மும்பை மாணவர்களில் அதிகம் பேர் மனஅழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், ஒரே வாரத்தில் 9 மாணவர்கள் தற்கொலை செய்துள்ளனர். இதைத் தடுக்க மாணவர்களிடம் ஆய்வு நடத்த மனநல மருத்துவர்கள் முடிவு செய்துள்ளனர்.
மும்பையில் கடந்த ஒரு வார காலத்தில் 9 மாணவர்கள் தற்கொலை செய்துள்ளது அனைவரையும் அதிர்ச்சியடையச் செய்துள்ளது.
சிறு வயதில் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டதால்தான் அவர்கள் தற்கொலைக்கு தூண்டப்பட்டுள்ளதாக உளவியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இது பற்றி ஜஸ்லோக் மருத்துவமனை மனநோய் மருத்துவ பிரிவு இயக்குனர் ராஜேஷ் பாரிக் கூறுகையில், ‘‘உலகிலேயே தற்கொலை செய்து கொள்பவர்கள் எண்ணிக்கையில் சீனாவுக்கு அடுத்தபடியாக இந்தியா உள்ளது.
இந்தியாவில் தினமும் 100 பேர் தற்கொலை செய்கின்றனர். இதில் 40 சதவீதம் பேர் 13 வயது முதல் 17 வயது வரை உள்ளவர்கள் என்று புள்ளி விவரம் தெரிவிக்கிறது. இன்றைய மாணவர்களுக்கு மனஅழுத்தம் மிகவும் அதிகமாக உள்ளது. இன்டர்நெட் மற்றும் அதில் உள்ள டுவீட்டர், பேஸ்புக் போன்ற இணைய தளங்களை பயன்படுத்துவது, தேர்வில் அதிக மதிப்பெண் பெற வேண்டும் என்ற நெருக்கடி காரணமாக மாணவர்கள் மனஅழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவே தற்கொலைக்கு காரணமாக அமைந்துவிடுகிறது’’ என்றார்.
மும்பை மாணவர்களில் 16 சதவீதம் பேர் மனஅழுத்தத்தில் பாதிக்கப்பட்டுள்ளதாக 10 ஆண்டுக்கு முன் நடத்திய ஆய்வின் முடிவு தெரிவிக்கிறது. இதனால், மீண்டும் ஒரு முறை ஆய்வு நடத்த மனநோய் சிகிச்சை மருத்துவர்கள் முடிவு செய்துள்ளனர்.
இதற்காக கல்லூரி, பள்ளிகளுக்குச் மனநோய் சிகிச்சை மருத்துவர்கள் சென்று மாணவர்களை சந்திக்க உள்ளனர். தற்கொலை செய்து கொள்ளும் மாணவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் அதிர்ச்சி அடைந்துள்ள மும்பை மாநகராட்சி நிர்வாகம், இதை தடுப்பது குறித்து மூத்த மனநோய் சிகிச்சை மருத்துவர்களுடன் ஆய்வு நடத்த உள்ளது.
source:dinakaran
0 கருத்துகள்: on "மனஅழுத்தத்தால் மாணவர்கள் பாதிப்பு"
கருத்துரையிடுக