16 ஜன., 2010

'அவதார் இன் இண்டியா' கதையல்ல நிஜம்

உலகம் முழுக்க 'அவதார்’ மெகா ஹிட். பண்டோரா கிரகத்து வளத்தைக் கொள்ளையடிக்கச் செல்லும் மனிதர்களை எதிர்க்கிறார்கள் அந்தக் கிரக வாசிகளான நவிக்கள். மனிதர்களை எதிர்க்கும் நவிக்களுக்காக உலகமே பரிதாபப்பட்டு கண்ணீர் சிந்துகிறது. ஆனால், நிஜத்தில் 'அவதார்’ படத்தைக் காட்டிலும் கொடூரங்கள் அரங்கேறிக்கொண்டே இருக்கின்றன இந்தியாவில். அரங்கேற்றுவது இந்திய அரசாங்கம்! கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகளாக ஓர் உள்நாட்டு யுத்தம் நடந்துகொண்டு இருக்கிறது இங்கே. 644 கிராமங்களை எரித்து சுமார் 70 ஆயிரம் மக்களை முகாம்களில் அடைத்து, மூன்று லட்சத்துக்கும் அதிகமான பழங்குடி மக்களைக் காடுகளுக்குள் துரத்தி அடித்திருக்கிறோம். அந்த பாவப்பட்ட மக்களின் போராட்டத்தை ஒடுக்குவதற்காகச் சுமார் இரண்டரை லட்சம் ராணுவத்தினர் இறக்கிவிடப்பட்டுள்ளனர். (ஆப்கன் போரின்போதுகூட 50 ஆயிரம் படையி னரைத்தான் இறக்கியது அமெரிக்கா!).

கொலைகள், கற்பழிப்புகள், அத்துமீறல்கள், துப்பாக்கிச் சூடுகள் என இவை அனைத்துக்கும் இந்திய அரசு வைத்திருக்கும் பெயர் 'ஆபரேஷன் பசுமை வேட்டை' (Operation green hunt) . என்னதான் பிரச்னை?

ஜார்கண்ட், சட்டீஸ்கர், ஒரிஸ்ஸா, மத்தியப் பிரதேசம், மேற்கு வங்கம் உள்ளிட்ட மத்திய இந்திய மாநிலங்களின் எல்லைகளைத் தொட்டுச் செல்லும் தண்டகாரண்யா காட்டுப் பகுதி முழுக்க பாக்ஸைட், நிலக்கரி, தங்கம், வைரம், கிரானைட், இரும்புத் தாது என ஏராளமான தாதுப்பொருட்கள் நிறைந்திருக் கின்றன. பல லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள இந்தத் தாதுக்களை வெட்டி எடுப்பதற்கு ஒட்டுமொத்த மலைப் பகுதியையும் குத்தகைக்கு எடுக்க மெகா நிறுவனங்கள் துடிக்கின்றன.
'வேதாந்தா’ என்ற பன்னாட்டு நிறுவனத்துக்கு ஒரிஸ்ஸா அரசு குத்த கைக்கு அளித்துள்ள மலையில் கொட்டிக்கிடக்கும் பாக்ஸைட் தாதுக்களின் மதிப்பு 200 லட்சம் கோடி ரூபாய். ஆனால், இதற்காக இந்திய அரசுக்கு அந் நிறுவனம் அளிக்கும் ராயல்டி தொகை வெறும் 7 சதவிகிதம். உலகச் சந்தையில் 10 ஆயிரம் ரூபாய் விலை போகும் ஒரு டன் இரும்புத் தாதுவை ஜிண்டால், எஸ்ஸார் போன்ற நிறுவனங்களுக்கு வெறும் 27 ரூபாய்க்குத் தருகிறது அரசு.
இந்த சுற்றுச்சூழல் சுரண்டல்களை எதிர்க்காமல், 'சரிங்க எஜமான்’ என மண்ணின் பூர்வகுடிகள் அடி பணிந்து சென்றிருந்தால், எந்தப் பிரச்னையும்இல்லை. ஆனால், அந்தப் பழங்குடி மக்கள் வீரத்தோடு எதிர்த்துப் போரிடத் தொடங்கவே பிரச்னை விஸ்வரூபம் எடுத்தது.


