22 ஜன., 2010

சர்வதேச மருந்து கம்பெனிகளின் ஆதாயத்துக்காகவே, ஸ்வைன் ஃப்ளூ குறித்த அபாய எச்சரிக்கை செயற்கையாக உருவாக்கப்பட்டது! : WHOவிடம் விளக்கம் கேட்கும் இந்தியா

சர்வதேச மருந்து கம்பெனிகளின் ஆதாயத்துக்காகவே, பன்றிக்காய்ச்சல் குறித்த அபாய எச்சரிக்கை செயற்கையாக உருவாக்கப்பட்டது என்ற குற்றச்சாட்டு குறித்து உலக சுகாதார நிறுவனம் விளக்கமளிக்க வேண்டும் என இந்தியா கோரியுள்ளது.

பன்றிக்காய்ச்சலுக்கான ஏ/எச்1என்1 தடுப்பு மருந்துகள் விற்பனை மூலம் மருந்து கம்பெனிகள் கடந்தாண்டில் மட்டும் சுமார் 10 பில்லியன் யூரோ வரை வருவாய் ஈட்டியுள்ளன.

ஜெர்மனி மற்றும் ஏராளமான ஐரோப்பிய நாடுகள், குறைந்த பட்சம் மூன்றில் ஒரு பங்கு மக்கள் தொகைக்கு தேவையான அளவு தடுப்பு மருந்து பெற்றுள்ளன. ஆர்டரை சமாளிக்க முடியாமல் மருந்து தொழிற்சாலைகள் 24 மணிநேரமும் இயங்கி தயாரிப்பு பணிகளை மேற்கொண்டன.

இதெல்லாம் அவசரகால உயிர்காக்கும் நடவடிக்கைகள் அல்ல. சில தனி நபர்களும், குறிப்பிட்ட மருந்து கம்பெனிகளும் இணைந்து நடத்திய ஊழலுக்கான நாடகம் என கடந்த ஆண்டிலேயே டென்மார்க்கில் பரவலாக பேசப்பட்டது.

உலக சுகாதார நிறுவனம் ஏற்கனவே வெளியிட்ட அறிக்கையின் படி, வழக்கமான பருவகால காய்ச்சல் மூலம் ஏற்படும் இறப்பு எண்ணிக்கை ஆண்டுக்கு சுமார் 5 லட்சம். ஆனால், A/ H1N1 தாக்கியதால் கடந்த ஜுலை மாத வாக்கில் பலியானோர் எண்ணிக்கை 6 ஆயிரத்தைக் கூட தாண்டவில்லை.

இந்நிலையில், 'ஸ்வைன் ஃபுளுவுக்கு மட்டும் எப்படி உலக சுகாதார நிறுவனம் இவ்வளவு முக்கியத்துவம் அளித்தது? கடந்த ஜூலை மாதம், அபாய அறிக்கை வெளியிடும் அளவுக்கு நிலைமை இல்லை' என விமர்சிக்கப்பட்டது.

மேலும், அந்த அபாய அறிக்கையில் முகத்தில் மாஸ்க் அணிதல், கைகளை சுத்தமாக கழுவுதல் போன்ற பரிந்துரைகள் இரண்டே இடத்தில் தான் வந்தன. ஆனால், குறிப்பிட்ட மருந்தை உபயோகிக்குமாறு 42 இடங்களில் வலியுறுத்தப்பட்டிருந்தது.

உலக சுகாதார நிறுவன அறிக்கை வெளியான சமயத்தில் எல்லாம் குறிப்பிட்ட மருந்துகளின் சர்வதேச விற்பனை வெகுவாக உயர்ந்திருப்பதும் சுட்டிக்காட்டப்படுகிறது.

உலக சுகாதார நிறுவனத்தில் உள்ள விஞ்ஞானிகளை 'கைக்குள் போட்டுக்கொண்டு' குறிப்பிட்ட சில மருந்து கம்பெனிகள் இந்த உலகமகா ஸ்வைன்ஃபுளூ ஊழலை நடத்துவதாக குற்றம்சாட்டப்பட்டது.

இதற்கிடையே, ஸ்மித் கிலைன் பீச்சம் கிளாக்சோ வெல்கம், ஆர் டபுள்யூ ஜான்சன், ரோக் போன்ற மருந்து தயாரிப்பு நிறுவனங்களில் ஆலோசகர்களாக பணிபுரியும் விஞ்ஞானிகள் உலக சுகாதார நிறுவனத்தில் முக்கிய பொறுப்பில் இருப்பதும் தெரியவந்தது.

இந்நிலையில், ஜெனிவாவில் உலக சுகாதார நிறுவனத்தின் செயற்குழு கூட்டம் புதன்கிழமை நடந்தது. இதில் இந்தியா சார்பில் மத்திய சுகாதாரத் துறை செயலாளர் சுஜாதா ராவ் கலந்துகொண்டார்.

அப்போது, இந்த குற்றச்சாட்டுகள் குறித்து உலக சுகாதார நிறுவனம் தனது விளக்கத்தை கூறி தெளிவுபடுத்த வேண்டும் என வலியுறுத்தினார். 'இதுபோன்ற குற்றச்சாட்டுகளால் பன்றிக்காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகளில் பாதிப்பு ஏற்படுகிறது. நோய் தொடர்பான சமாச்சாரங்களில் உலக சுகாதார நிறுவனத்தின் கருத்தை தான் சர்வதேச மக்கள் நம்புகிறார்கள்.

மருந்து தயாரிப்பாளர்கள் எந்த விதிமுறைகளின் கீழ் சர்வதேச நாடுகளுக்கு சப்ளை செய்கிறார்கள் என்பது போன்ற விவரங்களை மிகவும் வெளிப்படையானதாக ஆக்கவேண்டும், என சுஜாதா குறிப்பிட்டார். இதை ஏற்றுக்கொண்ட உலக சுகாதார நிறுவனம் இவ்விவகாரம் தொடர்பான அனைத்து சந்தேகங்களுக்கும் விரைவில் பதில் அளிக்கப்படும் எனக் கூறியுள்ளது.

இந்தியாவில் கடந்த 18ம் தேதி வரையிலான நிலவரப்படி பன்றிக்காய்ச்சலுக்கு ஆயிரத்து 136 பேர் பலியானார்கள். 9 ஆயிரத்து 600 பேருக்கு நோய் அறிகுறிகள் உறுதிபடுத்தப்பட்டுள்ளன.

சர்வதேச அளவில் 2009 ஏப்ரல் மாதம் முதல் கடந்த 18ம் தேதி வரை மொத்தம் 14 ஆயிரத்து 200 பேர் உயிரிழந்ததாக ஐரோப்பிய நோய் தடுப்பு நிறுவனம் கணித்துள்ளது.

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "சர்வதேச மருந்து கம்பெனிகளின் ஆதாயத்துக்காகவே, ஸ்வைன் ஃப்ளூ குறித்த அபாய எச்சரிக்கை செயற்கையாக உருவாக்கப்பட்டது! : WHOவிடம் விளக்கம் கேட்கும் இந்தியா"

கருத்துரையிடுக