கடையநல்லூரில் பரவிவரும் மர்மக் காய்ச்சலுக்கு காரணமான கிருமி குறித்த அறிக்கை நாளை (வியாழன்) வெளியாகும் என்று மதுரை மத்திய ஆராய்ச்சிக்கழக இயக்குநர் தியாகி தெரிவித்துள்ளார்.
கடையநல்லூர் பகுதியில் கடந்த 25 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இந்த ஆண்டு வடகிழக்கு பருவ மழைக்கு பின் மர்மக் காய்ச்சல் பரவியது. கடந்த மூன்று மாதங்களாக மக்களை வாட்டி வதைக்கும் இந்த மர்மக் காய்ச்சலுக்கு இதுவரை 23 பேர் பலியாயினர். ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டனர்.
சிக்குன்குனியா, டெங்கு, டைபாய்டு போன்ற காய்ச்சலின் அறிகுறிகளோடு பரவிய இந்த காய்ச்சல் குறித்து கண்டறிய இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம், இந்திய தொற்றுநோய் ஆராய்ச்சிக்கழகம் மற்றும் நுண்ணுயிரியல் ஆராய்ச்சிக் கழகம் உட்பட பல்வேறு துறையைச் சேர்ந்தவர்கள் கடையநல்லூர் பகுதிக்கு வந்து ரத்த மாதிரிகள் எடுத்து மதுரை, சென்னை, பெங்களூர், புனே போன்ற பகுதிகளில் உள்ள உயிர் தொழில்நுட்ப பரிசோதனைக் கூடத்திற்கு அனுப்பினர்.
ஆனால் இதுவரை நோயை பரப்பும் வைரஸ் கிருமி குறித்து கண்டறியப்படாததால் காய்ச்சலால் பாதிக்கப்படுவோருக்கு தகுந்த சிகிச்சை அளிக்க முடியாத சூழ்நிலை உள்ளது. இந்த காய்ச்சலால் பாதிக்கப்படுவோருக்கு கை, கால் மூட்டு வழியோடு நடக்க முடியாத சூழ்நிலை ஏற்படுகிறது. நூற்றுக்கணக்கானோர் நடக்க முடியாமல் வீட்டுக்குள்ளேயே நடைபிணமாக வாழ்க்கையை நகர்த்துகின்றனர். இந்த நோயால் பாதிக்கப்படுவோர், ரத்தத்தில் வெள்ளை அணுக்கள் குறைந்து வருவதால் பலர் ஆபத்தான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதுபோன்ற ரத்த அளவு குறைந்த நூற்றுக்கணக்கானோர் நெல்லையிலுள்ள பல தனியார் மருத்து வமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சைக்காக ஏராளமாக செலவு செய்து ஊர் திரும்பியுள்ளனர்.
கடந்த ஆண்டு இதே சீசனில் பரவிய காய்ச்சலுக்கும் 5 பேர் பலியாயினர். ஆனால் நகராட்சி நிர்வாகம் தொடர்ந்து பாதுகாக்கப்பட்ட குடிநீர் மற்றும் துப்புரவுப் பணிகளை மேம்படுத்தாததால் தான் இந்த ஆண்டு மர்மக் காய்ச்சல் பரவியதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
கடையநல்லூரில் உள்ள 33 வார்டுகளில் 11 வார்டுகளின் துப்புரவுபணிகள் தனி யார் வசம் உள்ளது. ஆனால் தனியார்கள் சரிவர துப்புரவுப் பணிகளை மேற்கொள்ளாததால் பல இடங்களில் சாக்கடை நிரம்பி வழிவதோடு குப்பைகள் மலையாய் குவிந்து வருகின்றன. திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் மூலம் 50 லட்சம் செலவில் ஊருக்கு வெளியே நவீன உரக்கிடங்கு அமைத்த போதிலும் குப்பைகளை அங்கு கொண்டு செல்ல நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை. நகராட்சியின் பல பகுதிகளை பொதுமக்கள் திறந்தவெளி கழிப்பிடமாக பயன்படுத்துவதாலும், ஷெப்டிக் டேங்க் அமைக்காமல் மனிதக் கழிவுகள் வாய்க்காலில் விடப்படுவதாலும் சுகாதார சீர்கேடு அதிகரிக்கிறது.
இந்நிலையில் கடையநல்லூர் பகுதியில் மதுரை இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் மற்றும் தேசிய தொற்றுநோய் ஆராய்ச்சிக்கழகம் ஆகியவை மேற்கொண்ட ஆய்வு, இறுதிக்கட்டத்தை எட்டி விட்டதாகவும், அந்த ஆராய்ச்சியின் அறிக்கை பெங்களூர் தேசிய பரிசோதனைக் கூடத்திற்கு அனுப்பப்பட்டதாகவும் நாளை (வியாழன்) இந்த அறிக்கை வெளியாகும் என்றும் மதுரை மத்திய ஆராய்ச்சிக்கழக டைரக்டர் தியாகி கூறியுள்ளார்.
அதன் பின்பு தான் கடையநல்லூர் பகுதியில் பரவிவரும் மர்மக் காய்ச்சலை ஏற்படுத்தும் கிருமி கண்டறியப்பட்டு அதை அடியோடு ஒழிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிகிறது. எனவே பொதுமக்கள் இந்த அறிக்கை குறித்து மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர்.
source:dinakaran
0 கருத்துகள்: on "கடையநல்லூரில் மர்மக் காய்ச்சலை பரப்பும் வைரஸ் எது? நாளை அறிக்கை வெளியாகும்: ஆராய்ச்சிக்கழக இயக்குநர் தகவல்"
கருத்துரையிடுக