ஹைதராபாத்:ஹைதராபாத்தில் தொடர்ந்து பதட்டம் நிலவி வருகிறது. மேலும் சில பகுதிகளுக்கு ஊரடங்கு உத்தரவு விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
பழைய ஹைதராபாத் பகுதியில் இரு பிரிவினருக்கு இடையே ஏற்பட்ட மோதலால் ஹைதராபாத் நகரம் பெரும் போர்க்களமாகியுள்ளது. இதுவரை வன்முறைக்கு 2 பேர் உயிரிழந்துள்ளனர். 90 பேர் காயமடைந்துள்ளனர்.
இதையடுத்து பழைய ஹைதராபாத் பகுதியில் 17காவல் நிலையங்களுக்குட்பட்ட பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. தற்போது இது மேலும், எட்டு பகுதிகளுக்கு விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
நிலைமை தொடர்ந்து பதட்டமாக இருப்பதாகவும், இருப்பினும் நிலைமை கட்டுக்குள் இருப்பதாகவும் மாநில டிஜிபி கிரிஷ்குமார் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், "ஹைதராபாத்தின் முக்கியப் பகுதிகளில் தொடர்ந்து பதட்டம் நிலவுகிறது. இருப்பினும் நேற்று இரவு முதல் புதிதாக எந்த வன்முறையும் இடம் பெறவில்லை.தென் மண்டலப் பகுதியில் நிலைமை அமைதியாக உள்ளது. சில இடங்களில் ஊரடங்கு உத்தரவு கூட பகுதியாக குறைக்கப்பட்டுள்ளது.இருப்பினும் புதிய நகர்ப் பகுதியில் ஊரடங்கு உத்தரவு தொடர்ந்து நீடிக்கிறது" என்றார்.
வன்முறையில் ஈடுபடுவோரைக் கண்டதும் சுடவும் உத்தரவிடப்பட்டுள்ளது. மத்திய அரசு அனுப்பியுள்ள கூடுதல் படையினரும் ஹைதராபாத் வந்து சேர்ந்துள்ளனர். தொடர்ந்து தீவிரக் கண்காணிப்பு மற்றும் ரோந்தில், பாதுகாப்புப் படையினர் ஈடுபட்டுள்ளனர்.
source:thatstamil
0 கருத்துகள்: on "ஹைதராபாத்தில் தொடரும் பதட்டம் - மேலும் சில பகுதிகளில் ஊரடங்கு"
கருத்துரையிடுக