மேற்கு மிட்னாப்பூர்(சில்தா): மேற்கு வங்கத்தில் துணை ராணுவ முகாம்கள் மீது மாவோயிஸ்டுகள் திடீர் தாக்குதல் நடத்தி 24 பேரை கொன்றனர். கண்ணிவெடி தாக்குதல் நடத்தப்பட்டதில் 9 துணை ராணுவப் படையினர் உயிருடன் எரிந்து இறந்தனர். துணை ராணுவப்படை நடத்திய பதிலடி தாக்குதலில் 2 மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டனர்.
ஜார்கண்ட், சட்டீஸ்கர், ஒரிசா, பீகார், மகாராஷ்டிரா, ஆந்திரா, மேற்கு வங்கம் உட்பட பத்துக்கும் மேற்பட்ட மாநிலங்களில் மாவோயிஸ்டுகளின் செயல்பாடு அதிகமாக உள்ளது. இவர்களும் அதிநவீன ஆயுதங்கள், வெடிகுண்டுகளை பயன்படுத்த தொடங்கி உள்ளனர். இதையடுத்து, மாவோயிஸ்டுகளுக்கு எதிராக நடவடிக்கையை மத்திய மற்றும் மாநில அரசுகள் தீவிரப்படுத்தி இருக்கின்றன. கூட்டு அதிரடிப்படைகள் அமைக்கப்பட்டு அவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. இதனால், மாவோயிஸ்டுகள் ஆத்திரத்தில் உள்ளனர்.
மேற்கு வங்க மாநிலம் மேற்கு மிட்னாபூர் மாவட்டத்தில் மாவோயிஸ்டுகளின் ஆதிக்கம் அதிகமாக உள்ளது. இந்த பகுதியில் துணை ராணுவப் படையினர் பல்வேறு இடங்களில் முகாமிட்டு, மாவோயிஸ்டுகளுக்கு எதிராக தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
சில்தா என்ற இடத்தில் 2 துணை ராணுவப்படை முகாம்கள் உள்ளன. இவற்றில் 50க்கும் மேற்பட்ட துணை ராணுவப்படையினர் தங்கியுள்ளனர். நேற்று மாலை 5 மணியளவில் இந்த முகாம்களில் துணை ராணுவப் படையினர் ஓய்வு எடுத்துக் கொண்டு இருந்தனர். 11 வீரர்கள் மாலை உணவு தயாரிப்பதில் ஈடுபட்டு இருந்தனர்.அப்போது, 25 மோட்டார் சைக்கிள்களில் வந்த மாவோயிஸ்டுகள் துணை ராணுவப்படை முகாம் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதை சற்றும் எதிர்பாராததால் துணைராணுவப்படையினர் நிலை குலைந்தனர். அவர்கள் சுதாரித்துக் கொண்டு பதிலடி கொடுக்கும் முன்பாக, 11 துணை ராணுவப் படையினர் சுட்டுக் கொல்லப்பட்டனர். மேலும்,முகாம்கள் மீது மாவோயிஸ்டுகள் கண்ணிவெடி தாக்குதல் நடத்தியதால் முகாம்கள் தீப்பிடித்தன. அதில், 9 துணை ராணுவப் படையினர் உயிருடன் எரிந்து இறந்தனர். துணை ராணுவப் படையினருக்கும் மாவோயிஸ்டுகளுக்கும் 45 நிமிடங்களுக்கு மேலாக நீடித்த துப்பாக்கிச் சண்டையில் 2 மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டனர். பின்னர், மாவோயிஸ்டுகள் தப்பிச் சென்றனர்.
சம்பவம் நடந்த இடத்துக்கு கூடுதல் போலீஸ் படை விரைந்துள்ளது. அந்த பகுதியில் தீவிர தேடுதல் வேட்டை நடத்தப்படுகிறது. இந்த சம்பவத்தால் மேற்கு வங்கத்தில் பதற்றம் நிலவுகிறது.
துணை ராணுவப் படையினர் மீதான தாக்குதலுக்கான பொறுப்பை தாங்கள் ஏற்றுக்கொள்வதாக மாவோயிஸ்டுகளின் தலைவர் கிஷன்ஜி அறிவித்துள்ளார். தங்களுக்கெதிரான ராணுவ நடவடிக்கையை நிறுத்தினால் அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாக அவர் தெரிவித்தார். தாக்குதலை நிறுத்தினால்தான் மாவோயிஸ்டுகளுடனான பேச்சு வார்த்தைக்கு சாத்தியம் என மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் கூறிக்கொண்டிருக்கிறார். அது நடக்காது, தங்களுக்கெதிரான ஒருங்கிணைந்த ராணுவ நடவடிக்கையை நிறுத்தினால் 24 மணிநேரத்திற்குள் தாக்குதலை நிறுத்த தாங்கள் தயார் என்றும் கிஷன்ஜி தெரிவித்தார்.
யார் தாக்குதலை துவங்கினார்களோ அவர்கள் தான் அதனை நிறுத்தவேண்டும், இல்லாவிட்டால் இதைப்போன்ற தாக்குதல்கள் தொடரும் என அவர் கூறினார்.
முப்பது துணை ராணுவப் படையினரைக் கொன்றதாகவும், ஏ.கே.47 உள்பட பல ஆயுதங்களை கைப்பற்றியதாகவும் அவர் தெரிவித்தார்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்
0 கருத்துகள்: on "மாவோயிஸ்டுகள் தாக்குதலில் 24 துணை ராணுவப் படையினர் மரணம்"
கருத்துரையிடுக