மார்ச் 8ஆம் தேதி வழக்கம் போல் மீண்டும் ஒரு மகளிர் தினம் நம்மைக் கடந்து சென்றாலும் இம்முறை அந்த தினத்திற்கு ஒரு சிறப்பு உண்டு. சர்வதேச அளவில் மகளிர் தினம் கடைபிடிக்கத் துவங்கி 100 வருடங்கள் பூர்த்தியாகின்றன.
1910 ஆம் ஆண்டு கோபன்ஹெகனில் வைத்து நடைபெற்ற முதல் சர்வதேச மகளிர் தின மாநாடுதான் மார்ச் 8-ஆம் தேதியை சர்வதேச மகளிர் தினமாக பிரகடனப்படுத்தியது. இந்த தினத்திற்கு மற்றொரு முக்கியத்துவம் வாய்ந்த சிறப்பும் உண்டு.
1911 ஆம் ஆண்டு நியூயார்க்கில் ஒரு ஆடை தயாரிக்கும் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீவிபத்தில் 140 பெண் தொழிலாளர்கள் இறந்துபோயினர். பெண்கள் பணிபுரியும் இடங்களில் போதுமான பாதுகாப்பு வழங்கப்படுவது இல்லை என்ற குற்றச்சாட்டு எழுந்த காலக்கட்டத்தில் தான் இச்சம்பவம் நிகழ்ந்தது. பெண்களின் தலைமையில் நியூயார்க்கை உலுக்கிய போராட்டம் நடந்ததற்கு இச்சம்பவம் முக்கிய காரணமானது. பெண்கள் மாநாட்டில் எடுத்த முடிவை விட மகளிர் தினத்தில் பெண் தொழிலாளர்கள் இச்சம்பவத்தை தான் நினைவுக்கூற அதிகம் விரும்பினர்.
19 ஆம் நூற்றாண்டின் கடைசியிலும், 20 ஆம் நூற்றாண்டின் துவக்கத்திலும் சோசியலிச அதாவது மார்க்சீய பெண்ணீயத்தின் காலக்கட்டமாக இருந்தது. பெண் விடுதலை அரசியலுக்கு அஸ்திவாரமிட்ட ஃபெடரிக் ஏங்கல்ஸின் காலக்கட்டத்திலிருந்து சோசியலிச பெண்ணீய கொள்கையின் அடிப்படையில் பெண்ணீய இயக்கத்தை வழி நடத்திச் சென்றது ஜெர்மன் சோசியலிஸ்டான க்ளாரா ஸெத்கினும் வேறு சிலருமாகும். ரஷ்ய புரட்சியின் காலக்கட்டத்தில் போல்ஷெவிக்(Bolshevik)ஸ்டான அலக்ஸாண்ட்ரா கொல்லண்டாவின் தலைமையில் சோசியலிஸ்டு பெண்ணீயவாதிகள் தொடர்ந்து செயல்பட்டுவந்தாலும் ரஷ்யாவில் கம்யூனிஸ்டுகள் அதிகாரத்திற்கு வந்தபொழுது பெண்விடுதலை அரசியலை எவரும் கண்டுக்கொள்ளவில்லை மட்டுமல்ல மார்ச் 8 மறக்கடிக்கவும்பட்டது.
20 ஆம் நூற்றாண்டின் துவக்கத்திலிருந்த சோசியலிச பெண்ணீயவாதமும், 1960 களில் உருவான தீவிர பெண்ணீயவாதமும் கொள்கைரீதியாக மாறுபட்டாலும் மத்திய தர நிலைபாடுகள் தான் அவற்றில் ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருக்கின்றன என்பது இவ்வியக்கங்களின் பிற்கால சூழல் எடுத்தியம்புகிறது.
