நீதிமன்றங்கள் ஒரு தேசத்தின் சட்டத்தையும், நீதியையும் நிலைநாட்டும் உயர்பீடங்களாகும். ஜனநாயகத்தின் தூண் என்றும் இதனை குறிப்பிடுகிறார்கள்.
உச்சநீதிமன்றம் என்பது இந்நாட்டின் நீதிக்கான கடைசி புகலிடமாகும். நீதிமன்றங்களில் பணியாற்றும் நீதிபதிகள் இதனை நன்கு உணர்ந்து செயலாற்ற வேண்டும்.
வெறும் சட்டங்களில் மட்டும் அறிவை செலுத்தினால் போதாது, சமூகப் பொறுப்புணர்வும், கட்டுக்கோப்பும், சமூக நலனும் நீதிபதிகளுக்கு இருக்கவேண்டிய முக்கிய அம்சங்களாகும். ஆனால் இவற்றையெல்லாம் காற்றில் பறக்கவிட்டுவிட்டு தான் தோன்றித்தனமாக சமூக நலனில் சிறிதும் அக்கறையில்லாமல் சில நீதிபதிகள் நடந்துக்கொள்கின்றனர். அதுவும் உச்சநீதிபீடத்தின் தலைமை நீதிபதியும் இதில் உட்படுகிறார் என்றால் இது எவ்வளவு துர்பாக்கியகரமானது. ஏற்கனவே இயற்கைக்கு முரணான ஒழுக்கச் சீரழிவையும், உயிர்க்கொல்லி நோயையும் பரப்பும் ஓரினச்சேர்க்கைக்கையை ஆதரித்து தீர்ப்பளித்தது டெல்லி உயர்நீதிமன்றம். ஒழுக்கத்தின்பால் அக்கறையுள்ளவர்கள் இதனை எதிர்த்து குரல் எழுப்பினார்கள். ஆனால் நீதிமன்றமும் சரி, ஆட்சியாளர்களும் சரி இதுப்பற்றி கண்டும் காணாமல் இருந்துவிட்டனர்.
தற்ப்பொழுது குஷ்பு என்ற நடிகையொருவரின் வழக்கில் உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி உள்ளிட்ட நீதிமன்ற பெஞ்ச் திருமணத்திற்கு முன் ஆணும் பெண்ணும் செக்ஸ் வைத்துக் கொள்வதில் தவறில்லை எனவும், திருமணம் செய்யாமலேயே இணைந்து வாழலாம் எனவும் தீர்ப்பளித்துள்ளது. இதற்கு உதாரணமாக புராணத்தில் காணப்படும் கிருஷ்ணனின் கதை எடுத்துக்காட்டப்பட்டுள்ளது.
சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பெண்மணி ஒரு பத்திரிகைக்கு ஆபாச போஸ் கொடுத்ததை எதிர்த்து நீதிமன்றத்தில் ஒருவர் வழக்குத் தொடர்ந்தார் அதற்கு நீதிமன்றம் அளித்த தீர்ப்பு என்னவெனில், 'மஹா காளிதாசர் எழுதிய குமாரசம்பவத்தில் பார்வதியின் அங்கலாவண்யங்கள் வர்ணிக்கப்படுகின்றன. இது சரியென்றால் ஆபாச போஸ் கொடுத்தது தவறல்ல' எனத் தீர்ப்பளித்தது.
தற்ப்பொழுது உச்சநீதிமன்ற நீதிபதிகளும் புராண வஸ்திரத்தை கையிலெடுத்துள்ளனர். புராணங்களை ஆதாரமாக எடுத்துக் கொண்டால் விபரீதமான முடிவுகளைத்தான் எடுக்க வேண்டிவரும். ஏனெனில் புராணங்கள் நடைமுறை வாழ்க்கைக்கும், சமூக ஒழுக்கக் கட்டுப்பாட்டிற்கும் உதவாது மாறாக சமூகத்தின் சீரழிவிற்குத்தான் துணைநிற்கும்.
ஆணும் பெண்ணும் திருமணத்திற்கு முன்னால் உடல் ரீதியான உறவுக் கொள்வதற்கும், திருமணம் செய்யாமலேயே இணைந்து வாழவும் கிருஷ்ணனின் லீலா விநோதங்களை உதாரணம் காட்டினால் எதிர்காலத்தில் ஒருவர் ஒருப்பெண்ணை கற்பழித்துவிட்டார் என்ற வழக்கு நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்டால் அது தவறில்லை ஏனெனில் புராணத்தில் தேவேந்திரன் என்று சிலரால் அழைக்கப்படும் புராணத்தின் ரொமாண்டிக் கடவுள் இந்திரன் ரம்பா, ராகினி, பத்மினி போன்ற தேவலோக தேவதாசிகளுடன் கூத்தாடி வெறுப்புற்று பூலோக அகலியை நுகர்ந்து சாபம் பெற்ற பிறகும், பாடம் படிக்காமல் சந்திரசூட முனிவரின் துணைவி ஆனந்தவள்ளியைத் தேடிச் சென்ற சம்பவத்தை நீதிபதிகள் எடுத்துக்காட்டினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
புராணத்தில் தான் தசரதன் என்ற மன்னன் 60 ஆயிரம் மனைவிகளை வைத்திருந்ததாக காணப்படுகிறது. இதுவெல்லாம் நடைமுறை சாத்தியமாகுமா? அல்லது சமூகத்தின் நலனை பாதுகாக்குமா? என்பதையெல்லாம் பற்றி நீதிபதிகளுக்கு எங்கே அக்கறையிருக்கிறது.
