மேற்குலகம் வளரும் நாடுகளுக்கு ஏற்றுமதிச் செய்த கலாச்சாரச் சீரழிவுதான் காதலர் தினமும், அதுத்தொடர்பான கொண்டாட்டங்களும்.
ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு தினங்களில் சர்வதேச சமூகத்தின் அவல நிலையை எடுத்தியம்பும் முகமாக மனித உரிமைகள் தினம், சித்திரவதை எதிர்ப்பு தினம், பெண்கள் தினம், பெண்கள் வன்கொடுமை எதிர்ப்பு தினம், குழந்தைகள் தினம் என பல்வேறு தினங்கள் நினைவுக் கூறப்படுகின்றன. இவற்றிற்கு ஒரு பின்னணி உண்டு, அதில் ஒரு பொருளும் உண்டு. ஆனால் காதலர் தினத்திற்கு பின்னணி வேலண்டைன் என்ற கிறிஸ்தவ மதப்போதகரின் வாழ்வியல் சம்பவம் நினைவுக் கூறப்படுகின்றதேயொழிய அதில் எத்தகைய சமூக பின்னணியும் இல்லை என்பதோடு காதலர் தினத்தின் முக்கிய நோக்கமே கலாச்சார சீரழிவும், வியாபார யுக்திகளும்தான் என்பது தெளிவாகவே புலப்படுகிறது.
மேற்குலகம் மனித சமூகத்திற்கு அன்பளிப்பாக அளித்த கலாச்சாரசீரழிவுதான் காதலர் தினம். மேற்கத்திய உலகம் கலாச்சாரசீரழிவுடன் நோய்களையும் ஏற்றுமதிச்செய்கிறது.அந்த நோய்களுக்கு நிவாரணம் என்ற பெயரில் சில மருந்துகளை வெளியிட்டு பாதிக்கப்பட்டவனின் பொருளாதாரத்தை உறிஞ்சவும் செய்கிறது. சாமுல் ஹண்டிங்டனின் நாகரீக மோதலின் தியரி இங்கு மாறுபடவேச் செய்கிறது..
காதல் அன்பு நேசம் போன்ற மனித உணர்வுகள் எல்லாம் மேற்குலகின் உபாயத்தால் கடைச் சரக்காக்கப்பட்டுவிட்டது. இரு உள்ளங்களுக் கிடையேயான காதலைத்தான் இவர்கள் கடற்கரைகளிலும், இரவு விடுதிகளிலும், டிஸ்கோத்தேக் கிளப்புகளிலும், சீமைச்சாராய ஷாப்புகளிலும் கடை விரிக்கின்றார்கள். காதலர் தின விழாவை முன்னிட்டு, சாக்லேட், ரோஜாப் பூக்கள் மற்றும் வாழ்த்து அட்டைகள் விற்பனை அதிகரிப்பதன் கூடவே, ஆணுறை மற்றும் கருத்தடை மாத்திரைகளின் விற்பனையும் படுஜோராக நடக்கிறது.
ஆண்டுதோறும் காதலர் தின சமயத்தில் சராசரியாக 20 சதவீதம் ஆணுறை மற்றும் பெண்கள் உபயோகப்படுத்தும் கருத்தடை மாத்திரைகள் கூடுதல் விற்பனை இருப்பதாக 24 மணி நேர ஆணுறை விற்பனை மையமான எஸ்2காண்டம் நிறுவனத்தின் இயக்குனர் சிஷிர் மிக்லானி தெரிவிக்கிறார். காதலர் தினத்தையொட்டி சில சலுகைகளையும் மிக்லானியின் நிறுவனம் அறிவித்துள்ளதாம். குறிப்பிட்ட எண்ணிக்கையிலான ஆணுறைகளை வாங்கினால் இலவசமாம். மேலும் வேல்யூ ஆடட் பேக்கேஜ்களையும் இந்த நிறுவனம் அறிவித்துள்ளது. உதாரணத்திற்கு ஒரு ஆணுறை வாங்கினால் ஒன்று இலவசம் என்பது போல.இந்தியாவில் பூ விற்பனையாளர்கள் காதலர் தினத்தில் 15 கோடி வரையிலான வியாபாரத்தை எதிர்பார்க்கிறார்களாம்.
