ஜெருசலேம்: இரு தரப்பு வர்த்தக உறவுகளை மேம்படுத்தத் தொழில்நுட்பச் சிந்தனையாளர்களைக் கொண்ட பேரவையை அமைக்கலாம் என்ற இந்திய யோசனையை இஸ்ரேல் வரவேற்றுள்ளது.
இரு நாடுகளுக்கும் இடையில் உள்ள வர்த்தக உறவுகளை மேலும் விரிவுபடுத்தவும் வலுப்படுத்தவும் இது மிகவும் உதவியாக இருக்கும் என்று இஸ்ரேல் கருதுகிறதாம். இந்தியாவால் விரும்பப்படும் நாடுகளில் ஒன்றாக இஸ்ரேல் ஆகிவருகிறது. இஸ்ரேலின் தொழில்நுட்ப அறிவும் அனுபவமும் இந்தியாவின் பல பிரச்னைகளுக்குத்தீர்வு காண உதவும் என்று உணரப்பட்டிருக்கிறதாம்.
இதனால் இரு நாடுகளுக்கும் இடையே பொருளாதார, தொழில்நுட்ப ஒத்துழைப்பை வளர்ப்பது குறித்த பேச்சை இந்திய தொழில், வர்த்தக இணை அமைச்சர் ஜோதிர் ஆதித்ய சிந்தியா இஸ்ரேலில் புதன்கிழமை தொடங்கினார்.
இஸ்ரேல் நாட்டின் தொழில், வர்த்தகம், தொழிலாளர் நலத்துறை அமைச்சரான பெஞ்சமின் பென் இலிசருடன் சிந்தியா புதன்கிழமை மாலை பேசினார். அப்போது இருநாடுகளும் கூட்டாக ஒத்துழைப்பதற்கான துறைகளைப்பட்டியலிட்டார்.
வேளாண்மை, பாசன மேம்பாடு, கால்நடை வளர்ப்பு, உள்நாட்டுப் பாதுகாப்பு உள்ளிட்ட பல முக்கிய துறைகளில் இரு நாடுகளும் தங்களுடைய அனுபவங்களையும் தொழில்நுட்பங்களையும் பகிர்ந்து கொள்ள முடியும் என்று அடையாளம் காணப்பட்டதாம்.
இரு நாடுகளுக்கும் இடையில் இப்போதுள்ள வேண்டப்பட்ட நாடு என்ற நிலையிலிருந்து வரியற்ற வர்த்தக உறவு நாடுகளாக நிலையை உயர்த்த உடன்பாடு காண வேண்டும் என்று இரு அமைச்சர்களும் ஒப்புக்கொண்டனர். அதற்கான அடுத்த கட்ட நடவடிக்கைகளை இருதரப்பும் விரைவில் எடுக்க வேண்டும் என்று இரு அமைச்சர்களும் ஒப்புக்கொண்டனர்.
கடந்த மாதம் தில்லிக்கு வந்த பெஞ்சமின் பென் எலிசர் இந்த உடன்பாடு குறித்து இந்தியத் தலைவர்களிடம் வலியுறுத்தியிருந்தார். அதிபருடன் சந்திப்பு: முன்னதாக அமைச்சர் ஜோதிர் ஆதித்ய சிந்தியா இஸ்ரேல் அதிபர் ஷிமோன் பெரஸ்ஸை புதன்கிழமை சந்தித்தார். அப்போது பெரஸ், புணே நகரில் நடந்த குண்டு வெடிப்புச் சம்பவத்தை வன்மையாகக் கண்டித்தார். எங்கள் நாட்டு பாதுகாப்புக்கு நாங்கள் தரும் அதே முக்கியத்துவத்தை இந்தியாவுக்கும் தருகிறோம் என்று அவர் குறிப்பிட்டார்.
1992-ல் இரு நாடுகளுக்கு இடையிலான வர்த்தக நடவடிக்கைகள் வெறும் 20 கோடி அமெரிக்க டாலர்களாக இருந்தன. இப்போதோ 400 கோடி டாலர்களாகிவிட்டன. 2015-ல் இதுவே 1,200 கோடி டாலர்களாக உயர்ந்துவிடும் என்று கூறுகின்றனர்.
source:தினமணி
0 கருத்துகள்: on "வர்த்தக உறவுகளை மேம்படுத்தத் தொழில்நுட்பப் பேரவை: இந்திய யோசனைக்கு இஸ்ரேல் வரவேற்பு"
கருத்துரையிடுக