ஜாதிரீதியாகவும், குல ரீதியாகவும் சாதாரணமக்கள் அனுபவித்து வரும் சுதந்திரமின்மை, சுரண்டல் போன்ற பிரச்சனைகளைப் போல் தான் பெண்களும் அனுபவிக்கின்றார்கள் என்பது சோசியலிச பெண்ணீயவாதிகளின் கருத்து என்றால் தீவிர பெண்ணீயவாதிகளின்(radical feminist) கருத்து முற்றிலும் மாற்றமான ஒன்றாகும். பெண்கள் எந்த பிரிவைச்சார்ந்திருந்தாலும் பெண்கள் என்ற நிலையில் அவர்கள் அனுபவிக்கும் பிரச்சனைகளுக்குத்தான் முன்னுரிமை என்றும் பால் ரீதியான வேறுபாடுதான் அடிமைத்தனத்திற்கு காரணம் என்பது அவர்களுடைய வாதம்.
சோசியலிஸ பெண்ணீயவாதத்தின் காலக்கட்டத்திற்கு பிறகு நீண்ட இடைவேளைக்குப்பிறகுதான் தீவிர பெண்ணீயவாதம் உருவெடுத்தது. இந்த பெண்ணீயவாத முன்னேற்றமடைந்த காலக்கட்டத்தை அமெரிக்க ஏகாதிபத்தியம், சோவியத்தின் சோசியலிஸ பாசிஸம் ஆகியவற்றின் காலக்கட்டம் என்று சிறப்பித்துக் கூறுவதுண்டு.
20 ஆம் நூற்றாண்டில் உலகின் பெரும்பாலான மக்கள் அனுபவித்த இரண்டு வகையிலான அதிகார பீடங்கள் இவை. தீவிர பெண்ணீயம் மேற்க்கொண்ட துணிச்சலான எதிர்ப்புப் போராட்டத்திற்கு இந்த சூழல் பெரிதும் உதவியது எனக்கூறலாம்.
1960 களில் தீவிர பெண்ணீயம் அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு கடும் சவாலை ஏற்படுத்தியது. எல்லாத் துறைகளிலும் ஆண்களுக்கு சமமாக பெண்களுக்கு சம உரிமை வழங்கப்பட வேண்டுமென்பதில் இவ்வமைப்பினர் உறுதியாக இருந்தனர். தொழிலாளி வர்க பெண்களும், கறுப்பு இனப்பெண்களும் அவர்கள் அனுபவித்து வரும் பிரச்சனைகளின் அடிப்படையில் தீவிர பெண்ணீயவாதிகளுக்கு உறுதுணையாக இருந்தனர். குடியுரிமை பணியாளர்களும், மனித உரிமை ஆர்வலர்களும் பெண்ணீயவாதிகளுடன் இணைந்து நின்றனர். அதேவேளையில் பெண்ணீயவாதிகளின் தலைமை தொடர்ந்து மத்திய தர வர்க்கத்திடமே இருந்து வந்தது. சமூக வாழ்விலும், பணிபுரியும் இடங்களிலும் பால் ரீதியான பாகுபாட்டை ஓரளவு இல்லாமலாக்கவோ அல்லது குறித்து புனர் பரிசோதனைச் செய்யவோ தீவிர பெண்ணீயவாதத்தால் முடிந்துள்ளது என்பது மறுக்கவியலாது. ஆனால் தீவிர பெண்ணீய வாத இயக்கத்திற்கு ஏற்படப்போகும் அரசியல் சூழல் ஆரம்ப முதலே காணத் துவங்கியது.