அமெரிக்காவில் ஒருவர் சராசரியாக நூறு டாலர்கள் காதலர் தினத்துக்காகச் செலவழிக்கிறார். கடந்த ஆண்டு மட்டும் 210 மில்லியன் ரோஜாக்கள் அமெரிக்காவில் இந்த நாளில் விற்பனையானதாகவும், அவற்றை வாங்கியவர்களில் 73 சதவீதம் பேர் ஆண்கள் என்றும் அமெரிக்க மலர் விற்பனையாளர்கள் கூட்டமைவு அறிக்கை வெளியிட்டுள்ளது. இவ்வாறு வியாபாரமயமாக்கப்பட்டு விட்டது காதல்.
இன்று கண்டதும் காதல், காணாத காதல் என்றெல்லாம் காதலை வகைப்படுத்துகிறார்கள்.இதில் வேறு அமிலக்காதல் என்கிறார்கள்(தான் விரும்பும் பெண் தன்னைவிரும்பாமல் வேறொருவரை திருமணம் செய்ய முற்படும்பொழுது அவள் முகத்தின் மீது ஆசிட்டை வீசுவது, இவ்வாறு பல நிகழ்வுகள் நடந்தேறியுள்ளன)இதற்கு சினிமா என்ற பெருந்திரள் ஊடகமும் முக்கிய பங்கை ஆற்றுகிறது. திரைப்படம் காட்டும் காதலில் காமமும், ஆணாதிக்கமுமே நிறைந்துக் காணப்படுகிறது. அதில் பெண் வெறும் போகப்பொருளே. இதனைத்தான் இன்றைய சமூகம் நிதர்சனத்திலும் செயல்படுத்த முயல்கின்றது. பெண் என்பவள் பொருளை ஒருமுறை பயன்படுத்திவிட்டு தூக்கியெறியும் use and throw போன்று ஆக்கப்படுகிறாள். இவையெல்லாம் காதல் ஆகுமா? நிச்சயம் இல்லை சதை மீதான உணர்ச்சி என்றே கூறலாம்.
கலாச்சாரம் மற்றும் பண்பாட்டின் காவலர்களாக தங்களை காட்டிக் கொண்டு காதலர் தினக் கொண்டாட்டங்களை தடுக்க வன்முறையில் இறங்கும் இந்திய பாசிஸ்டுகளின் உண்மையான நோக்கம் பண்பாடும் இல்லை ஒரு மண்ணாங்கட்டியுமில்லை. காதலர் தினத்தின் பின்னணியில் கிறிஸ்தவ பாதிரியார் வேலண்டைன் ஒளிந்திருக்கிறார் என்பதேயாகும். மேலும் ஆண்டின் 365 நாட்களிலும் இவர்கள் ஏற்படுத்திவைத்திருக்கும் திருவிழாக்களுக்கு இதனால் பாதிப்பு ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சமும்தான். கலாச்சாரத்தை பாதுகாப்பதாக கூறிக்கொள்ளும் இவர்கள் தங்களின் வழிப்பாட்டுத் தலங்களில் பொறித்து வைக்கப்பட்டிருக்கும் ஆபாசத்தையும்,வக்கிரத்தையும் தூண்டும் சிலைகளையும், ஓவியங்களையும் அகற்ற முற்படாதது ஏன்? ஏன் இவர்களே பாலியல் பலாத்காரத்திலும், வன்புணர்ச்சியிலும் கைதேர்ந்த கொடூரர்கள் என்பது குஜராத் இனப்படுகொலை உள்ளிட்ட இந்தியாவின் பல பகுதிகளிலும் சிறுபான்மை இனத்தவர்களுக்கெதிராக நடைபெற்ற கலவரங்களிலும் தெளிவான ஒன்று. இவர்கள் சார்ந்த மதம்தான் பெண்களின் உணர்ச்சிகளை ஊமையாக்கி வரையற்ற சுரண்டல்களை பெண்கள் மீது திணிக்கிறது. ஆகவே இவர்களுக்கு கலாச்சாரத்தின் பாதுகாவலர்கள் என்றுக் கூறுவதற்கு அருகதை துளியும் கிடையாது.
காதலைப் பொறுத்தவரை அது இயற்கையாகவே மனித உள்ளங்களில் எழும் ஒன்று. அது உடல் இச்சையை மட்டும் சார்ந்தது அன்று. காதல் என்பது இணைகளுக்கிடையே பரஸ்பர அன்பு, பாசம், அரவணைப்பு, ஒருவரையொருவர் புரிந்துக்கொள்ளல், உணர்வுகளுக்கு மதிப்பளித்தல், இன்பத்திலும், துன்பத்திலும் உறுதுணையாகயிருத்தல், ஒருவருக்கொருவர் ஆறுதல்,பரஸ்பர நம்பிக்கை இவையெல்லாவற்றையும் இறுதிவரை பேணுவதே காதலின் உள்ளார்த்தமாகும்.
