காஷ்மீரில் ப்ரீ பெய்டு செல்போன் சேவைக்கு விதிக்கப்பட்ட தடையை மத்திய அரசு நீக்கியுள்ளது.
ஜம்மு காஷ்மீரில் முறையான தகவல்கள், முகவரி தெரிவிக்காமல் பிரீ பெய்டு இணைப்புகளை தீவிரவாதிகள் பெற்று செல்போன் மூலம் தங்களுக்குள் தகவல்களை பரிமாறிக் கொள்வதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதைத் தொடர்ந்து பாதுகாப்பு காரணங்களுக்காக காஷ்மீரில் பிரீ பெய்டு செல்போன் சேவைக்கு கடந்த ஆண்டு நவம்பர் 1ம் தேதி முதல் மத்திய அரசு தடை விதித்தது. பிரீ பெய்டு சேவையை பயன்படுத்துபவர்கள் போஸ்ட் பெய்டு சேவைக்கு மாற அறிவுறுத்தப்பட்டனர்.
இதனிடையே, மத்திய அரசு விதித்த தடையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் பொது நல வழக்கும் தொடரப்பட்டது. இந்த வழக்கு நிலுவையில் உள்ளது. சமீபத்தில் நடந்த வழக்கு விசாரணையின்போது பாதுகாப்பு காரணங்களுக்காக தடையை நீக்க முடியாது என்று மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம் சமீபத்தில் அளித்த பேட்டியில், ‘செல்போன் சேவை அளிக்கும் நிறுவனங்கள், வாடிக்கையாளர்கள் பற்றிய தகவல்களை 100% உறுதிப்படுத்தும் வகையிலான திட்டத்துடன் வந்தால், தடையை நீக்குவது பற்றி அரசு பரிசீலிக்கும்’’ என்றார்.
இந்நிலையில், காஷ்மீரில் ப்ரீ பெய்டு சேவைக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை மத்திய அரசு நேற்று நீக்கியது. இது உடனடியாக அமலுக்கு வருவதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. பிரீ பெய்டு செல்போன் சேவையை பயன்படுத்தும் வாடிக்கையாளர்களின் முகவரியை சரிபார்க்க செல் போன் சேவை நிறுவனங்கள் உறுதி அளித்தன. இதைத் தொடர்ந்து தடை நீக்கப்பட்டதாக அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.
பிரீ பெய்டு செல்போன் சேவை அளிக்கும் நிறுவனங்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகளை மத்திய அரசு விதித்துள்ளது. பிரீ பெய்டு இணைப்பு பெற விரும்புவோர், மற்றொரு போஸ்ட் பெய்ட் எண் அல்லது பிஎஸ்என்எல் தொலைபேசி எண்ணையோ அளிக்க வேண்டும்.
அவ்வாறு அளிக்காத வரை, வாடிக்கையாளருக்கு பிரீ பெய்டு இணைப்பு அளிக்கக் கூடாது என்று செல்போன் சேவை அளிக்கும் நிறுவனங்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளன.
source:dinakaran
0 கருத்துகள்: on "ப்ரீ பெய்டு செல்போனுக்கு காஷ்மீரில் தடை நீக்கம்"
கருத்துரையிடுக