அமெரிக்க தீவிர பெண்ணீயவாதத்தின் அடிச்சுவடுகளை பின்பற்றி இதர நாடுகளில் உருவான தீவிர பெண்ணீயவாத இயக்கங்களுக்கு இதே சூழல்தான் சம்பவித்தது.பணிபுரியும் இடங்களில் ஆண்களுக்கு வழங்கப்படும் சம்பளத்தில் பாதியளவே பெண்களுக்கு கிடைத்தது. இதன் காரணமாக சமூகத்திலும், குடும்பத்திலும் பெண்கள் பொருளாதார ரீதியாக பிற்படுத்தப்பட்டனர். கணவனும், மனைவியும், குழந்தைகளும் இன்புற்றிருந்த குடும்ப வாழ்வில் தீவிர பெண்ணீயவாதத்தால் யாருக்கு செல்வாக்கு அதிகம் என்ற போட்டியும், பொறாமையும் கணவன் மனைவிக்கிடையே உருவாகி குடும்பவாழ்வு கலகம் நிறைந்ததாக மாறிப்போனது. குழந்தைகள் கவனிப்பாரற்று தனித்துவிடப்பட்டனர்.
1970 களின் கடைசியிலும், 80 களின் ஆரம்பத்திலும் பரவலான அளவில் அதிகமான விவகாரத்துகள் அமெரிக்காவில் நடந்தேறியது. அதிகாரவர்க்கத்திற்கு எதிராக நடத்தவேண்டிய போராட்டங்களெல்லாம் தனிநபர்களுக்கு மத்தியில் நடத்தப்படும் போராட்டமாக சுருங்கிப் போனது. பெண்ணீயவாதிகளுக்கெதிராக அமெரிக்க வலதுசாரிகள் கொண்டிருந்த எதிர்ப்புணர்விற்கு வலுவூட்டுவதாக இருந்தது பெண்ணீயவாதிகள் சுயமாக உருவாக்கிய இத்தகைய சூழல்கள். குடியுரிமை ஆர்வலர்களும், மனித உரிமை ஆர்வலர்களும், கறுப்பு இனத்தவரும் பெண்ணீயவாதிகளிடமிருந்து மெதுவாக கழன்றுக் கொண்டனர்.
1970களிலும், 80 களிலும் பெண்களின் முன்னேற்றத்திற்கு மையமாக செயல்பட்டது கல்லூரி வளாகங்களாகும்(campus). ஆனால் அக்காலக்கட்டத்தைவிட பன்மடங்கு பெண்கள் கல்லூரி வளாகங்களிலும், அலுவலகங்களிலும், இதர சமூக தளங்களிலும் பங்காற்றியபிறகும் பெண்ணீயவாத இயக்கம் ஏன் தகர்ந்து போனது?
1960 முதல் 1980 வரையிலான காலக்கட்டத்தில் சிறிதளவு ஆதாயம் பெண்ணீயவாத இயக்கத்தால் பெண்களுக்கு கிடைத்த போதிலும் இன்றளவும் துன்பத்தையும், துயரத்தையும் உலகின் பல்வேறு இடங்களிலும் அனுபவித்து வரும் சிறுபான்மையின பெண்களும், தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட பெண்களுக்கும் பெண்ணீயவாத இயக்கங்கள் என்ன செய்தன. செர்பிய வெறியர்களின் வன்புணர்வுக்கு இலக்காகி வாழ்க்கையை துயரத்துடன் கழித்துவரும் போஸ்னிய முஸ்லிம் சகோதரிகள், அமெரிக்க ஏகாதிபத்தியத்தால் பொய்வழக்கு சுமத்தி சிறையிலடைக்கப்பட்டுள்ள டாக்டர் ஆஃபியா சித்தீகி, அமெரிக்கா உள்ளிட்ட ஏகாதிபத்திய ஆக்கிரமிப்பு படையினரின் தாக்குதலால் வாழ்விழந்த ஈராக், ஆப்கான் பெண்கள், சியோனிஷ தாக்குதலுக்கு இரையாகும் ஃபலஸ்தீன பெண்கள், குழந்தைகள் என சர்வதேச ரீதியாகவும் இந்தியாவில் கஷ்மீரில் பெண்களுக்கு எதிராக நடைபெறும் அரசுப் படைகளின் பயங்கரவாதத்தின் உச்சகட்டம்தான் ஷோபியானில் இரண்டும் முஸ்லிம்பெண்கள் வன்புணர்ச்சிச் செய்து கொல்லப்பட்ட நிகழ்வு.
