மும்பை:புனேயில் ஜெர்மன் பேக்கரி குண்டுவெடிப்பு வழக்கு விசாரித்து வரும் மஹாராஷ்ட்ரா தீவிரவாத எதிர்ப்பு(ஏ.டி.எஸ்) படை குற்றவாளிகளை கண்டுபிடிக்க முடியாமல் இருட்டில் துளாவிக் கொண்டிருக்கிறது.
மாணவர்கள் உள்பட 17 பேர் மரணத்திற்கு காரணமான குண்டுவெடிப்பு வழக்கில் இதுவரை ஒரு துப்புக்கூட கண்டறிய ஏ.டி.எஸ்ஸால் இயலவில்லை. புலனாய்வு பொறுப்பு ஏ.டி.எஸ் தான் என்றாலும் தேசிய புலனாய்வு ஏஜன்சியும் களத்தில் உள்ளது. இந்திய முஜாஹிதீன் என்ற அமைப்பின் உதவியுடன் பாகிஸ்தானில் செயல்படும் லஷ்கர்-இ-தய்யிபா தான் இந்தக் குண்டுவெடிப்பை நடத்தியதாக சந்தேகப்பட்டு இந்திய முஜாஹிதீனை சார்ந்தவர்கள் என்று கூறி புனே மற்றும் சில இடங்களைச் சார்ந்தவர்களை சந்தேகத்தின் அடிப்படையில் விசாரணை நடத்திய பிறகும் புலனாய்வு ஏஜன்சிகளுக்கு தொடர்ந்து விசாரணையில் முன்னேற இயலவில்லை.
குண்டுவெடிப்புடன் தொடர்புடைய தகவல்களை பொதுமக்களிடமிருந்து சேகரிப்பதற்கான பணியில் தற்போது ஏ.டி.எஸ் ஈடுபட்டுள்ளது. இச்சம்பவத்துடன் தொடர்புடைய தகவல்கள் ஏதேனும் உண்டென்றால் அதனை ரகசியமாக கூறலாம் எனவும், அத்தகைய நபர்களின் பெயர்கள் ரகசியமாக பாதுகாக்கப்படும் எனவும் ஏ.டி.எஸ் மும்பை, புனே நகரங்களில் ரேடியோ வழியாக பொதுமக்களுக்கு விளம்பரம் செய்து வருகிறது.
ஜெர்மன் பேக்கரியில் சந்தேகத்திற்கிடமான நிலையில் ஆட்டோ ரிக்ஷாவில் வந்திறங்கிய இருவரின் வீடியோக் காட்சிகள் கிடைத்திருந்தாலும் அவ்விருவரையும் அடையாளம் காண்பதற்கோ அல்லது அவர்கள் வந்த ஆட்டோவைப் பற்றி தகவலையோ பெற ஏ.டி.எஸ்ஸால் இயலவில்லை.
அனாதையாக கிடந்த பையை எடுத்து மாற்றுவதற்கு சென்ற ஹோட்டல் பணியாளரின் கவனத்தை திசைத்திருப்ப 200 ரூபாய் கொடுத்து தண்ணீர் பாட்டிலுக்கு ஆர்டர் செய்து விட்டு அதற்கான பாக்கியை வாங்காமல் அவசரகதியில் சென்ற ஒரு சாமியாரைக் குறித்தும் இதுவரை எந்த விபரமும் கிடைக்கவில்லை.
இச்சம்பவத்தின் ஒரேயொரு நேரில் கண்ட சாட்சியான ஹோட்டல் பணியாளர் பரஸ்ரீமல்தான் சாமியாரைக் குறித்து ஏ.டி.எஸ்ஸிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.
2008 ஆம் ஆண்டு நடந்த மலேகான் குண்டுவெடிப்பில் தொடர்புடைய ஹிந்துத்துவா தீவிரவாதிகளையும் புனே குண்டுவெடிப்பில் சந்தேகிப்பதாக மஹாராஷ்ட்ரா உள்துறை அமைச்சகம் அறிவித்திருந்த போதிலும், இதுவரை அந்த திசையை நோக்கிய விசாரணை நடைபெறவில்லை என உள்துறையில் உள்ள சில முக்கிய அதிகாரிகள் தெரிவிக்கின்றார்கள்.
மஹாரஷ்ட்ராவில் புனே, நந்தத், வார்ட, நாசிக் ஆகிய பகுதிகள் சங்க்பரிவார சக்திகளின் தீவிரவாத பயிற்சி மையங்கள் செயல்படும் பகுதிகள் என்பது மலேகான் குண்டுவெடிப்புத் தொடர்பான புலனாய்வில் வெளிப்படுத்தப்பட்டிருந்தது. இந்த பயிற்சி மையங்களில் பயிற்சி அளிப்பவர்கள் இந்தியராணுவம், உளவுத்துறை, காவல்துறை ஆகியவற்றில் பணியாற்றும் முக்கிய அதிகாரிகள் என்றும் இந்திய ராணுவத்தில் பயன்படுத்தப்படும் ஆர்.டி.எக்ஸ் என்ற வெடிமருந்தை இவர்களுக்காக கஷ்மீரிலிருந்து அங்குள்ள சில முஸ்லிம் இளைஞர்கள் மூலமாக புனேவுக்கு கடத்தி வரப்பட்டதாகவும் கண்டறியப்பட்டிருந்தது.
மலேகான் குண்டுவெடிப்பு வழக்கு முக்கிய கட்டத்தை அடையும் தருவாயில்தான் அவ்வழக்கை திறமையுடன் கையாண்டு வந்த ஏ.டி.எஸ் தலைவர் ஹேமந்த் கர்காரே சந்தேகத்திற்கிடமான நிலையில் மும்பைத் தாக்குதலின் போது கொல்லப்பட்டார்.
கர்காரேக்கு பிறகு கெ.பி.ரகுவன்ஷி ஏ.டி.எஸ்ஸின் தலைமை பொறுப்பை ஏற்றப் பிறகு வழக்கு விசாரணை ஸ்தம்பித்துப் போனது. இதுவரை மலேகான் குண்டுவெடிப்பில் குற்றப்பத்திரிகை சமர்ப்பிக்க ரகுவன்ஷியின் தலைமையிலான ஏ.டி.எஸ்ஸிற்கு இயலவில்லை.
2006 ஆம் ஆண்டு மும்பை ரெயில் குண்டுவெடிப்பை புலனாய்வுச் செய்ததும் ரகுவன்ஷியின் தலைமையில் தான். அந்த வழக்கில் கைதான சிமி உறுப்பினர்களுக்கெதிராக ரகுவன்ஷி அவசரக்கோலத்தில் குற்றப்பத்திரிகை சமர்ப்பித்ததற்கு மும்பை உயர்நீதிமன்றத்தில் மஹாராஷ்ட்ரா அரசு சத்தியப் பிரமாணம் அளிக்கவிருக்கிறது.
மும்பை ரெயில் குண்டுவெடிப்பு வழக்கை சி.பி.ஐக்கு மாற்றிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டதுதான் தாமதம் உடனே ரகுவன்ஷி அவசரக்கோலத்தில் சிமி உறுப்பினர்களுக்கெதிரான குற்றப்பத்திரிகையை மும்பை மோக்கா(MCOCA) சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல்செய்தார்.
செய்தி:மாத்யமம்
0 கருத்துகள்: on "புனே குண்டுவெடிப்பு: இருட்டில் துளாவும் புலானாய்வு ஏஜன்சிகள்"
கருத்துரையிடுக