31 மார்., 2010

19-ஆம் நூற்றாண்டிற்கு முன்னர் அயோத்தியில் எந்தக் கோயிலும் இல்லை- வரலாற்று ஆய்வாளர் ஹர்பன்ஸ் முகியா

ராம்பூர்:உத்திரபிரதேச மாநிலம் ராம்பூரில் ராசா நூலகம் சார்பாக ஏற்பாடுச் செய்யப்பட்டிருந்த 'இந்தியாவில் இஸ்லாம் பரவியதற்கான காரணங்கள்' என்ற தலைப்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் உரை நிகழ்த்தினார் வரலாற்றாய்வாளரும், ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் முன்னாள் பேராசிரியருமான ஹர்பன்ஸ் முகியா.அவர் தனது உரையில் கூறியதாவது: "நான் ஒரு வரலாற்றாய்வாளர் என்ற முறையில் கூறுகிறேன், 19-ஆம் நூற்றாண்டிற்கு முன்னர் அயோத்தியில் ஒரு கோயிலோ அதன் சுவடுகளோ கூட இருந்ததில்லை. கோயில் இருந்ததாகக் கூறுவதல்லாம் பின்னர் புனையப்பட்டதாகும்.

முகலாய மன்னர்கள் தங்களின் ஆட்சியை விரிவுப்படுத்துவதற்காக மதமாற்றத்தில் ஈடுபட்டதாக எந்த வரலாற்றாய்வாளர்களும் கூறவில்லை. கோயில்களை இடித்ததாகவும், மக்களை பலவந்தப்படுத்தி இஸ்லாத்திற்கு மதமாற்றியதாகவும் கூறுவது அடிப்படையற்றத் தகவல்களாகும்.

முகலாய ஆட்சியாளர்கள் 3 ஆயிரம் அல்லது அறுபது ஆயிரம் கோயில்களை இடித்ததாக கூறும் சிலரின் கூற்றுக்கு எவ்வித ஆதாரமுமில்லை. சில கோயில்கள் இடிக்கப்பட்டுள்ளன, ஆனால் அதற்கு வேறு காரணங்களாகும். மாறாக இஸ்லாத்தை திணிப்பதற்கு அல்ல. அவ்வாறு முகலாயர் ஆட்சியில் கோயில்கள் இடிக்கப்பட்டு இஸ்லாத்தை மக்கள் மீது திணித்திருந்தால் தற்ப்பொழுது இந்தியாவில் ஏன் முஸ்லிம்கள் வெறும் 15 சதவீதமாக உள்ளனர்? முகலாயர் இந்தியாவை 8 நூற்றாண்டுகள் ஆட்சிச் செய்த போதிலும் அவர்களுடைய எண்ணிக்கை குறைவாகத்தானே உள்ளது.

பீஹார், உ.பி, டெல்லி, கிழக்கு பஞ்சாப் இவ்விடங்களிலெல்லாம் முகலாயர்கள் ஆட்சிபுரிந்தனர். இருந்த போதிலும் அவர்களுடைய எண்ணிக்கை 18 சதவீதத்தை தாண்டவில்லையே. இதன் மூலம் முகலாயர் ஆட்சியில் மக்கள் மீது இஸ்லாம் திணிக்கப்படவில்லை என்பது நிரூபணமாகிறது.

இஸ்லாம் இந்தியாவில் பரவுவதற்கு காரணம் சகோதரத்துவம், சமூக நல்லிணக்கம், பொறுமை மற்றும் கருணை ஆகியவையாகும். இவை மக்களை இஸ்லாத்தை நோக்கி ஈர்த்தது. சூஃபிக்களின் குணநலன்களும், போதனைகளும் அம்மக்களை இஸ்லாத்தின் பால் கொண்டு சேர்த்தது. முஸ்லிம்கள் இஸ்லாத்தைப் பரப்புவதற்கு வாளை பயன்படுத்தியிருந்தால் வரலாறு அதனை பதிவுச்செய்ய ஒருபோதும் மறந்திருக்காது. ஆனால் வரலாற்றில் முகலாயர் ஆட்சியின்போது இப்பிரச்சனைத் தொடர்பாக எவ்வித தகவலும் இல்லை." இவ்வாறு அவர் உரையாற்றினார்.

நிகழ்ச்சியில் தலைமை உரை நிகழ்த்திய செய்யத் ஷாஹித் மஹ்தி பேராசிரியர் ஹர்பன்ஸை பாராட்டினார். "பேராசிரியர் ஹர்பன்ஸ் வரலாற்றின் வெளிச்சத்தில் உண்மையை விளக்கினார். ஒரு உண்மையான வரலாற்றாய்வாளரால்தான் உண்மையை பேசமுடியும்" என்றார் அவர்.

ராசா நூலகத்தின் பேராசிரியர் ஷா அப்துஸ்ஸலாம் உரையாற்றுகையில், "இஸ்லாம் பரவுவதற்கு காரணம் அதன் கொள்கைகளாகும். சுரண்டலுக்கும்,கொடூரத்திற்கும் ஆட்பட்டிருந்த மக்களை இஸ்லாம் கவர்ந்தது"என்றார்.
செய்தி:twocircles.net


Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "19-ஆம் நூற்றாண்டிற்கு முன்னர் அயோத்தியில் எந்தக் கோயிலும் இல்லை- வரலாற்று ஆய்வாளர் ஹர்பன்ஸ் முகியா"

கருத்துரையிடுக