குஜராத் மாநிலத்தில் சங்க்பரிவார ஹிந்துத்துவா பாசிஸ்டுகளால் கொடும் வன்புணர்வுக்கு ஆளாகி உயிரிழந்தோரும், உயிர் இருந்தும் நடைபிணங்களாக வாழும் பெண்கள் தான் எத்தனை பேர்?. கேரளாவில் தூசிப்படிந்துப்போன வழக்கை தட்டியடுத்து பெண் என்றும் பாராமல் கைதுச் செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்ட சூஃபியா மஃதனி, பெண்கள் தாங்கள் விரும்பியவரை மணக்க விரும்பியதை லவ் ஜிஹாத் என்று அவதூறு கூறி அவர்களின் சுயவிருப்பங்களுக்கு தடைச்செய்த கேரள உயர்நீதிமன்றம், கேரளாவில் நடைபெற்ற பெண்கள் மாநாட்டிற்கு பெண் மனித உரிமை ஆர்வலர் யுவானி ரிட்லிக்கு விசா தர அரசு மறுத்தது இத்தகைய பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளுக்கும், நீதி மறுப்புக்கும் பெண்ணீய அமைப்புகள் ஏன் மெளனம் சாதிக்கின்றன? என்பது மிகப்பெரும் கேள்வியாகும்.
இந்நிலையில் பெண்களுக்கு பாராளுமன்றத்திலும், மாநில சட்டமன்றங்களிலும் 33 சதவீத இடஒதுக்கீட்டை வழங்கினால் பெண்களின் வாழ்வு வளமாகும் எனக்கூறுவது நகைப்பிற்கிடமானது. பெண்களின் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று கோரும் கட்சிகளின் தீர்மானம் எடுக்கும் சபைகளில் உரிய முக்கியத்துவம் வழங்காதவர்கள் தான் இடஒதுக்கீட்டைக் குறித்து பேசுகிறார்கள். அவ்வாறு இடஒதுக்கீடு பெண்களுக்கு வழங்கும் பொழுது ஒடுக்கப்பட்ட சிறுபான்மையின, தாழ்த்தப்பட்ட, அட்டவணைப் படுத்தப்பட்ட ஜாதிப் பெண்களுக்கு உரிய உள் ஒதுக்கீடு வழங்கவேண்டும் என்று பல்வேறு அமைப்பினர் கோரும்பொழுது அரசியல் கட்சிகள் ஏன் மெளனம் சாதிக்கின்றன.
பெண்களுக்கு இடஒதுக்கீடு வழங்குவதன் நோக்கம் அவர்களை முன்னேற்றுவதல்ல அதிகாரபீடத்தில் உயர்ஜாதி ஆதிக்கத்தை நிலை நிறுத்துவதாகும்.
பெண்களை தெய்வமாக மதிக்கிறோம் என்று கூறும் ஒரு மதத்தில்தான் பெண்களுக்கு எதிரான சுரண்டல்கள் அதிகம் நடைபெறுகிறது. பால் மணம் மாறாத குழந்தைகளுக்கு பால்யவிவாகம் என்ற குழந்தை பருவத்திலேயே திருமணம் செய்து வைத்து பரிதவிக்க விடுவதும், கணவனை இழந்த கைம்பெண்களை மொட்டையடித்து மூளியாக்கி மூலையில் உட்கார வைப்பதும், ஒருக்காலக்கட்டத்தில் கணவனின் சிதையிலேயே பெண்ணையும் பலாத்காரமாக பிடித்துத்தள்ளி பிணமாக்கும் பயங்கரமும் நடந்தேறியது.
