அணு குண்டு தயாரிப்பதற்கான திட்டத்தில் ஈரான் ஈடுபட்டு வருகிறது என்று குற்றம் சாற்றிவரும் அமெரிக்கா, அதன் அணு சக்தி மையத்தைத் தகர்க்கும் குண்டுகளை இந்தியப் பெருங்கடலில் உள்ள தனது இராணுவத் தளத்திற்கு அனுப்பி வைத்துள்ளதாக பிரிட்டன் நாளிதழ் தெரிவித்துள்ளது.
லண்டனில் இருந்து வெளிவரும் சண்டே ஹெரால்ட் எனும் நாளிதழ் இச்செய்தியை வெளியிட்டுள்ளது. இச்செய்தியின்படி, பூமிக்கு அடியில் அமைக்கப்பட்டுள்ள ஈரானின் அணு சக்தி மையங்களை குண்டு வீசி அழிக்க, பங்கர் பஸ்டர்ஸ் என்றழைக்கப்படும், பூமிக்குள் ஊடுருவி பின் வெடிக்கும் சக்தி வாய்ந்த குண்டுகளை இந்தியப் பெருங்கடலில் உள்ள டீகோ கார்சியா தீவில் உள்ள தனது இராணுவத் தளத்திற்கு அமெரிக்கா அனுப்பி வைத்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
கலிஃபோர்னியாவின் கான்கர்ட் துறைமுகத்திலிருந்து 10 கப்பல்களில் புளூ-110, ஸ்மார்ட் என்றழைக்கப்படும் சக்தி வாய்ந்த குண்டுகள் 195ம், 2,000 பவுண்ட் எடை கொண்ட புளூ-117 குண்டுகளும் கப்பலில் ஏற்றப்பட்டு இந்தியப் பெருங்கடலில் உள்ள டீகோ கார்சியா தீவிலுள்ள அமெரிக்க கடற்படைத் தளத்திற்கு அனுப்பப்பட்டுள்ளன என்றும், இதனை குண்டு வீச்சு விமானங்களில் ஏற்றிச் சென்று ஈரான் அணு உலையை அமெரிக்கா தாக்கியழிக்கத் திட்டமிட்டுள்ளது என்றும் அந்நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
ஈரானின் அணு ஆயுத முயற்சியை முறியடிக்க அதன் அணு மையங்கள் மீது தாக்குதல் நடத்துவோம் என்று இஸ்ரேலும் அமெரிக்காவும் தொடர்ந்து கூறி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
source:ndtv,webdunia
0 கருத்துகள்: on "ஈரான் அணு சக்தி மையத்தை குண்டு வீசித் தகர்க்க அமெரிக்கா திட்டம்?"
கருத்துரையிடுக