பிரான்ஸ்;1951ம் ஆண்டு, ஆகஸ்ட் 16ம் தேதி. பான்ட் செயின்ட் எஸ்பிரிட் கிராமம். திடீரென கிராமமே பரபரப்பாகிறது. அத்தனை பேருக்கும் பைத்தியம் பிடித்தது போல் ஒரே களேபரம்.
தனது வயிறை ஒரு பாம்பு கடித்துக் குதறுவதாக கதறிக் கொண்டே, நீரில் மூழ்கி இறந்து போகிறார் ஒருவர். 11 வயது பேரன், தனது பாட்டியின் கழுத்தை நெரித்துக் கொல்ல முயல்கிறான். மற்றொருவரோ, கால் வழியாக இறங்கி தப்பிச் செல்லும் தனது இதயத்தை மீண்டும் பிடித்து, உடலுக்குள் வைத்து தைக்குமாறு டாக்டரிடம் கெஞ்சுகிறார். காலை முதல் மாலை வரை நடந்த இந்த ரகளையில், என்ன நடக்கிறது எனத் தெரியாமலே 5 பேர் இறந்தனர். 100க்கும் மேற்பட்டோர் பைத்தியக்கார ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர்.
இத்தனைக்கும் காரணம் அமெரிக்காவின் சிஐஏ நடத்திய ஒரு ரகசிய மருந்து சோதனைதான் என்பது இப்போது தெரிய வந்துள்ளது. எலிகள், முயல்கள் தொடங்கி நடக்கும் மருந்து ஆய்வுக்கு இறுதி கட்டமாக, எந்த நோய்க்கு மருந்து கண்டுபிடிக்கப்படுகிறதோ அது தொடர்பான நோயாளிகளிடம் ஆய்வு நடக்கும். இதுதான் உலக நடைமுறை. ஆனால், சில நேரங்களில் ஒன்றுமறியாத அப்பாவிகளிடம் அவர்களுக்குத் தெரியாமலேயே ஆய்வு நடக்கும். அப்படி நடத்தப்பட்ட ஒரு ஆய்வுதான் இது.
மருந்தின் பெயர் எல்எஸ்டி. சாண்டோஸ் என்ற மருந்து நிறுவனம் சிஐஏ&வுக்கு ரகசியமாக தயாரித்துக் கொடுத்த மைன்ட் கன்ட்ரோல் மருந்து. அதாவது மூளையை கட்டுப்படுத்தும் மருந்து. இதை ரொட்டி மாவில் சேர்த்து சோதனை செய்துள்ளது சிஐஏ. அந்த சோதனையின் விளைவுதான் அத்தனைக் கூத்தும். சிஐஏக்கு இந்த மருந்தை தயாரித்துக் கொடுத்த சயின்டிஸ்ட் பிராங்க் ஓல்சன் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு 13வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். இவரின் தற்கொலைக்கான காரணத்தை ஆராய இறங்கிய அல்பரெல்லி என்ற பத்திரிகையாளர் மூலம்தான் ஏறக்குறைய 58 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த ரகசியம் வெளியே வந்திருக்கிறது.
உலகம் முழுவதும் இதுபோன்ற ரகசிய மருந்து சோதனை நடந்து கொண்டுதான் இருக்கிறது. ஏழை நாடுகளில் கொத்துக் கொத்தாக மக்கள் செத்து விழுந்தால், அதன் பின்னணியில் இதுபோன்ற ஏதாவது ஒரு ஆராய்ச்சி இருக்கும் என உறுதியாக நம்பலாம்.
source:தினகரன் தலையங்கம்
0 கருத்துகள்: on "சிஐஏ நடத்திய ரகசிய மருந்து சோதனை"
கருத்துரையிடுக