பாங்காக்:பாராளுமன்றத்தை கலைத்து விட்டு புதிய தேர்தல் நடத்த வேண்டுமென்று கோரி தாய்லாந்தில் எதிர்க்கட்சியினர் நடத்திவரும் போராட்டம் மேலும் வலுவடைந்துள்ளது.
நேற்று அரசு தலைமையகத்தின் முக்கிய வாசலின் முன்பு லிட்டர் கணக்கில் தங்களது சொந்த இரத்தத்தை ஊற்றிய போராட்டக்காரர்கள் தாங்கள் போராட்டத்திலிருந்து பின்வாங்கப் போவதில்லை என்பதை பிரகடனப்படுத்தினர்.
ஆயிரக்கணக்கான சிவப்பு தொப்பியணிந்த போராட்டக்காரர்களிடமிருந்து நர்ஸுகள் சேகரித்த இரத்தைத் போராட்டக்காரர்கள் பெரிய பாட்டில்களில் அடைத்துக் கொண்டுவந்து அரசு தலைமையக வாசலில் ஊற்றினர். 1000 லிட்டர் இதற்காக சேகரிப்போம் என நேற்று முன் தினம் போராட்டக்காரர்கள் அறிவித்திருந்தனர்.
பிரதமர் அலுவலகத்திற்கு முன் லட்சத்திற்கும் மேற்பட்ட போராட்டக்காரர்கள் ஒன்றுகூடி ஆர்ப்பரிக்கும் சப்தம் முழக்கி தங்களது இரத்தத்தை ஊற்றினர். தேசிய தொலைக்காட்சி சேனல்கள் இப்போராட்டத்தை நேரடியாக ஒளிபரப்புச் செய்தன.
கடந்த வெள்ளிக்கிழமை போராட்டம் துவங்கியது முதல் பிரதமர் அபிஸித் இதுவரை அலுவலகத்திற்கு வரவில்லை. அபிஸித் தனது அலுவலகத்தில் பணியாற்றும் பொழுது நாட்டு மக்களின் இரத்தத்தின் மீது தான் இருக்கிறேன் என்பதை நினைவூட்டுவதற்காகத்தான் இந்த இரத்தப் போராட்டம் என போராட்டத்தலைவர்கள் தெரிவித்தனர்.
பாராளுமன்றத்தை திங்கள் கிழமை மதியம் கலைக்கவேண்டுமென்று போராட்டக்காரர்கள் கெடு விதித்தபொழுதிலும் பிரதமர் அபிஸித் இதனை புறக்கணித்துவிட்டு தலைமையகத்தை பாதுகாப்பு அரணாக மாற்றியுள்ளார். ஆனால் போராட்டக்காரர்களின் இதர கோரிக்கைகளை பரிசீலனைச் செய்யத் தயார் என்று பிரதமர் தெரிவித்துள்ளார்.
முன்னாள் பிரதமர் தக்ஸின் ஸீனவத்ராவின் ஆதரவாளர்களும், 2006 ஆம் ஆண்டு அவரை ராணுவ புரட்சியின் வாயிலாக ஆட்சியிலிருந்து அப்புறப்படுத்தியதை எதிர்க்கும் சமூக சேவகர்களும்தான் இந்தப் போராட்டத்திற்கு தலைமை வகிக்கின்றார்கள்.
ராணுவம், அரச பரம்பரையினரின் துணையுடன்தான் அபிஸித் ஆட்சிக்கு வந்தார் என போராட்டக்காரர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
இரத்தத்தை ஊற்றிய சில நிமிடங்களிலேயே சுகாதார ஊழியர்கள் அவ்விடத்தை சுத்தப்படுத்தினர். இரத்தம் ஊற்றும் போராட்டம் சுகாதாரக்கேட்டை உருவாக்கும் என சுகாதாரத்துறை பணியாளர்கள் எச்சரிக்கை விடுத்திருந்தனர். சேகரித்த இரத்தத்தில் மீதியை ஆளும் கட்சியின் தலைமை அலுவகத்தின் முன்னால் ஊற்றுவோம் என போராட்டத்திற்கு தலைமைத் தாங்கிய வெங்க் தோசிராகான் தெரிவித்தார்.
அரசியலில் ஈடுபடாத புத்த சன்னியாசிகளும் இப்போராட்டத்தில் கலந்துக் கொண்டனர். போராட்டம் சமாதானமாக நடந்தால் அதிகாரிகள் தலையிடமாட்டார்கள் என அரசு செய்தித் தொடர்பாளர் பனிதான் வதனயாகோன் தெரிவித்தார். சமாதான முறையில் போராட்டத்தை தொடர அழைப்பு விடுத்த தக்ஸின் இரண்டு முறை போராட்டக்காரர்களிடம் வீடியோ கான்ஃப்ரன்ஸ் மூலம் உரை நிகழ்த்தினார்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்
0 கருத்துகள்: on "தாய்லாந்து அரசு தலைமையகம் முன்பு இரத்தப் போராட்டம்"
கருத்துரையிடுக