தொடுபுழா;கேரளா மாநிலம் தொடுபுழையில் நியூமான் கல்லூரியில் நேற்று நடந்த முதல் ஆண்டு பி.காம் மாதிரி தேர்வில் அல்லாஹ்வையும் அவனுடைய தூதர் முஹம்மது நபியையும் கேவலப்படுத்தும் வகையில் கேள்வி ஒன்று வினாத்தாளில் இடம் பெற்றிருந்தது.
இதனைக் கண்ணுற்ற மாணவர்கள் கொதிப்படைந்தனர். இந்தச் செய்தி வெளியில் பரவியதையடுத்து பொதுமக்கள் மத்தியில் பதட்டம் உருவாகியது. கேள்வித்தாளை தயாரித்தது மலையாளம் பேராசிரியர் டி.ஜே.ஜோசப் என்பவராவார். இவ்விவகாரம் மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியதையடுத்து கல்லூரி நிர்வாகம் பேராசிரியரை சஸ்பெண்ட் செய்தது.
ஆனால் டி.ஜே.ஜோசப் கூறுகையில் தான் கேள்வித்தாள் தயாரித்தது குஞ்சு முஹம்மது என்பவரின் நூலை ஆதாரமாக வைத்து என்று. ஆனால் கே.டி.குஞ்சு முஹம்மது கூறுகையில், தனது புத்தகத்தில் டி.ஜே.ஜோசப் கூறுவதுபோல் முஹம்மது நபி(ஸல்...) அவர்கள் இறைவனோடு உரையாடும் சம்பவமே இடம்பெறவில்லை எனவும், இதனை டி.ஜோசப் வேண்டுமென்றே இட்டுக்கட்டியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் கேரள மாநில பொதுச்செயலாளர் பி.அப்துல்ஹமீது கூறுகையில், "முஸ்லிம் சமூகத்தை அவமதிக்கத்தக்க வகையில் கேள்வித்தாள் தயாரித்த டி.ஜோசப் வேண்டுமென்றே இந்த வினாத்தாளை தயாரித்துள்ளார். இத்தகைய காழ்ப்புணர்வுக் கொண்ட டி.ஜோசப் பேராசிரியர் தொழிலுக்கே இழிவை ஏற்படுத்தியுள்ளார். இது தொடராமலிருக்க கேரள அரசு கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும். இந்த வினாத்தாளை தயாரித்த டி.ஜோசப்பை சிறையலடைக்க வேண்டும்.
நேற்று முன் தினம் சுங்கப்பாறையில் நபிகளாரை அவமதிக்கும் வகையில் நூல் ஒன்று விநியோகிக்கப்பட்டுள்ளது. ஆனால் அரசு அந்நூலை வெளியிட்ட வெளியீட்டாளருக்கு எதிராக அரசு எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. இடதுசாரிகள் ஆளும் இத்தைகைய நிகழ்வுகள் நடப்பது கவலைக்குரியது. இச்சம்பவங்கள் கேரளத்தின் மதசார்பற்ற பாரம்பரியத்திற்கு இழுக்காகும்.
அதேவேளையில் இப்பிரச்சனையை சாக்காக வைத்து முஸ்லிம்களுக்கெதிராக கலவரத்தைத் தூண்ட நினைக்கும் ஆர்.எஸ்.எஸின் முயற்சியை என்ன விலைக் கொடுத்தும் தடுப்போம். கலவரத்தை தூண்ட நினைக்கும் இத்தகைய முயற்சிகளை தடுக்க பாரபட்சமின்றி காவல்துறை நடவடிக்கை எடுக்கவேண்டும்." இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்
0 கருத்துகள்: on "கேரளா:கல்லூரி வினாத்தாளில் நபி(ஸல்...)அவர்களை அவமதிக்கும் கேள்வி; பதட்டம்; பேராசிரியரை சிறையிலடைக்க பாப்புலர் ஃப்ரண்ட் கோரிக்கை"
கருத்துரையிடுக