காபூல்:தாலிபான்கள் இந்தியாவை எதிரியாக பாவிப்பதில்லை. இந்தியாவுக்கு எதிரான யாரையும் ஆதரிக்கவும் இல்லை என்று தாலிபான் முன்னாள் தலைவர் முல்லா அப்துல் சலாம் ஸாயீஃப் தெரிவித்துள்ளார்.
ஒரு ஆங்கில தொலைக் காட்சியின் வெளிநாட்டு விவகாரம் தொடர்பான செய்தி நிரூபர் சூர்யா கங்காதரனுக்கு தாலிபானின் முன்னாள் தலைவரான முல்லா அப்துல் சலீம் ஸாயீஃப் சிறப்புப் பேட்டி அளித்துள்ளார். அதில், தாலிபான்கள் இந்தியாவை எதிரியாக எப்போதும் பாவித்ததில்லை என்று கூறியுள்ளார்.
தற்போது காபூலில் வசிக்கும் இவர், தாலிபான் தலைவர் முல்லா ஒமருடன் நேரடியாக தொடர்பு கொள்ளும் நிலையில் உள்ளவர். காபூலில் தாலிபான் படைகளை கவனித்து வந்தவர். பாகிஸ்தானுக்கான தாலிபான் தூதராக இவரை முல்லா ஒமர் பயன்படுத்தி வந்ததும் குறிப்பிடத்தக்கது.
தனது பேட்டியில் முல்லா அப்துல் மேலும் கூறுகையில், முல்லா உமர்தான் தற்ப்பொழுதும் தாலிபான்களின் தலைவராக உள்ளார். தாலிபான்கள் இந்தியாவுக்கு எதிரான யாரையும் ஆதரிக்க மாட்டார்கள். ஆனால் நாங்கள் முஸ்லிம்களிடம் உறவைப் பேணுவோம். லஷ்கரைப் பொறுத்தவரை, உங்கள் பார்வையில் அவர்கள் தீவிரவாதிகள். ஆனால் என் பார்வையில் அப்படி கிடையாது என்றே சொல்வேன்.
காந்தகார் விமானக் கடத்தல் சம்பவத்தில் தாலிபான்களின் தலையீடு இருப்பதாக கூறுவதில் எல்லாம் எந்த உண்மையும் இல்லை. ஆப்கானிஸ்தானில் நாங்கள் ஆட்சியில் இருந்தபோது இந்தியா எங்களை அங்கீகரிக்காமல் தவறு செய்துவிட்டது. ஆனாலும் கூட நாங்கள் இந்தியாவை எதிரியாக பார்க்கவில்லை. ஆனால் இந்தியா ஆப்கானில் சிறைச்சாலைகளை நடத்திவருவதாக குற்றஞ் சாட்டப்படுகிறது.
பாகிஸ்தானும், இந்தியாவும் எங்களுக்கு ஒன்று தான். இரண்டையும் சமமாகவே பாவிக்கிறோம். அவர்கள் தங்களுக்குள்ளாக எல்லைப் பிரச்சனையை நடத்திக் கொண்டிருக்கிறார்கள் என்பது வேறு. இதில் ஆப்கானிஸ்தான் நடுநிலையைத் தான் வகித்தாக வேண்டும் என்று கூறியுள்ளார்.
source:thatstamil,siasat
0 கருத்துகள்: on "இந்தியா எங்களுக்கு எதிரியல்ல: முன்னாள் தாலிபான் தலைவர்"
கருத்துரையிடுக