மலப்புறம்:சவூதி அரேபியாவில் வேலைப்பார்த்த இடத்தில் மாதக்கணக்கில் துன்பங்களால் துயருற்ற கேரள மாநிலம் நிலம்பூரைச் சார்ந்த சுரேந்திரன் நாடு திரும்பினார்.
சவூதி தலைநகரான ரியாதிலிருந்து 1300 கிலோமீட்டர் தூரத்திலிலுள்ள தபர்ஜல் என்ற இடத்தில் சிக்கி தவித்த இவ்விளைஞரை இந்தியா ஃபெடர்னிடி ஃபாரம் உறுப்பினர்களின் தொடர் முயற்சியின் காரணமாக விடுவிக்க முடிந்தது.
வேலைப் பார்க்கும் இடத்தில் அவதியுற்ற சுரேந்திரனை ஊருக்கு அழைத்துவரக்கோரி அவருடைய தாயார் கவுசல்யாவும், மனைவி ரம்யாவும் சில மாதங்களுக்கு முன்பு பத்திரிகையாளர் சந்திப்பில் கூறியிருந்தனர்.
கோழிக்கோட்டிலுள்ள ஒரு டிராவல்ஸில் 90 ஆயிரம் ரூபாய்க்கு விசாவை பெற்ற சுரேந்திரனுக்கு வேலை தபர்ஜலில் ஒரு ஹோலோ ப்ரிக்ஸ் தொழிற்சாலையில். கடந்த ஆண்டு ஜனவரி 13 ஆம் தேதி கனவுகளுடன் தபர்ஜல் தொழிற்சாலையில் வேலைப்பார்க்க சென்ற சுரேந்திரனுக்கு காத்திருந்தது கடும் துயர்களாகயிருந்தது.
இதே தொழிற்சாலையில் வேலைப்பார்த்த ரதீஷ் என்பவர் கடுமையாக அவதியின் காரணமாக சொந்த ஊருக்குச் சென்ற பிறகுதான் இவ்விஷயத்தை அறிந்த சுரேந்திரன் குடும்பத்தினர் பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தினர். பின்னர் இந்திய தூதரகம் நடத்திய விசாரணையில் சுரேந்திரன் சிறையில்லை என்றாலும் மனரீதியாகவும், உடல்ரீதியாகவும் துன்பத்திற்குள்ளாக்கப்படுவது தெளிவானது.
கொடும் சூட்டில் ஹோலோப்ரிக்ஸ் கம்பெனியில் தொழிலாளி வேலை. வெள்ளிக்கிழமைக்கூட விடுமுறைக் கிடையாது. மாதக்கணக்கில் சம்பளம் வேறு கிடைக்கவில்லை.வாகனத்தின் டயர் பஞ்சரானால் கூட 100 ரியாலை சம்பளத்திலிருந்து கழிப்பார்கள். இகாமாவும்(அடையாள அட்டை), பாஸ்போர்ட்டும் ஸ்பான்சரின் கையில். இந்நிலையில்தான் இந்தியா ஃபெடர்னிடி ஃபாரத்தின் செயல்வீரர்கள் இந்திய தூதரகத்திலிருந்து சுரேந்தனுக்கு உதவுவதற்கான உத்தரவைப் பெற்றப் பின் தபர்ஜலிலிருந்து 150 கிலோமீட்டர் தொலைவிலிலுள்ள கரியாத் என்ற இடத்திற்கு சுரேந்திரனை அழைத்துச்சென்று லேபர் ஆபீசில் புகார் கொடுக்கச் செய்தனர்.
பல முறை லேபர் ஆபிசிலிருந்து அழைப்பு வந்த பிறகும் ஸ்பான்சர் ஆஜராகவில்லை, பின்னர் சுரேந்திரனை காணவில்லை என்று ஸ்பான்சர் புகார் அளித்தார். சட்ட நடவடிக்கைகள் மேற்க்கொண்டால் காலதாமதம் ஏற்படும் என்பதை உணர்ந்து ஃபெடர்னிடி ஃபாரம் உறுப்பினர்கள் சுரேந்திரனின் ஸ்பான்சரோடு பேச்சுவார்த்தை நடத்தி பாஸ்போர்ட்டையும், இகாமாவையும் பெற்றனர்.
இதனைத் தொடர்ந்து ரியாதிலிருந்து மும்பை வழி தனது சொந்த ஊருக்கு திரும்பினார் சுரேந்திரன். தேஜஸ் பத்திரிகைக்கு பேட்டியளிக்கும் போது தம்மாமில் பணியாற்றும் பத்திரிகையாளரான ஹாரிஸும், பல்வேறு இடங்களில் பணிபுரியும் ஃபெடர்னிடி ஃபாரம் ஊழியர்களும் தான் சொந்த ஊருக்கு திரும்பி வர உதவியதாக கூறினார். ஃபெடர்னிடி உறுப்பினர்களின் உதவி மறக்க முடியாதது என்றும் சுரேந்திரன் தெரிவித்தார்.
0 கருத்துகள்: on "சவூதியில் துன்பங்களால் துயருற்ற சுரேந்திரன் ஃப்ரடெர்னிடி ஃபாரத்தின் உதவியினால் நாடு திரும்பினார்"
கருத்துரையிடுக