நெல்லை:மரபணு மாற்றப்பட்ட விதைகளுக்கு நிரந்தர தடை விதித்து எதிர்கால சந்ததியினரை பாதுகாக்க வேண்டும் என நெல்லையில் நடந்த கருத்தரங்கில் வலியுறுத்தப்பட்டது.
தமிழ் மருத்துவக் கழகம், அன்னம் பசுமைக் கூடம், சித்திரமும் கைபழக்கம் ஓவிய இயக்கம் ஆகியவை சார்பில், பயிர்களின் மரபணு மாற்ற பாதி்ப்பு குறித்த கருத்தரங்கம் நெல்லையில் நடந்தது.
நெல்லை தமிழ் வளர்ச்சி பண்பாட்டு மைய செயலாளர் ரமேஷ் ராஜா தலைமை வகித்தார். இயற்கை வேளாண்மை மையம் கணேசர ராஜா முன்னிலை வகித்தார்.
சென்னையைச் சேர்ந்த சித்த மருத்துவர் சிவராமன் பேசுகையில்,
"மரபணு மாற்ற பயிர்கள் விவசாய உற்பத்தியை பெருக்கவோ, விவசாயிகளுக்கு லாபத்தை அதிகரிக்கவோ உற்பத்தி செய்யப்படவில்லை. செடிகள் மீது பூச்சிகளின் தாக்குதலை கட்டுபடுத்தவே மரபணு மாற்றப்பட்ட பயிர்கள் உருவாக்கப்படுகின்றன. மரபணு மாற்ற பயிர்களில் பூச்சி, புழுக்களை கட்டுபடுத்தும் நச்சுத் தன்மை உள்ளது. மரபணு மாற்றப்பட்ட பிடி கத்தரிக்காய் மூலம் எதிர்காலத்தில் என்னென்ன பாதிப்பு ஏற்படும் என முழுமையாக தெரியவில்லை. இந்த கத்தரிக்காய் மூலம் தோல் நோய், மலட்டுத்தன்மை, அலர்ஜி, சிறுநீரக கோளாறு ஆகியவை ஏற்படும் என கூறப்படுகிறது.
இதனால் பிடி கத்தரிக்காய்க்கு பல நாடுகள் தடை விதித்துள்ளன. இந்தியாவில் பிடி பருத்தி மூலம் ஏராளமான விவசாயிகள் நஷ்டம் அடைந்துள்ளனர். ஏராளமான கால்நடைகளும் பாதிக்கப்பட்டுள்ளன.
தற்போது இதை பயன்படுத்த தொடங்கிவிட்டால் எதிர்காலத்தில் உண்மையான விதை கிடைக்காது. பிடி கத்தரிக்காய் அருகே பயிரிடப்பட்ட இடத்தில் உள்ள நாட்டு கத்தரிக்காய் கூட மகரந்த சேர்க்கையால் பிடி கத்தரியாக மாறும்.
கருவில் உள்ள குழந்தைகளுக்கு கூட பாதிப்பு ஏற்படும். எனவே பிடி ரக விதைகளை நிரந்தரமாக தடை செய்து எதிர்கால சந்ததியினரை பாதுகாக்க வேண்டும். பிடி ரக கத்தரிக்காய் மற்றும் பிற மரபணு மாற்ற பயிர்களை தடுக்க அனைவரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்" என்றார்.
source:thatstamil
0 கருத்துகள்: on "பிடி கத்தரியால் எதிர்கால சந்ததியினருக்கு பாதிப்பு: மருத்துவர்கள் எச்சரிக்கை"
கருத்துரையிடுக