ஆனால் இவற்றிற்கெதிரான போராட்டங்கள் எல்லாம் நாளடைவில் சுருதி இறங்கிப் போயின என்பதுதான் உண்மை. பெண் குழந்தை பிறந்தவுடனேயே கள்ளிப்பால் கொடுத்து கொல்வது கிராமப்புறங்களில் நிகழ்ந்தது என்றால் கருவிலேயே பெண்சிசுவை கருவறுக்கும் கொடூரம் நகர்ப்புறங்களிலும் நடந்தேறிக்கொண்டுதான் இருக்கிறது.
வரதட்சிணை என்ற பெயரால் பெண்ணிற்கு இழைக்கப்படும் அநீதி அதிகரிக்கத்தான் செய்கிறதே தவிர குறைந்தபாடில்லை. கல்வி பயிலும், வேலைக்குச்செல்லும் மகளிர் அனுபவிக்கும் தொந்தரவுகள் சொல்லி மாளாது. பஸ்ஸிலும், பணிபுரியும் இடங்களிலும், செல்லும் வழிகளிலும் ஆண் காமுகர்களின் சில்மிஷங்களாலும், பாலியல் தொந்தரவுகளாலும் பாதிக்கப்படுவோர் எத்தனையோ பேர். கலவரங்களிலும், வன்முறைகளிலும் பாதிக்கப்படுவதில் பெண்களும் அதிகம் இடம்பெறுகின்றனர். அரச பயங்கரவாதத்தின் இரைகளாகவும் பெண்கள் இலக்காகி வருகின்றனர்.
இவ்வாறு மகளிர் உரிமை கோஷம் எழுப்பட்டு நூறு ஆண்டுகளைத் தாண்டிய பொழுதும் கொடுமைகள் குறைந்த பாடில்லை என்பது நிதர்சனமான உண்மையாகும். மேற்கத்தியவாதிகளின் பெண்ணுரிமை என்பது பெண்களின் ஆடைகளை குறைப்பதில்தான் உள்ளது.
மனித இனத்தையே சீரழிக்கும் இயற்கைக்கு முரணான ஓரினச்சேர்க்கை உறவுகளுக்கு அங்கீகாரம் அளிப்பதிலும், நடன அரங்குகளிலும், இரவு விடுதிகளிலும் சுதந்திரமாக சுற்றித் திரிவதிலும்தான் பெண்ணுரிமை பேணப்படுவதாக அவர்கள் கற்பனைச் செய்கிறார்கள். இதனால் பெண்கள் கடைச் சரக்காகவும், பாலியலின் சின்னமாகவும் தான் மேற்கத்திய உலகில் கணிக்கப்பட்டு வருகின்றார்கள். ஆணுக்குச் சமமாக பெண்ணுக்கு உரிமை என்று பேசப்படும் இடங்களில் பாலியல் பலாத்காரங்களும், வன்புணர்ச்சிகளும் நிகழ்ந்தேறுகின்றன.
இவ்வாறு பெண்களின் உரிமையை கேலிக் கூத்தாக்கும் இவர்கள் தான் இஸ்லாத்தில் பெண்ணுரிமை இல்லையென்றும், இஸ்லாம் பெண்களை அடிமைப்படுத்துகிறது, அவர்களின் வளர்ச்சிக்கு இஸ்லாத்தின் ஆடைமுறை தடைப் போடுகிறது என்றெல்லாம் அவதூறான பிரச்சாரத்தில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். இஸ்லாத்திற்கெதிரான இப்பிரச்சாரத்தில் மேற்கத்தியவாதிகள் மட்டுமல்ல எவர்கள் பெண்களை மொட்டையடித்து மூளியாக்கி மூலையில் வைக்கின்றார்களோ அந்த மதத்தை பாதுகாக்கிறோம் என்று கூறும் இந்திய பாசிஸ்டுகளும், மார்க்சிய சிந்தனையுடையவர்களும் தான் ஈடுபட்டு வருகின்றார்கள்.
