27 மார்., 2010

அஞ்சு குப்தாவுக்கு மத சாயம் பூசும் பாஜக!

ரேபரேலி:பாபர் மசூதி இடிப்பை தூண்டிவிட்டதோடு, அந்த மசூதி இடிந்து விழுந்தபோது அத்வானி பெரும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார் என்று வாக்குமூலம் அளித்த ஐபிஎஸ் அதிகாரி அஞ்சு குப்தாவி்ன் கணவர் ஒரு முஸ்லீம் என்று கூறி அவருக்கு மதச் சாயம் பூசும் குற்றச்சாட்டை பாஜக கூறியுள்ளது.

1992ம் ஆண்டு டிசம்பர் 6ம் தேதி அயோத்தியில் விஐபிக்கள் பாதுகாப்புப் பொறுப்பில் இருந்தார் அஞ்சு குப்தா. அத்வானி, உமா பாரதி, சாத்வி ரிதம்பரா, முரளி மனோகர் ஜோஷி உள்ளிட்ட தலைவர்கள் அந்த தினத்தில் அயோத்தியில் மசூதி அருகே பொதுக் கூட்டத்தில் பேசியபோது அந்த மேடையில் பாதுகாப்புப் பணியில் அஞ்சு குப்தா இருந்தார்.

இப்போது மத்திய உளவுப் பிரிவான ஐ.பியில் பணியாற்றும் அவர் நேற்று இந்த வழக்கை விசாரித்து வரும் ரேபரேலி சிறப்பு நீதிமன்றத்தில் அளித்த வாக்குமூலத்தில் மசூதி இடிப்பை அத்வானி தூண்டிவிட்டதாகவும், மசூதி இருக்கும் இடத்தில் நிச்சயமாக கோவில் கட்டப்படும் என்று மீண்டும் மீண்டும் அவர் பேசியதாகவும், மசூதி இடிக்கப்படுவதைத் தடுக்க மேடையி்ல் இருந்த எந்த பாஜக, ஆர்எஸ்எஸ் தலைவரும் முயலவில்லை என்றும், இடிக்கப்பட்ட பின்னர் தலைவர்கள் ஒருவரை ஒருவர் கட்டித் தழுவி வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டதாகவும் வாக்குமூலம் அளித்தார்.

இந் நிலையில் அஞ்சு குப்தா ஒரு முஸ்லீமை மணந்துள்ளதால் அவர் இவ்வாறு வாக்குமூலம் அளித்துள்ளார் என்ற ரீதியில் மறைமுகமாக பாஜக குற்றம் சாட்டியுள்ளது.

டைம்ஸ் நவ் தொலைக்காட்சியில் நேற்றிரவு நடந்த விவாதத்தில் பேசிய பாஜக செய்தித் தொடர்பாளர் ரவிசங்கர் பிரசாத் கூறுகையில், "இந்த வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது. இதனால் அஞ்சு குப்தாவின் வாக்குமூலம் குறித்து கருத்து சொல்ல முடியாது. அதே நேரத்தில் அஞ்சு குப்தாவின் முழுப் பெயர் அஞ்சு குப்தா ரிஸ்வி. ரிஸ்வி (முஸ்லீம்) என்பவரைத் தான் அவர் மணந்துள்ளார்" என்றார்.

இதன்மூலம் அஞ்சு குப்தாவின் மதம் குறித்து அவர் சர்ச்சையைக் கிளப்பினார்.

இதற்கு பதிலளித்த இந்துஸ்தான் டைம்ஸ் நாளிதழின் அரசியல் விவகாரங்களுக்கான ஆசிரியர் வினோத் ஷர்மா, "எதற்கெடு்த்தாலும் மதத்தை இழுப்பது பாஜகவுக்கு இது ஒரு வழக்கமாகவே ஆகிவிட்டது. அஞ்சு குப்தா இப்போதும் இந்துவாகத்தான் உள்ளார். அவர் பெயர் அஞ்சு குப்தா தான். அவர் பெயரை மாற்றிக் கொள்ளவில்லை. அவரது பெயரில் ரிஸ்வி என்பதை அஞ்சு குப்தாவே சேர்க்கவில்லை. ஆனால், ரவிசங்கர் பிரசாத் தான் சேர்க்கிறார்.

இது பாஜகவின் வழக்கமான பாணி தான். 1992ம் ஆண்டு குஜராத்தில் சட்டமன்றத் தேர்தலின்போது விதிகளை கடுமையாக அமலாக்கிய அப்போதைய இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் லிங்க்டோவை நரேந்திர மோடி இப்படித்தான் முழுப் பெயரை சொல்லி விமர்சித்தார்.அவரது பெயர் ஜேம்ஸ் மைக்கேல் லிங்க்டோ என்றார் மோடி. அதாவது அவர் ஒரு கிருஸ்துவர் என்றும், அதனாலேயே அவர் ஒரு இந்து விரோதி என்பது போலவும் கருத்து உருவாகும் வகையில் அவரது பெயரை விரிவாக, விளக்கமாகச் சொல்லி்ப் பேசினார்.

அதே பாணியைத் தான் இப்போது அஞ்சு குப்தா விஷயத்திலும் பாஜக கடைபிடிக்கிறது. பணியில் இருக்கும் ஒரு ஐபிஎஸ் அதிகாரியை இதுபோல மதத்தைச் சொல்லி விமர்சிப்பது பாஜகவுக்கு எந்த வகையிலும் உதவாது. அவரது வாக்குமூலத்தை சட்டரீதியாக எதிர்ப்பதை விட்டுவிட்டு, அவருக்கு மதச்சாயம் பூசும் செயல் பாஜகவின் செயலை என்னவென்று சொல்வது?. மேலும் இப்போது அயோத்தி விவகாரம் மக்களுக்கு ஒரு பொருட்டே அல்ல. அதை வைத்து ஓட்டு வாங்க முடியாது என்பதை மக்கள் பலமுறை பாஜகவுக்கு உணர்த்திவிட்டனர்.

மேலும் இப்போது அத்வானியும் இந்திய அரசியலில் முக்கியத்துவம் இழந்துவிட்டார். இனிமேலாவது அயோத்தி விவகாரத்தில் மக்களைப் பிளவுபடுத்தும் வகையில் மதத்தை இழுத்து பேசிக் கொண்டிருக்காமல், பிரச்சனைக்கு முற்றுப் புள்ளி வைக்க முயல்வது தான் பாஜக உள்பட எல்லா கட்சிகளுக்கும் நல்லது" என்றார்.

இந்த விவாதத்தில் பேசிய காங்கிரஸ் ராஜ்யசபா எம்பியான மணிசங்கர் அய்யர், "நாடு சுதந்திரம் அடைந்த பிறகு மாபெரும் மதக் கலவரத்துக்குக் காரணமாக இருந்த மசூதி இடிப்பைத் தூண்டிவிட்டவர் அத்வானி. பின்னர் இந்த மசூதி இடிப்பு தான் தனது வாழ்நாளில் மிக சோகமான தினம் என்று சொன்னவரும் அத்வானி தான். இப்போது உண்மை வெளியே வந்துவிட்டது. இதற்கு அத்வானி என்ன பதில் சொல்லப் போகிறார்" என்றார்.

இந்த விவாத நிகழ்ச்சியை நடத்திய டைம்ஸ் நவ் ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமி கூறுகையில், அஞ்சு குப்தா தொடர்ந்து இந்து மதத்தைத் தான் பின்பற்றி வருகிறார் என்றார்.
source:thatstamil

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "அஞ்சு குப்தாவுக்கு மத சாயம் பூசும் பாஜக!"

கருத்துரையிடுக