வாஷிங்டன் காஸா மீது நான்கு வருடங்களுக்கும் மேலாக இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு அரசு அமுல்படுத்தி வரும் முற்றுகையை நீக்குவதற்கு இஸ்ரேலை நிர்ப்பந்திக்குமாறு அமெரிக்கக் காங்கிரஸ் உறுப்பினர்கள் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
54 காங்கிரஸ் உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ள ஓர் அறிக்கையில், காஸா மக்களுக்கு எதிராகத் தொடரும் முற்றுகையினால், காஸாவிலுள்ள மக்களின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்யக்கூடிய நிவாரண உதவிகளை வழங்கும் மனிதாபிமானக் குழுக்களின் பணிகள் தடைபட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த செவ்வாய்க்கிழமை (26.01.2010) மேற்படி அறிக்கையில் கையெழுத்திட்ட காங்கிரஸ் உறுப்பினர்கள் ஸவா வானொலி நிகழ்ச்சியில், 'பயங்கரவாதிகளின் நடவடிக்கைகளை மட்டுப்படுத்துதல்' என்ற போர்வையில் காஸாமீது மேற்கொள்ளப்பட்டுவரும் தொடர் முற்றுகையினால் அங்கு வாழும் முழுமொத்த மக்களையும் தண்டித்தல் எந்தவகையிலும் நியாயமாகாது என்று தெரிவித்துள்ளனர்.
மேற்படி அறிக்கையில் பல்வேறு மனித உரிமைகள் ஊழியர்களும் நிவாரண நடவடிக்கை ஊழியர்களும் கையெழுத்திட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
காஸா மீதான இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு யுத்தத்தினால் பாதிப்புக்குள்ளான காஸாவின் புனர்நிர்மாணப் பணிகளுக்காக 300 மில்லியன் அமெரிக்க டாலர்களை ஒதுக்கப்போவதாக அறிவித்த பராக் ஒபாமாவின் தீர்மானத்துக்கு மேற்படி அறிக்கையில் பாராட்டும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
source:PIC
0 கருத்துகள்: on "காஸா முற்றுகையை நீக்க இஸ்ரேலை நிர்ப்பந்திக்குமாறு அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்கள் கோரிக்கை"
கருத்துரையிடுக