடத்தி வருகிறோம். இவ்வாறு பிரதமர் மன்மோகன்சிங் பேசினார்.
விழாவில் 40 நாடுகளைச் சேர்ந்த 1,500க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
source:dinakaran

0 கருத்துகள்: on "வெளிநாடு வாழ் இந்தியர் சங்கத்தின் ஆண்டு விழாவை டெல்லியில் பிரதமர் தொடங்கி வைத்தார். வாக்குரிமை தர நடவடிக்கை"
கருத்துரையிடுக