2 பிப்., 2010

மகாராஷ்டிராவில் வட இந்தியர்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற ஆர்.எஸ்.எஸ்ஸின் கூற்றுக்கு பாஜக ஆதரவு சிவசேனா கொதிப்பு

ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத், மகாராஷ்டிராவில் வட இந்தியர்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்று கூறியதில் எந்தத் தவறும் இல்லை என்று பாஜக கூறியுள்ளது.

ஆர்.எஸ்.எஸ்., சிவசேனா இடையே சண்டை மூண்டுள்ளதால் பாஜகவின் மண்டை காயத் தொடங்கியுள்ளது.

இதுகுறித்து சாம்னாவில் கட்சியின் செயல் தலைவர் உத்தவ் தாக்கரே எழுதியுள்ள கட்டுரையில், மும்பை தொடர்பான விவகாரங்களில் ஆர்.எஸ்.எஸ். தலையிடாமல் ஒதுங்கியிருக்க வேண்டும். மும்பை தொடர்பான எந்த விஷயத்திலும் அது கருத்து தெரிவிக்கக் கூடாது. இந்த நகரம், மகாராஷ்டிராவுக்கும், மராத்தி மக்களுக்கும் மட்டுமே சொந்தமானது.

இந்தியைக் காக்க வேண்டும் என்று ஆர்.எஸ்.எஸ். விரும்பினால், முதலில் தென்னிந்தியாவில் போய் அதைச் செய்யட்டும் என்று கூறியுள்ளார்.

ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் ஞாயிற்றுக்கிழமை பேசுகையில், மகாராஷ்டிராவில் வசிக்கும் வட இந்தியர்களுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்திருந்தார். மேலும், தங்களது அமைப்பினர், மகாராஷ்டிராவில் வசிக்கும் வட இந்தியர்களுக்குப் பாதுகாப்பாக இருக்க வேண்டும் எனவும் அவர் அழைப்பு விடுத்திருந்தார்.

மேலும், இந்தியா அனைத்து இந்தியர்களுக்கும் பொதுவானது. இந்தியாவின் எந்தப் பகுதியிலும் வசிக்கும் உரிமை இந்தியர்களுக்கு உண்டு. மொழி, ஜாதி, துணை ஜாதி, கோஷ்டி, பழங்குடியினர் என்று பேதங்கள் இருக்கலாம். ஆனால் அனைவரும் இந்தியாவின் புதல்வர்கள் என்று கூறியிருந்தார் பகவத்.

பகவத்தின் அழைப்பை ஏற்று, மகாராஷ்டிராவில் வசிக்கும் வட இந்தியர்களுக்கு ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள் பாதுகாப்பு அளிப்பார்கள் என்று உள்ளூர் ஆர்.எஸ்.எஸ். தலைவர் ராம் மாதவ் ஜபல்பூரில் கூறியிருந்தார். இதுதான் தற்போது சிவசேனாவை கோபப்படுத்தியுள்ளது.

ஆர்.எஸ்.எஸ்ஸுக்கும், சிவசேனாவுக்கும் இடையே ஏற்பட்டுள்ள இந்த திடீர் மோதலால் கூட்டாளிக் கட்சியான பாஜகவுக்கு தர்மசங்கடம் ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து பாஜக துணைத்தலைவர் சாந்தகுமார் கூறுகையில், வட இந்தியர்கள் மகாராஷ்டிராவில் பாதுகாக்கப்பட வேண்டும் என்று ஆர்.எஸ்.எஸ். கூறியுள்ளதில் எந்தத் தவறும் இல்லை. நாட்டில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் உள்ள உரிமையை அரசியல் கட்சிகள் மதிக்க வேண்டும். இந்தியர்கள் அனைவரின் உணர்வுகளையும் புரிந்து கொள்ள வேண்டும். அரசியல்வாதிகள் அரசியல் மட்டுமே செய்ய வேண்டுமே தவிர நாட்டைப் பிரிக்கும் வேலையில் ஈடுபடக் கூடாது என்றார். இதேபோல கட்சித் தலைவர் நிதின் கத்காரியும் ஆர்.எஸ்.எஸ்ஸுக்கு ஆதரவாகப் பேசியுள்ளார்.

ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத், சிவசேனாவைக் கண்டிக்கும் வகையில் பேசியதற்கு பாஜக ஆதரவு தெரிவித்து கருத்து தெரிவித்திருப்பதால் பாஜக- சிவசேனா கூட்டணியில் விரிசல் ஏற்படும் எனத் தெரிகிறது.
source:thatstamil

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "மகாராஷ்டிராவில் வட இந்தியர்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற ஆர்.எஸ்.எஸ்ஸின் கூற்றுக்கு பாஜக ஆதரவு சிவசேனா கொதிப்பு"

கருத்துரையிடுக