திருவனந்தபுரம்:பெங்களூரு-திருவனந்தபுரம் கிங்ஃபிஷர் விமானத்தில் குண்டுவைத்த வழக்கில் முக்கிய நபரான ராஜசேகரன் நாயர்(49) கைதுச் செய்யப்பட்டார்.
இவர் திருவனந்தபுரம் மாவட்டம் மலையின்கீழ் என்ற இடத்தைச் சார்ந்தவர். திருவனந்தபுரம் விமானநிலையத்தில் கிளீனிங், சரக்குகளை ஏற்றி இறக்குவதுத் தொடர்பான பணிகளைச் செய்யும் தனியார் ஒப்பந்தக் கம்பெனியான யூனிவர்ஷல் ஏவியேஷன் சர்வீஸஸ் ப்ரைவட் லிமிடெட் என்ற நிறுவனத்தின் சூப்பர்வைஸராக பணிபுரிகிறார் ராஜசேகரன்.
இதுத்தொடர்பாக விரிவான விசாரணை நடந்து வருவதாகவும், ராஜசேகரன் நாயரை போலீஸ் கஸ்டடியில் எடுத்து விசாரித்த பிறகே முக்கிய விபரங்களை அறிய முடியும் என கேரள தென்மண்டல ஐ.ஜி.ஹேமச்சந்திரன் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார்.
கடந்த 21ஆம் தேதி திருவனந்தபுரம் விமானநிலையத்தில் வந்திறங்கிய கிங்ஃபிஷர் விமானத்தின் கார்கோ சரக்குகளை வைக்கும் இடத்திலிருந்து வெடிக்குண்டு கைப்பற்றப்பட்டது. இதனால் கடும் பரபரப்பு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில்தான் விமானநிலைய பணியாளரான ராஜசேகரனை போலீஸார் கைதுச்செய்தனர்.
ஒரு மலையாள பத்திரிகையின் தாளில் மடக்கப்பட்ட நிலையில் வெடிக்குண்டு கண்டுபிடிக்கப்பட்டது. சம்பந்தப்பட்ட பத்திரிகை அலுவலகத்தில் தொடர்பு கொண்டபொழுது திருவனந்தபுரம் மாவட்டத்தில் நெடுமங்காடு என்ற பகுதிக்கு அனுப்பப்படும் பத்திரிகை எனத் தெரியவந்தது.
வெடிக்குண்டு தயாரிக்க பயன்படுத்தியது பத்தாம் வகுப்பு அரையாண்டுத் தேர்வுக்கான ஆங்கில வினாத்தாளாகும். இந்த வினாத்தாளின் வரிசை எண்ணின் அடிப்படையில் போலீஸ் விவரங்களை சேகரித்தது. பாலோடு என்ற இடத்தில் பட்டாசு தயாரிக்கும் ஒருவருக்கு இந்த பழைய வினாத்தாள்களை விற்கப்பட்டதாக போலீஸ் கண்டறிந்தது. நருவாமூடு என்ற இடத்திலிலுள்ள கோயிலில் வாணவேடிக்கை நடத்த பயன்படுத்தப்பட்ட பட்டாசுகளில் பொதிந்திருந்ததும் இதே வினாத்தாள்களாகும் என அங்கே சிதறிக் கிடந்த காகிதத் துண்டுகளை சோதனைச் செய்த பொழுது போலீஸ் கண்டறிந்தது.
தொடர்ந்து அப்பகுதியிலிருந்து விமானநிலையத்தில் வேலைப் பார்ப்பவர் ராஜசேகரன் நாயர் என்பதையும் போலீஸ் கண்டுபிடித்தது. வெடிக்குண்டு கண்டறிந்த விபரத்தை விமானநிலைய துப்புரவு தொழிலாளிகளுக்கும், விமானநிலைய பாதுகாப்பு பிரிவுக்கும் தகவலை அளித்தது இவர் என்பதால் சந்தேகம் வலுவடைந்ததாக போலீஸ் ஐ.ஜி தெரிவித்தார்.
20 வருடங்களாக சி.ஐ.எஸ்.எஃபில் பணிபுரிந்த ராஜசேகரன் நாயர் கான்ஸ்டபிள், ஹவில்தார் ஆகிய பதவிகளை வகித்துள்ளார். பின்னர் சுயமாக ஓய்வு பெற்ற பிறகு கடந்த 2003 ஆம் ஆண்டு முதல் ஐ.எஸ்.ஆர்.ஓ, எஃப்.எ.சி.டி, நேசனல் போலீஸ் அகாடமி உள்ளிட்ட பல இடங்களில் பாதுகாப்பு அதிகாரியாக பணிபுரிந்துள்ளார். இவர் இதற்கு முன்பு வேறு வழக்குகளில் சிக்கியத் தகவல் ஒன்றும் இதுவரை கிடைக்கவில்லை. வெடிக்குண்டு தயாரித்தது மற்றும் அதற்கு உதவிப் புரிந்தவர்களின் விபரமும் கிடைத்துள்ளதாக போலீஸ் தெரிவித்துள்ளது.
பாதுகாப்பு குறித்து குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள சூழலில் விமானநிலையத்தில் பணிபுரியும் அனைவரையும் குறித்து விபரங்கள் சேகரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதில் முக்கியத் தகவல்கள் ஏதேனும் உண்டென்றால் அதனை மத்திய புலனாய்வு ஏஜன்சியுடன் பகிர்ந்துக் கொள்ளப்படும்.
நேற்று மாலை ராஜசேகரன் நாயரை கமிஷனரின் அலுவலகத்தில் கொண்டு சென்ற பிறகு விமானநிலையத்திற்கு அழைத்துச்சென்று ஆதாரங்கள் சேகரிக்கப்பட்டது. வெடிப்பொருள் தடைச்சட்டம் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவுச் செய்யப்பட்டுள்ளது.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்
0 கருத்துகள்: on "விமானத்தில் வெடிகுண்டு:முக்கிய நபர் ராஜசேகரன் நாயர் கைது"
கருத்துரையிடுக