19 ஆம் நூற்றாண்டில் பெண்களுக்கு ஆன்மா உண்டா என்று ஆராய்ச்சிச் செய்தவர்கள் தான் இன்று இஸ்லாத்தின் மீது காரி உமிழ்கிறார்கள் என்பதை புரிந்துக் கொள்ளவேண்டும். பெண்கள் பாவங்கள் உருவாகக் காரணமான ரோமநாட்டின் பண்டோர பாக்ஸாக கருதியவர்களின் வாரிசுகள்தான் இஸ்லாத்தில் பெண்ணுரிமையைக் குறித்து கேள்வியெழுப்புகிறார்கள்.
இவர்கள் எவ்வளவு அவதூறுப் பிரச்சாரங்களில் ஈடுபட்டாலும் கூட இன்றும் பெண்களுக்கு கேள்விக்குறியாயிருக்கும் உரிமைகள் கூட பெண் உரிமைக்கோஷம் எழுப்படுவதற்கு 12 நூற்றாண்டுகள் முன்னரே இஸ்லாத்தில் வழங்கப்பட்டுள்ளது என்பது உறுதிப்படுத்தப்பட்ட உண்மையாகும்.
1960களில் நேருவால்தான் இந்துக் கூட்டுக் குடும்ப சட்டங்களில் பெண்களுக்கு சொத்தில் உரிமை உண்டு என்ற சட்டம் இயற்றப்பட்டது. ஆனால் 14 நூற்றாண்டுகளுக்கு முன்னரே இதற்கான சட்டமியற்றி நடைமுறைப்படுத்தியும் காட்டியது இஸ்லாம் (பார்க்க அல்குர்ஆன் 4:7-12).
போரிலே பெண்கள், குழந்தைகளைக் கொல்லுவது தடைசெய்யப்பட்டது. பாலியல் ரீதியான கொடுமைகளுக்குக் கடுமையான தண்டனைகள் வழங்கப்பட்டுள்ளது. பெண்களின் கற்பிற்கு களங்கப்படுத்தும் செயல் தண்டனைக்குரியது என்று இஸ்லாம் கூறுகிறது (24:4)
போரிலே பெண்கள், குழந்தைகளைக் கொல்லுவது தடைசெய்யப்பட்டது. பாலியல் ரீதியான கொடுமைகளுக்குக் கடுமையான தண்டனைகள் வழங்கப்பட்டுள்ளது. பெண்களின் கற்பிற்கு களங்கப்படுத்தும் செயல் தண்டனைக்குரியது என்று இஸ்லாம் கூறுகிறது (24:4)
மொத்தத்தில் இஸ்லாம் வழங்கிய பெண் உரிமைகள் என்பது 'ஆண்களால்' வழங்கப்பட்ட பிச்சையல்ல, மாறாக இறைவனால் வழங்கப்பட்டவை. இஸ்லாத்தை ஒரு மதமாக பார்க்காமல் மனதில் உள்ள காழ்ப்புணர்வுகளை அகற்றிவிட்டு அது கூறும் கொள்கைகளை திறந்த மனதோடு ஆய்வுச் செய்ய முன் வருவார்களானால் பெண் உரிமை மட்டுமல்ல இவ்வுலகில் மனிதர்கள் சந்திக்கும் அனைத்து பிரச்சனைகளுக்கும் உரிய தீர்வை காணமுடியும்.
அதை விடுத்து இஸ்லாத்தை ஏறெடுத்தும் பார்க்காவிட்டால் இழப்பு இஸ்லாத்திற்கல்ல. இஸ்லாத்தை குறை கூறுபவர்களுக்குத் தான் என்பது மறுக்கவியலாத உண்மையாகும்.
0 கருத்துகள்: on "மகளிர் தினத்திற்கு நூறு ஆண்டு: உள்ளத்தைச் சுடும் உண்மைகள்"
கருத்துரையிடுக