9 மார்., 2010

முலாயம், லாலு கோரிக்கை நியாயமானதே!

மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவில் பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையின மகளிருக்கென தனித் தனி இட ஒதுக்கீடு கண்டிப்பாக தேவை என்று லாலு பிரசாத் யாதவ், முலாயம் சிங் யாதவ் என்ற தலைவர்கள் கோருவதில் சற்று நியாயம் இருக்கத்தான் செய்கிறது என்பதை கூர்ந்து நோக்கினால் புரியும்.

இந்திய அரசியல் மகா வினோதமானது. மதச்சார்பு, ஜாதி சமயற்ற சமுதாயம் காண வேண்டும் என்று அத்தனை கட்சிகளுமே பேசுவார்கள். ஆனால், முழுக்க முழுக்க ஜாதிகளை அடிப்படையாகக் கொண்டுதான் ஒவ்வொரு அரசியல் கட்சியும் இயங்குகிறது காங்கிரஸ் உள்பட.

இந்த நேரத்தில்தான் இப்போது மகளிர் இட ஒதுக்கீடு மசோதா விஸ்வரூபம் எடுத்துள்ளது. இந்த மசோதா குறித்த சிந்தனை ராஜீவ் காந்தி காலத்தில்தான் ஏற்பட்டது.

இருப்பினும் 1996ம் ஆண்டுதான் முதல் முறையாக மசோதா உருவாக்கப்பட்டு தேவேகெளடா ஆட்சியில் ராஜ்யசபாவில் இது அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால் அறிமுக நிலையிலேயே கடும் எதிர்ப்பு கிளம்பவே அப்படியே கிடப்பில் போடப்பட்டது.

பின்னர் பாஜக ஆட்சியில் இருமுறை நாடாளுமன்றத்தின் பக்கம் இது எட்டிப் பார்த்தது. இருப்பினும் பிரயோஜனம் இல்லை.

இப்படியாக கடந்த 14 ஆண்டு காலமாக இழுத்துக் கொண்டும், பறித்துக் கொண்டும் இருக்கிறது இந்த மசோதா. முலாயம் சிங் யாதவ், லாலு பிரசாத் யாதவ், சரத் யாதவ், மாயாவதி, ராம் விலாஸ் பாஸ்வான் ஆகியோர்தான் இந்த மசோதாவுக்கு கடும் எதிர்ப்பாக இருப்பவர்கள்.

இதற்கு அவர்கள் சொல்லும் காரணம்; தற்போதைய வடிவில் இந்த மசோதாவை நிறைவேற்றினால் அது நிச்சயம் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, சிறுபான்மையின பெண்களுக்கும், படிக்காத, பாமரப் பெண்களுக்கும், கிராமப்புற மகளிருக்கும் பெரிய அளவில் உதவாது.

மாறாக அவர்கள் சுத்தமாக அரசியல் களத்திலிருந்தே அகற்றப்படும் நிலை ஏற்பட்டு விடும் அபாயமே அதிகம். படித்த, நகர்ப்புற பெண்கள், ஆதிக்க ஜாதியினர்தான் அதிக அளவில் மக்கள் பிரதிநிதிகளாக வரக் கூடிய நிலையை இது ஏற்படுத்தி விடும் என்பதே இவர்கள் தெரிவிக்கும் அச்சம்.

இதில் சற்று உண்மை இருக்கத்தான் செய்கிறது. இவர்கள் சொல்வது அப்படியே நடந்து விடாது என்று எடுத்துக் கொண்டாலும் கூட.

இன்றைய அரசியல் நிலவரம் என்ன. பெண்களுக்கு எத்தனை கட்சிகள் முக்கியத்துவம் கொடுக்கின்றன. எத்தனை பெண் எம்.பிக்கள், எம்.எல்.ஏக்கள் உள்ளனர் என்று பார்த்தால் மிகப் பெரும் ஏமாற்றமே ஏற்படுகிறது.

அது பழம் பெரும் கட்சியான காங்கிரஸாக இருந்தாலும் சரி, திமுகவாக இருந்தாலும் சரி, அதிமுகவாக இருந்தாலும் சரி, பாஜகவாக இருந்தாலும் சரி எந்தக் கட்சியுமே அதிக அளவிலான மக்கள் பிரதிநிதிகளை கொண்டிருக்கவில்லை. பெண்களுக்கு சீட் கொடுப்பதும் கிடையாது.

இதுதான் உண்மை. இதை மாற்றத்தான் இந்த மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவே கொண்டு வரப்பட்டுள்ளது.

தற்போதைய வடிவில் மசோதாவை நிறைவேற்றி சட்டமாக்கினால் பெண்களுக்கு 33 சதவீத இடத்தை ஒவ்வொரு மாநில சட்டசபைக்கும், நாடாளுமன்றத்திற்கும் ஒதுக்கியாக வேண்டும்.

தற்போதைய மசோதா சட்டமானால் லோக்சபாவில் 181 இடங்களில் பெண்கள் உறுப்பினர்களாக இருப்பார்கள். இப்போது 60க்கும் குறைவான உறுப்பினர்களே பெண்கள் ஆவர்.

இந்த சட்டம் அமலுக்கு வந்தால் பெண்களுக்கு ஒவ்வொரு கட்சியும் இட ஒதுக்கீடு கொடுத்தாக வேண்டும். அப்படி வரும்போது கிராமப் பகுதி, ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த பெண்களுக்கு எந்த அளவுக்கு சீட்கள் தரப்படும் என்பது சந்தேகமே.

படித்த, நகர்ப்புற, பணக்கார பெண்களே பெருமளவில் சீட்களைப் பிடிக்கும் வாய்ப்பு உள்ளதை யாரும் மறுக்க முடியாது.

எனவே தான் இட ஒதுக்கீட்டுடன் கூடிய மசோதாவை லாலு, முலாயம் ஆகியோர் கோருகின்றனர். இப்படிச் செய்வதால் சமூகத்தின் அனைத்துப் பிரிவு பெண்களுக்கும் சீட் கிடைக்கும் வாய்ப்பு உருவாகும். மொத்தத்தில் பெண்கள் சமூகத்தின் அனைத்துப் பிரிவினரும் அரசியல் நீரோட்டத்தில் சமத்துவப்படுத்தப்படும் சூழல் உருவாகும் என்கின்றனர் லாலுவும் முலாயமும்.
source:thatstamil

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "முலாயம், லாலு கோரிக்கை நியாயமானதே!"

கருத்துரையிடுக