20 மார்., 2010

பிரேசிலின் துணிச்சல்: அழிவுப்பாதையில் அமெரிக்க ஏகாதிபத்தியம்?

அமெரிக்க ஏகாதிபத்தியம் மனிதகுலத்திற்கெதிரான நாசவேலைகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டுள்ளது என்பதனை பல்வேறு நிகழ்வுகள் நமக்கு எடுத்தியம்புகின்றன.

கடந்த ஆண்டு தோஹாவில் நடைபெற்ற மாநாட்டில் WTO வின் வியாபார ஒப்பந்தங்களின் தொடர்ச்சியாக ஜெனிவாவில் ஒரு நாடகம் நடந்தேறியது. பிரேசில் பருத்திக்கு மானியம் வழங்கிய அமெரிக்காவின் திட்டத்திற்கு எதிராக கொண்டுவந்த தீர்மானத்திற்கு WTO தீர்ப்பு வழங்கியது. இது அமெரிக்காவிற்கு பெருத்த அடியாகும்.

மானியம் வழங்குதல் எப்பொழுதும் தவறல்ல. அது சிறு சிறு அளவில் உற்பத்தி செய்யும் ஏழை விவசாயிகளுக்கு கொடுத்தால் அவர்களது வாழ்க்கை சிறப்புறும். மாறாக,அமெரிக்கா தனது விவசாயத்திற்கு கொடுக்கும் மானியத்தில் மூன்றில் இருபகுதி பருத்திக்கு வழங்கியது. அதுவும் பெரும் பண முதலைகளால் நடத்தப்படும் வியாபார நிறுவனங்களுக்கு மட்டும் மானியம் வழங்கப்பட்டிருக்கிறது.

இதனால் என்ன பிரச்சனை? அமெரிக்கா அவர்களுடைய மக்களுக்கு தானே வழங்குகிறது? இதில் என்ன கவலை வேண்டி கிடக்கிறது என்றால் அங்கு தான் நாம் கவலைப்பட வேண்டி உள்ளது. வளர்ந்து வரும் மற்றும் ஏழை நாடுகளின் உற்பத்தி மற்றும் பொருளாதாரம் இதன் மூலம் பலமடங்கு தாக்குதலுக்கு உள்ளாகிறது. பொருளாதாரத்தில் வளமான நாடுகளை ஆயுதத்தாலும் மற்ற ஏழை நாடுகளை பொருளாதாரத்தாலும் தாக்குவது அமெரிக்காவின் வாடிக்கை. அதில் வேடிக்கை என்னவெனில், இக்கொடுமைகளை செய்துகொண்டு ஏழை ஆஃப்ரிக்கா நாடுகளுக்கு பண உதவி செய்வதாக முதலைக் கண்ணீர் வடிப்பதுதான்.

அமெரிக்காவின் இந்த பகுதி மானியம் எண்ணிக்கைகளை ஒட்டு மொத்தமாக நோக்கினால், 2001 ல் வழங்கிய மானியம் பர்கினா ஃபாசோ என்ற நாட்டின் ஒட்டு மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP-Gross domestict product)யை விட அதிகமாகும். (பர்கினாஃபசோ என்ற நாடு மேற்கு ஆஃப்ரிக்காவின் 6 நாடுகள் சூழ இருக்கும் நாடு இங்கு வாழும் மக்களின் 60% மேலாக முஸ்லிம்கள் என்பது குறிப்பிடத்தக்கது.) இந்த நாட்டின் பெரும்பான்மையான மக்கள்(20,00,000 நபர்கள்) பருத்தி விவசாயத்தையே நம்பி வாழ்கின்றனர். 50%மக்கள் வறுமை கோட்டிற்கு கீழே வாழ்கின்றனர்.
அமெரிக்கா வழங்கிய மானியமானது ஆஃப்ரிக்கா நாடுகளுக்கு வழங்கும் நிதியுதவியை விட மூன்று மடங்கு கூடுதலாகும். குழந்தையை கிள்ளி விட்டு தொட்டிலை ஆட்டுவது போலாகும். அமெரிக்கா வழங்கும் இந்த மானியத்தால் பெறும் பணக்கார முதலைகள் தங்களது பருத்தி ஏற்றுமதிக்கான விலையை உலகளாவிய சந்தைவிலையை விட குறைவாக கொடுக்க முன்வருவதால் இந்த ஏழைநாடுகளும் அடிமாட்டு விலைக்கும் குறைவாக கொடுத்து தங்களது உற்பத்தி செய்யும் விலைக்கே விற்க வேண்டிய சூழ்நிலைக்கே தள்ளப்படுகின்றனர்.