இந்த காதலுக்குதான் இஸ்லாம் திருமணம் என்ற உறுதியான ஒப்பந்தம் என்ற அந்தஸ்தை அளித்து கெளரவப்படுத்துகிறது. அல்லாஹ் தனது திருக்குர்ஆனில் அத்தியாயம் இவ்வாறு குறிப்பிடுகிறான். "இன்னும், நீங்கள் அவர்களிடம் ஆறதல் பெறுதற்குரிய (உங்கள்) மனைவியரை உங்களிலிருந்தே உங்களுக்காக அவன் படைத்திருப்பதும்; உங்களுக்கிடையே உவப்பையும், கிருபையையும் உண்டாக்கியிருப்பதும் அவனுடைய அத்தாட்சிகளில் உள்ளதாகும்; சிந்தித்து உணரக்கூடிய சமூகத்திற்கு நிச்சயமாக, இதில் (பல) அத்தாட்சிகள் இருக்கின்றன"(அல்குர்ஆன் 30:21).
காதலுடன் வாழும் அந்த இணைகளை அல்லாஹ் இவ்வாறு உருவகப்படுத்துகிறான், "அவர்கள் உங்களுக்கு ஆடையாகவும், நீங்கள் அவர்களுக்கு ஆடையாகவும் இருக்கின்றீர்கள்..."(அல்குர்ஆன் 2:187)
காதல் என்பது காண்பவற்றிலெல்லாம் மோகம் கொள்வதன்று. எந்த இணையை தனக்கு சொந்தமாக்கிக் கொண்டோமோ அதில் திருப்திக் கொண்டு வாழ்வதாகும்.அதனால் வல்ல இறைவனான அல்லாஹ் இறைநம்பிக்கைக் கொண்ட ஆண்களுக்கும் பெண்களுக்கும் தங்கள் பார்வைகளை தாழ்த்திக் கொள்ளுமாறு கட்டளையிடுகிறான்.
ஆண்களானாலும் பெண்களானாலும் அவர்களுக்கு இவ்வுலகில் ஒரு உன்னத பணிகள் உண்டு அதனைப்பற்றி திருக்குர்ஆன் இவ்வாறு எடுத்தியம்புகிறது. "முஃமினான ஆண்களும் முஃமினான பெண்களும் ஒருவருக்கொருவர் உற்ற துணைவர்களாக இருக்கின்றனர்; அவர்கள் நல்லதைச் செய்ய துண்டுகிறார்கள்; தீயதை விட்டும் விலக்குகிறார்கள்; தொழுகையைக் கடைப்படிக்கிறார்கள்; (ஏழை வரியாகிய) ஜகாத்தை (முறையாகக்) கொடுத்துவருகிறார்கள்; அல்லாஹ்வுக்கும் அவன் தூதருக்கும் வழிப் படுகிறார்கள்; அவர்களுக்கு அல்லாஹ் சீக்கிரத்தில் கருணை புரிவான் - நிச்சயமாக அல்லாஹ் மிகைத்தவனாகவும், ஞானமுடையவனாகவும் இருக்கின்றான்"(அல்குர்ஆன்.9:71)
இஸ்லாம் என்ற உன்னத கொள்கையை பின்பற்றுபவர்கள் இத்தகய உணர்ச்சிகளின் சீர்கேட்டிற்கு தன்னை ஆட்படுத்திக் கொள்ளமாட்டார்கள். இவ்வுலகில் இஸ்லாம் என்ற ஒப்பற்ற கொள்கையால்தான் ஒழுக்கத்தை நிலைநாட்ட இயலும். ஏனெனில் இறைவனின் இறுதித்தூதர் அவர்கள் தான் தூதராக அனுப்பப்பட்ட நோக்கத்தை இவ்வாறு தெரிவிக்கின்றார்கள், "நல்லொழுக்கத்தை பரிபூரணப்படுத்தவே நான் தூதராக அனுப்பப்பட்டேன்" என்று. ஆகவே இளம் தலைமுறையினரே! காதலின் பெயரால் கலாச்சாரத்தை கருவறுப்பதை விட்டொழித்துவிட்டு வாருங்கள் அந்த நல்லொழுக்கத்திற்கு வழிகாட்டும் நன்மையின் மார்க்கத்தை நோக்கி.
0 கருத்துகள்: on "காதலர் தினமும் கலாச்சார கருவறுப்பும்"
கருத்துரையிடுக