ஜெருசலம்/வாஷிங்டன்:சில தினங்களாக நடைபெற்று வந்த அமெரிக்க இஸ்ரேலுக்கிடையேயான பிரச்சனைகள் முடிவுக்கு வந்ததாக இரு நாடுகளும் அறிவித்துள்ளன.
அதேவேளையில் இஸ்ரேல் மீண்டும் 300 குடியேற்ற வீடுகளை கட்டப்போவதாக அறிவித்துள்ளது. இஸ்ரேலின் அதிகாரப்பூர்வ இணையத் தளத்தில்தான் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
வடகிழக்கு ஜெருசலத்தில்தான் 309 வீடுகள் நிர்மாணிக்கப் போவதாக இணையதளம் கூறுகிறது. இதில் அசாதாரணமான ஒன்றுமில்லை என்று ஜெருசலம் நகராட்சி செய்தித் தொடர்பாளர் ஸ்டீஃபன் மில்லர் கூறுகிறார்.
இதற்கிடையே மேற்குக்கரைக்கு செல்லும் வழியை இஸ்ரேல் மீண்டும் திறந்துள்ளது. ஃபலஸ்தீன முஸ்லிம்களின் கடும் எதிர்ப்புடன் களமிறங்கியதே இதற்கு காரணமாகும். பாதுகாப்புக் காரணமாகத்தான் இந்நடவடிக்கை என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
மேலும் அல் அக்ஸா மஸ்ஜிது சுற்றுவட்டாரத்திற்குள் நுழைய ஃபலஸ்தீன முஸ்லிம்களுக்கு விதித்த தடையை இஸ்ரேல் வாபஸ் பெற்றது. இதனை காவல்துறை செய்தித் தொடர்பாளர் மிக்கி ரோஸன் ஃபெல்ட் அறிவித்துள்ளார். மஸ்ஜிதிற்குள் செல்லவும் அனுமதியளிக்கப் பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
கடந்த 5 தினங்களுக்கு முன்பு இஸ்ரேல் மேற்கு கரையின் எல்லையை மூடியதோடு மஸ்ஜிதுல் அக்ஸாவிற்குள் செல்ல 50 வயதிற்கு மேற்பட்டோரை மட்டுமே அனுமதித்தது. இதனை எதிர்த்து ஃபலஸ்தீன முஸ்லிம்கள் எதிர்ப்புதினம் கடைபிடித்தனர். இதனால் பல இடங்களில் ஃபலஸ்தீன முஸ்லிம்களுக்கும், இஸ்ரேலுக்கும் இடையே மோதல்கள் நடந்தன. அமெரிக்க துணை அதிபர் ஜோபைடன் இஸ்ரேலுக்கு சுற்றுப்பயணம் மேற்க்கொண்டதற்கிடையில் இஸ்ரேல் குடியேற்ற வீடுகளை கட்டப்போவதாக அறிவித்ததைத் தொடர்ந்து இஸ்ரேல் அமெரிக்காவிற்கு இடையே ஏற்பட்ட ஊடல் நாடகம் என்றே கருதப்படுகிறது. இருநாடுகளுக்கிடையே வாக்குவாதம் தொடர்வதற்கிடையே திடீரென அமெரிக்காவின் நிலைப்பாட்டை மாற்றினார் ஹிலாரி கிளிண்டன். 'இஸ்ரேலின் பாதுகாப்பு விவகாரத்தில் அமெரிக்காவிற்கு உறுதியான பொறுப்பு உள்ளது' என ஹிலாரி கிளிண்டனின் திடீர் அறிவிப்பு இஸ்ரேலுக்கெதிரான அமெரிக்காவின் ஊடல் நாடகத்தை முடிவுக்குக் கொண்டு வந்தது.
இஸ்ரேலுக்கும் அமெரிக்காவிற்குமிடையேயான உறுதியான உறவை புகழ்ந்த ஹிலாரி ஏற்கனவே இஸ்ரேல் மீதான குற்றச்சாட்டுகளை அப்படியே விழுங்கிவிட்டார். இதனைத் தொடர்ந்து அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமாவுடன் தொலைபேசியில் அளவளாவிய இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு அமெரிக்காவிற்கு புகழாரம் சூட்டினார். ஒபாமாவின் இஸ்ரேல் குறித்த நிலைப்பாட்டிற்கு நன்றித்தெரிவித்த நெதன்யாகு, இருநாடுகளுக்கிடையேயான உறவை வலுப்படுத்தப்போவதாக அறிவித்தார் என ராய்டர்ஸ் செய்தி நிறுவனம் கூறுகிறது.
ஊடலும் கூடலும் அமெரிக்காவிற்கும் இஸ்ரேலுக்கும் சகஜமான நாடகம் என்று மக்கள் புரிந்துக்கொண்டார்கள்.
செய்தி:மாத்யமம்
0 கருத்துகள்: on "அமெரிக்கா-இஸ்ரேல்: ஊடல் நாடகம் முடிவுற்றது"
கருத்துரையிடுக