ஸ்ரீநகர்:அப்பாவி இளைஞர் கொல்லப்பட்டதைக் கண்டித்து போராட்டம் நடத்தியவர்கள் மீது போலீஸார் கண்ணீர் புகைக்குண்டுகளை வீசி கூட்டத்தினரைக் கலைத்தனர்.
ஜம்மு-காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரிலிருந்து 55 கிலோமீட்டர் தூரத்தில் சோபோர் என்ற பகுதி உள்ளது. இப்பகுதியில் செவ்வாய்க்கிழமை மாலை தீவிரவாதிகளுக்கும், போலீஸாருக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சண்டையில் கிராமத்தைச் சேர்ந்த இளைஞர் தன்வீர் அஹமது உள்பட 2 பேர் கொல்லப்பட்டனர். 4 பேர் காயமடைந்தனர்.
இந்நிலையில் அப்பகுதியைச் சேர்ந்த 300 பேர், இச்சம்பவத்தைக் கண்டித்து அப்பகுதி போலீஸ் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். பாதுகாப்பு வீரர்களுக்கு எதிராகவும் அவர்கள் கோஷம் எழுப்பினர்.
போலீஸார் வந்து அவர்களை சமாதானம் செய்தபோதும் கூட்டத்தினர் கலைந்து செல்லவில்லை.இதையடுத்து தடியடி நடத்தி போலீஸார் கூட்டத்தைக் கலைக்க முயன்றனர். இதைத் தொடர்ந்து போலீஸார் மீது கற்களை வீசி போராட்டக்காரர்கள் தாக்குதல் நடத்தினர். கூட்டத்தினர் கலைந்து செல்லாமல் போகவே கண்ணீர் புகைக்குண்டுகளை போலீஸார் வீசி கூட்டத்தினரைக் கலைத்தனர்.
இச்சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ஆனால் நிலைமை கட்டுக்குள் உள்ளது என்று போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர். அப்பகுதியிலுள்ள கடைகள், வர்த்தக வளாகங்கள் மூடப்பட்டிருந்தன.
source:dinamani
0 கருத்துகள்: on "கஷ்மீர் அப்பாவி இளைஞர் கொல்லப்பட்ட சம்பவம்: போராட்டம் நடத்தியவர்கள் மீது கண்ணீர் புகைக்குண்டு வீச்சு"
கருத்துரையிடுக