திருவனந்தபுரம்:மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் டாக்டர் சசிதரூர் தேர்தலில் போட்டியிடுவதற்காக வாக்காளர் பட்டியலில் சட்டவிரோதமாக தனது பெயரை பதிவுச் செய்ததாக செய்தி இணையதள இதழ் ஒன்று ஆதாரத்துடன் செய்தி வெளியிட்டுள்ளது.
உண்மையான விபரங்களை சமர்ப்பிக்காமல் போலியான ஆவணங்களை காட்டி வாக்காளர் பட்டியலில் சசி தரூர் இடம்பெற்றுள்ளார். தேர்தல் வாக்காளர் பதிவாளர் அலுவலகத்தின் அதிகாரியின் துணையோடுதான் இந்த மோசடி அரங்கேறியுள்ளது என அந்த இணையதளம் குற்றஞ்சாட்டுகிறது. ரேசன் அட்டைக்காக மனு அளிப்பதற்கு தேவையான வசிப்பிட சான்றிதழ் மட்டுமே வாக்காளர் பட்டியலில் இடம்பெறுவதற்கு சசிதரூர் சமர்ப்பித்துள்ளார்.
சசி தரூரின் மனு பூரணமில்லாததாலும், போதிய ஆவணங்களை இணைக்காததாலும் அவருடைய மனுவை தேர்தல் வாக்காளர் பதிவு அலுவலக அதிகாரி தள்ளுபடி செய்திருக்கவேண்டும். ஆனால் சட்டப்படி தகுதியில்லாத மனுவை ஏற்று அவரை வாக்காளர் பட்டியலில் சேர்த்துள்ளார் வாக்காளர் பெயர் பதிவு அலுவலக அதிகாரி.
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கும் பொழுது வழக்கம்போல் நடக்கும் விசாரணையும் சசிதரூரின் விவகாரத்தில் நடைபெறவில்லை. வாக்காளர் பட்டியலில் பெயர் இடம் பெறும் பொழுது சசிதரூர் திருவனந்தபுரத்தில் நிரந்தரமாக வசிக்கவில்லை. வி.ஐ.பி சிறப்புரிமையின் அடிப்படையில்தான் சசிதரூர் வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ளார். ஆனால் வி.ஐ.பி சிறப்புரிமையின் படியான சட்டப்படி அவர் தகுதியானவராக இருக்கவில்லை எனவும் அந்த இணைய இதழ் கூறுகிறது. மேலும் சசி தரூர் திருவனந்தபுரத்தில் நிரந்தரமாக வசிப்பவர் அல்ல என்பதற்கான ஆதாரத்தை அந்த இணையதளம் வெளியிட்டுள்ளது.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்
0 கருத்துகள்: on "சசி தரூர் வாக்காளர் பட்டியலில் சட்டவிரோதமாக இடம்பெற்றதாக - இணையதளம் தகவல்"
கருத்துரையிடுக