13 ஜன., 2010

ஹைத்தியில் பயங்கர நிலநடுக்கம்-அதிபர் மாளிகை சேதம்

வாஷிங்டன்: கரீபியன் தீவு நாடான ஹைத்தியில் இன்று காலை 7.3 ரிக்டர் அளவிலான கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது. அந்நாட்டின் அதிபர் மாளிகை, ஐ.நா.அலுவலகம், அரசு அலுவலகங்கள் மற்றும் மருத்துவமனைகள் சேதமடைந்தன.
ஏராளமானோர் இடிபாடுகளில் சிக்கி இறந்திருக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. பல இடங்களில் மக்கள் இடிபாடுகளில் சிக்கி அபயக்குரல் எழுப்பி வருவதாக தகவல்கள் வெளியாகின்றன.

மிகப்பெரிய பேரழிவு ஏற்பட்டிருப்பதாக கூறப்பட்டாலும் உயிர் சேதம் குறித்த தகவல்கள் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை. மீட்புப் படையினர் முழு வீச்சில் செயல்பட்டு வருகின்றனர்.

அமெரிக்காவுக்கு கிழக்கே உள்ள தீவு நாடான ஹைத்தியை உலுக்கியுள்ள இந்த நலநடுக்கம், அருகில் இருக்கும் கியூபாவின் சான்டியாகோ உள்ளிட்ட பகுதிகளிலும் உணரப்பட்டுள்ளது.

நிலநடுக்கத்திற்கு பின்பு சுனாமி ஏற்படக்கூடும் என்ற அச்சத்தில் கியூபாவின் பராக்கோ நகரில் கடலோர பகுதியில் உள்ளவர்கள் கட்டிடங்களை காலி செய்து வெளியேற தொடங்கினர்.

ஹைத்தி தலைநகர் போர்டாபிரின்ஸ் நகரில் இருந்து தென்மேற்கே 15 கி.மீ தொலைவை மையமாகக் கொண்ட இந்த நிலநடுக்கம் இந்திய நேரப்படி அதிகாலை 3.23க்கு ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையத்தகவலில் கூறப்பட்டுள்ளது.

ஏழை நாடாக அறியப்படும் ஹைத்தியில் இதுவரையில்லாத அளவுக்கு நிலநடுக்கம் ஏற்பட்டு ஏராளமான மக்கள் வீடுகளை இழந்துள்ள நிலையில், பல்வேறு நாடுகளும் நிதிஉதவிகளை வழங்க முன்வந்துள்ளன.

தற்போதைய சூழலில் எந்த விதமான ஆதரவு அளிக்கவும் தயாராக இருப்பதாக அமெரிக்க அதிபர் ஒபாமா அறிவித்துள்ளார். மேலும் பிரான்ஸ், கனடா, பிரேசில் உள்ளிட்ட நாடுகளும் உதவிகள் வழங்க முன்வந்துள்ளன.
இந்தியர்கள்.?
ஹைத்தியில் ஐ.நா அமைதிக் குழு அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இதில் 100க்கும் மேற்பட்ட இந்தியர்கள் பணிபுரிவதாகவும் கூறப்படுகிறது.

ஹைத்தியில் இந்தியர் விவகாரங்களை கவனிக்கும் கியூபாவில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் நிலநடுக்கத்தால் இந்தியர்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து விசாரித்து வருகின்றனர்.
thatstamil

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "ஹைத்தியில் பயங்கர நிலநடுக்கம்-அதிபர் மாளிகை சேதம்"

கருத்துரையிடுக