27 ஏப்., 2010

விசாரணை என்ற பெயரில் சித்திரவதை செய்தால் 10 ஆண்டு சிறை: மக்களவையில் மசோதா தாக்கல்

புதுதில்லி:விசாரணை என்ற பெயரில் சித்திரவதை செய்யும் அதிகாரிகளுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை அளிக்க வகை செய்யும் சட்ட மசோதா மக்களவையில் திங்கள்கிழமை தாக்கல் செய்யப்பட்டது.

போலீஸ் அதிகாரிகள், அரசு அதிகாரிகள் மட்டுமின்றி தனி நபர்கள் இந்த குற்றத்தில் ஈடுபட்டாலும் 10 ஆண்டுகள் சிறை தண்டனை நிச்சயம்.

இந்த சட்ட மசோதாவை உள்துறை இணை அமைச்சர் முல்லபள்ளி ராமச்சந்திரன் தாக்கல் செய்தார். சித்திரவதை செய்தல், துன்புறுத்துதல், அவமரியாதை செய்தல் ஆகியவற்றுக்கு தண்டனை அளிப்பதற்கான ஐ.நா. உடன்படிக்கையில் 1997-ம் ஆண்டு இந்தியா கையெழுத்திட்டது. அதன்படி எது சித்திரவதை, என்பதை நிர்ணயிக்கும் கோட்பாட்டை வரையறை செய்து அதை சட்டமாக்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. அதற்கேற்ப இந்த புதிய மசோதா வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த சட்ட மசோதாவில் உள்ள சில அம்சங்கள் இந்திய தண்டனைச் சட்டத்தில் இடம் பெற்றிருந்தாலும் சித்திரவதை குற்றங்களுக்குத் தனியாக தண்டனை சட்டம் தேவை என்ற அடிப்படையில் இந்த புதிய சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சித்திரவதையைத் தடுப்பதற்கான தனி சட்ட அம்சங்கள் விரிவாக ஆராயப்பட்டு தற்போது சட்ட மசோதாவாக தாக்கல் செய்யப்பட்டுள்ளது. குற்றம் சாட்டப்பட்டவர்களிடம் தகவலைப் பெறுவதற்காகவும் ஒப்புதல் வாக்குமூலம் வாங்குவதற்காகவும் போலீஸார் கைதிகளை சித்திரவதை செய்வது நிரூபிக்கப்பட்டுவிட்டால் அந்த அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க முடியும்.

இது தவிர மதம்,இனம்,மொழி,ஜாதி ஆகியவற்றின் பேரில் சித்திரவதையில் ஈடுபடுவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்காகவும் இந்த சட்ட மசோதா வகை செய்கிறது.

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "விசாரணை என்ற பெயரில் சித்திரவதை செய்தால் 10 ஆண்டு சிறை: மக்களவையில் மசோதா தாக்கல்"

கருத்துரையிடுக