27 மார்., 2010

பாசமில்லாத தாயால் தூக்கியெறியப்பட்ட குழந்தை : அரவணைத்த அன்னையிடம் இருந்து சட்டம் பிரித்தது

நாகப்பட்டினம்: பாசமில்லாத தாயால் தூக்கி வீசப்பட்ட சிசுவை, அரவணைத்த தாயிடம் இருந்து சட்டம் பிரித்ததால், நாகை கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

நாகை அடுத்த திட்டச்சேரி, கட்டுமாவடியைச் சேர்ந்தவர் மொய்தின் அப்துல் காதர்(36); ஓட்டல் தொழிலாளி. இவரது மனைவி ரஜபுநிஷா(32). இவர்களுக்கு 14 ஆண்டுகளுக்கு முன் திருமணமாகி, 13 மற்றும் 12 வயதுகளில் இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.

கடந்த 23ம் தேதி இரவு 8 மணியளவில், வீட்டின் அருகே இருக்கும் முடிகொண்டான் ஆற்றுப்பாலம் அருகில் இருந்து ஒரு குழந்தையின் முனகல் சத்தம் கேட்டு ரஜபுநிஷா சென்று பார்த்தார்.பிறந்து சில மணி நேரங்களே ஆன நிலையில் தொப்புள் கொடி, ரத்தக் கறையுடன் ஆண் குழந்தை ஒன்று துணிப்பையில் கிடந்தது. அக்குழந்தையை வீட்டிற்கு தூக்கி வந்தார். அப்பகுதியில் உள்ள டாக்டரிடம் குழந்தைக்கு முதலுதவி செய்தார். ஆண் குழந்தை இல்லாமல் தவித்த தனக்கு இறைவன் அருளியதாக நினைத்து, குழந்தைக்கு முகமது தாரிஸ் என்று பெயரிட்டு கவனித்து வந்தார்.

குழந்தை குறித்து திட்டச்சேரி போலீசாருக்கு தகவல் தெரிந்தவுடன், சமூக நலத்துறையிடம் ஒப்படைக்க கூறினர். ரஜபுநிஷா தம்பதியினர், தாங்களே தத்தெடுத்து வளர்த்துக் கொள்வதாகக் கூறி குழந்தையை தர மறுத்தனர். மாவட்ட சமூக நல அதிகாரிகள் முன்னிலையில் பேசிக் கொள்ளலாம் என்று நேற்று காலை நாகை கலெக்டர் அலுவலகத்திற்கு அழைத்து வந்தனர்.

சமூக நலத்துறை அலுவலர் அன்பழகி, குழந்தையை அரசிடம் ஒப்படைக்க கூறினார். அதற்கு மறுத்த தம்பதியினர், கலெக்டர் அலுவலகத்தில் அழுது புரண்டனர். அரசு விதிகளை அலுவலர்கள் எடுத்துக் கூறினர். நீண்ட போராட்டத்திற்கு பிறகு ரஜபுநிஷா தம்பதியினர், சமூக நல அலுவலர் அன்பழகியிடம் குழந்தையை ஒப்படைத்தனர். ரஜபுநிஷா தம்பதியினரின் பாசப் போராட்டத்தால், கலெக்டர் அலுவலகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
source:dinamalar


Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "பாசமில்லாத தாயால் தூக்கியெறியப்பட்ட குழந்தை : அரவணைத்த அன்னையிடம் இருந்து சட்டம் பிரித்தது"

கருத்துரையிடுக