சட்டத்தில் இடமில்லை என்றுக்கூறி ஒழுக்கக்கேட்டை ஆதரிக்கும் நீதிபதிகள் சமூகத்தின் நலனை ஏன் கருத்தில் கொள்வதில்லை. பாராளுமன்றத் தாக்குதலை நடத்தினார் எனக் குற்றஞ்சாட்டப்பட்ட கைதுச் செய்யப்பட்ட அப்சல் குரு மீதான குற்றத்தை நிரூபிக்க எந்தவொரு ஆதாரமும் இல்லையென்ற போதிலும், சட்டத்தில் அதற்கு இடமில்லை என்றாலும், பொதுமக்களின் மனசாட்சிக் கூறுகிறது எனக்கூறி அவருக்கு தூக்குத்தண்டனை தீர்ப்பாக அளிக்கமட்டும் சமூகத்தின் மனசாட்சியை கணக்கில் எடுப்பார்களா?
திருமணத்திற்கு தனது மகளோ அல்லது தனது சகோதரியோ உடல் ரீதியான உறவு வைத்துக் கொள்வதையோ அல்லது திருமணம் செய்யாமலேயே இணைந்து வாழ்வதையோ யார் ஒத்துக்கொள்வார்கள்?
தீர்ப்பளித்த நீதிபதிகள் தங்களது குடும்பத்தில் இவ்வாறு நடப்பதை ஒத்துக்கொள்வார்களா?
சினிமா என்ற பெருந்திரள் ஊடகம் இன்று பாலியல் வக்கிரங்களையும், வன்முறைகளையும் சமூகத்தில் பரப்புவதில் முக்கிய பங்காற்றுகிறது. அந்தத் துறையைச் சார்ந்த ஒரு நடிகையின் கருத்தும் அவ்வாறாகத்தானிருக்கும். சினிமா நடிகைகள் கர்ப்பம் தரிப்பதையும், குழந்தை பெறுவதையும் தலைப்புச் செய்தியாக்கும் பத்திரிகைகள் ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்காக குரல்கொடுக்கும் போராட்டங்களை மூடி மறைக்கின்றன.
சமூக அக்கறை கொஞ்சமும் இல்லாமல் வக்கிரங்களை காசாக்குவதற்கு எதனையும் செய்ய தயார் என்ற நிலையிலிருக்கும் பத்திரிகைகள் சில இப்பெண்மணியின் பேட்டியை பெரிதுப்படுத்தியதால் அவருக்கெதிரான போராட்டம் வலுத்தது. அது தொடர்பாக வழக்குகளும் தொடுக்கப்பட்டன.
வெட்கமும் மானமும் மரியாதையும் கொண்டவர்கள் இத்தகைய ஒழுக்கச் சீர்கேட்டை ஒருபோதும் ஆதரிக்கமாட்டார்கள். இதனை ஆதரித்தால் திருமண வாழ்க்கைக்கு என்ன அர்த்தம் உள்ளது?
ஏற்கனவே சீரழிந்துப் போன சமூகநிலை இன்னும் அகல பாதாளத்திற்குத்தான் செல்லும். மனிதனால் உருவாக்கப்பட்ட சட்டத்தினால் இதற்கு உரிய தீர்வை கூற இயலாது. எந்த மார்க்கம் மனிதனையும் ஏனைய படைப்புகளையும் படைத்த வல்ல இறைவனால் வழங்கப்பட்டதோ அம்மார்க்கத்தின் தூதராக அனுப்பப்பட்ட இறைத்தூதர் முஹம்மது(ஸல்...) கூறுகிறார், "ஒவ்வொரு சமூகத்திற்கும் ஒரு ஒழுக்கம் உண்டு. இஸ்லாத்தின் ஒழுக்கம் வெட்கமாகும்" என்று.
சமூக அக்கறையுள்ளவர்கள், ஒழுக்கத்தின்பால் ஈடுபாடுள்ளவர்கள் இம்மார்க்கத்தை சற்று ஏறெடுத்துப் பார்க்கட்டும். இன்னொருமுறை இறைத்தூதர் இவ்வாறு குறிப்பிட்டார்கள், "வெட்கம் இல்லையெனில் நீ எதைவேண்டுமானாலும் செய்துக்கொள்" என்று. ஆம் ஒழுக்கத்தின் பால் அக்கறையில்லாதவர்களுக்கு அவர்கள் ஆட்சியாளர்களானாலும், நீதிபதிகளானாலும் நாடும் நாட்டுமக்களும் எக்கேடுக்கெட்டு குட்டிச் சுவராகிப் போனால் அவர்களுக்கென்ன?
விமர்சகன்
0 கருத்துகள்: on "கனம் கோர்ட்டார் அவர்களே!!"
கருத்துரையிடுக