பழங்குடியினருக்கு ஆதரவாக மாவோயிஸ்ட்டுகள் ஆயுதங்களைப் பிரயோகித்தனர். உடனே, இரு தரப்பினரையும் 'உள்நாட்டுப் பாதுகாப்புக்கு எதிரான சக்திகள்’ என்று வரையறுத்தது அரசு. வெடித்தது யுத்தம். 7,300 கோடி ரூபாய் செலவில் 'உள்நாட்டுப் பாதுகாப்பு’ என்ற பெயரில் இந்தப் போர் நடத்தப் பட்டாலும், உண்மையாக இந்த யுத்தம் யாருக்காக நடத்தப்படுகிறது என்பதைச் சில மாதங்களுக்கு முன் பிரதமர் மன்மோகன் சிங், நாடாளுமன்றத்திலேயே பகிரங்கமாக அறிவித்தார்.


'நாட்டின் கனிம வளம் மிகுந்திருக்கும் பகுதிகளில் இடதுசாரித் தீவிரவாதம் தலைதூக்குவது, முதலீட்டுச் சூழலைப் பாதிக்கும்!’ என்பது பிரதமர் வாக்கு. 2004&ம் ஆண்டிலேயே பழங்குடி மக்களின் போராட்டங்களை நசுக்க 'சல்வா ஜூடும்’ என்ற பெயரில் கூலிப் படை ஒன்றை உருவாக்கியது சட்டீஸ்கர் அரசு.


'அன்அஃபீஷியலா’க அரசிடம் சம்பளம் பெறும் இவர்களும் பழங்குடிமக்கள் தான். மலையின் இண்டு இடுக்குகளும் மக்களின் பழக்கவழக்கங்களும் இவர்களுக்குத் தெரியும் என்பதால், இவர்களைவைத்தே பழங்குடி மக்களைக் காடுகளுக்குள் விரட்டுகிறது ராணுவம். இந்த அரசக் கூலிப் படை மூன்று வயது பிஞ்சுக் குழந்தையின் விரல்களை வெட்டுவது, 70 வயது மூதாட்டியின் மார்பகங்களை அறுத்துக் கொலை செய்வது என அரக்கத்தனமாகச் செயல்படுகிறது.


இலங்கை முள்வேலி முகாம்களில் வாழும் தமிழ் மக்களைப் போலவே சட்டீஸ்கரில் சுமார் 70 ஆயிரம் பழங்குடிகள் முகாம்களில் அடைக்கப்பட்டுள்ளனர். சட்டீஸ்கர் மாநில டி.ஜி.பி. விஸ்வரஞ்சன், 'இலங்கை ராணுவத்தின் இறுதி வெற்றிதான் எங்கள் வழிகாட்டி’ என்று அறிவித்திருக்கிறார். 'அரசாங்கம் ஒரு சாலை அமைத்தால், உடனே அதை மாவோயிஸ்ட்டுகள் குண்டுவைத்துத் தகர்த்துவிடுகிறார்கள். பிறகு எப்படி வளர்ச்சித் திட்டங்களை அமல்படுத்துவது?’ என்று கேட்கிறார் மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம். ஆனால், 'அந்தச் சாலை, மக்களுக்காக அல்லாமல் நிறுவனங்களின் வசதிக்காக அமைக்கப்பட்டால், அதை அழிப்பதில் என்ன தவறு?’ என்று கொதித்துஎழுகிறார்கள் மாவோயிஸ்ட்டுகள்.


மத்திய இந்தியாவின் பழங்குடி மக்கள், தங்களின் இயற்கை வளங்களைப் பன்னாட்டு நிறுவனங்கள் கொள்ளையடிக்க அனுமதிக்க மாட்டோம் என்று எதிர்த்து நிற்கிறார்கள். 'மக்கள் நல அரசு’ என்று தன்னை அறிவித்துக்கொண்ட இந்திய அரசு, தன் சொந்த மக்களுக்கு ஆதரவாகத்தானே நிற்க வேண்டும்? எந்த மக்களுக்கு நல்லது செய்யக் காத்திருக்கிறது இந்த அரசு?
source :ஆனந்த விகடன்


Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "'அவதார் இன் இண்டியா' கதையல்ல நிஜம்"

கருத்துரையிடுக