திருவனந்தபுரம்: பிறப்பு சான்றிதழ் கேட்டு விண்ணப்பித்த 6ம் வகுப்பு மாணவனுக்கு இறப்பு சான்றிதழ் கொடுத்து அதிர்ச்சி அளித்தது திருவனந்தபுரம் மாநகராட்சி.
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை சேர்ந்தவன் முகமது. அங்குள்ள பள்ளியில் 6ம் வகுப்பு படித்து வருகிறான். திருவனந்தபுரத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் 1997ல் இவன் பிறந்தான். அதற்கான பிறப்பு சான்றிதழை வழங்கும்படி திருவனந்தபுரம் மாநகராட்சி அலுவலகத்தில் முகமதுவின் பெற்றோர் சமீபத்தில் விண்ணப்பித்தனர்.
சில நாட்களில் அவனுக்கு சான்றிதழ் கொடுக்கப்பட்டது. அதை பார்த்த முகமதுவின் பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். காரணம், பிறப்பு சான்றிதழுக்கு பதிலாக இறப்பு சான்றிதழ் கொடுக்கப்பட்டு இருந்தது. அதில், முகமது பிறந்ததாக கூறப்பட்டு இருந்த அதே தேதியில் அவன் இறந்ததாகவும், அவனுக்கு எங்கு இறுதிச்சடங்கு நடந்தது என்ற விவரமும் ‘தெளிவாக’ கொடுக்கப்பட்டு இருந்தது.
உடனே, சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் முகமதுவின் பெற்றோர் முறையிட்டனர். ஊழியர்களின் கவனக்குறைவால் தவறு நடந்து விட்டதாக வருத்தம் தெரிவித்த அதிகாரிகள், பிறப்பு சான்றிதழ் கொடுக்க ஏற்பாடு செய்தனர்.
இது பற்றி பிறப்பு, இறப்பு சான்றிதழ் கொடுக்கும் பிரிவின் உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘எங்கள் பிரிவுக்கு தினமும் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் வருகின்றன. அவற்றில் பெரும்பாலானவை பிறப்பு, இறப்பு சான்றிதழ்கள் சம்பந்தப்பட்டவை. எனவே, ஊழியர்களுக்கு அதிக வேலை பளுவும், சான்றிதழ்களை விரைவாக கொடுக்க வேண்டிய நிர்பந்தமும் உள்ளன. அதனால், இந்த தவறு நடந்து இருக்கலாம்’’ என்றார்.
source:dinakaran
0 கருத்துகள்: on "பிறப்பு சான்றிதழ் கேட்ட சிறுவனுக்கு இறப்பு சான்று"
கருத்துரையிடுக