ஆனால்,இந்த ஏழை நாடுகள் அமெரிக்காவிற்கு எதிராக எதுவும் செய்ய இயலாத சூழல். இவ்வழக்கை நடத்துவதற்கு பெருமளவில் பணம் தேவைப்படும். பின்னர் அப்படியே வழக்கு படுத்துவிடும் WTO எடுக்கும் முடிவுக்கு அமெரிக்கா கட்டுப்படுமா என்பது சந்தேகம். எல்லாவற்றிற்கும் மேலாக அமெரிக்கா அந்த நாடுகளுக்கு வழங்கி வரும் நிதியுதவியை நிறுத்திவிடும். இதற்கெல்லாம் பயந்து அந்த ஏழை நாடுகள் அமெரிக்காவிற்கு எதிராக எதுவும் செய்ய இயலாமல் வாய்மூடி அமைதி காத்து வருகின்றனர்.

ஆனால்,பிரேசில் இதையெல்லாம் பொருட்படுத்தாமல் W.T.O வில் தனது வழக்கை 2004 ல் தொடங்கியது. சந்தோசமான விஷயம் என்னவென்றால் வளர்ந்து வரும் நாடாகிய இந்தியாவும் பிரேசிலுக்கு ஆதரவாக களத்தில் இறங்கியது தான். பிரேசில், வெனிசுலா, கியூபா,போன்ற நாடுகள் தங்களால் இயன்றவரை அமெரிக்காவின் பொருளாதார ஏகாதியபத்திற்கு எதிராக போராடிவருகின்றன.

இதனால் என்ன இலாபம் நமக்கு, ஏழை நாடுகளுக்கு கொஞ்சம் தைரியம் கிடைத்துள்ளது. சிறிய W.T.O உறுப்பினர்களுக்கு விழிப்புணர்வை உருவாக்கியுள்ளது.

தற்ப்பொழுது பிரேசில் அமெரிக்கப் பொருட்களுக்கு பல மடங்கு வரி விதித்துள்ளது. இதன் காரணமாக அமெரிக்கப் பொருட்களை கொள்ளை விலைக் கொடுத்து வாங்க யார் முன்வருவார்கள் .இது ஒரு மறைமுக பொருளாதாரத் தடையாகும். இனி அமெரிக்கா வைத்துள்ள காப்புரிமை பெற்ற மருந்துகளை தானாக பிரேசில் தயாரிக்கலாம். அமெரிக்கா எதுவும் செய்ய இயலாது. இது வளர்ந்து வரும் நாடுகளுக்கு ஒரு புதிய வழிமுறைகளை வகுத்து கொடுத்துள்ளது.

எல்லாவற்றையும் விட இது அமெரிக்காவின் தோல்வி என்றே கருத வேண்டும். கடந்த ஆண்டு.சீனாவின் இரப்பர் டயர்களுக்கு அமெரிக்கா விதித்த வரிக்கு எதிராக அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் இறைச்சிகளின் மீதான சலுகைகளை சீனா ரத்து செய்தது. எல்லா முனைகளிலும் அமெரிக்காவிற்கு இது போன்ற தோல்விகள் ஏற்படும் பொழுது, அதாவது ஆஃப்கான்,ஈராக் போன்ற முஸ்லிம் நாடுகளில் போராளிகளுக்கெதிராக அமெரிக்கா தீட்டிய திட்டங்கள் முற்றிலும் நிறைவேறாமல் தோல்விகள் தொடர்கின்றன.

மனிதகுலத்திற்கு எதிரான திட்டங்களை ஒன்று அமெரிக்கா விட வேண்டும். இல்லையேல் எல்லா கொடுங்கோல் வல்லரசுகளுக்கும் ஏற்பட்ட முடிவே அமெரிக்காவுக்கும் ஏற்படும். பொறுத்திருந்து பார்ப்போம்!
இன்ஷா அல்லாஹ்!
Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "பிரேசிலின் துணிச்சல்: அழிவுப்பாதையில் அமெரிக்க ஏகாதிபத்தியம்?"

கருத்துரையிடுக