யூஷூ:சீனாவின் வடமேற்கு மாகாணமான குவின்காயில் இன்று புதன்கிழமை ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தால் 300 பேர் பலியானார்கள். ரிக்டர் அளவில் 7.1 என பதிவாகியிருந்த இந்த சக்தி வாய்ந்த பூகம்பத்தால் வீடுகள் மற்றும் கட்டிடங்கள் இடிந்து விழுந்தன.
இடிபாடுகளில் ஏராளமான மக்கள் சிக்கியுள்ளனர். அவர்களை மீட்கும் பணியில் மீட்புப் படையினர் ஈடுபட்டுள்ளனர். காலையில் மீட்கப்பட்ட சடலங்களின் எண்ணிக்கை அடிப்படையில், இந்த பூகம்பத்தால் குறைந்தது 67 பேர் பலியாகி இருக்கக் கூடும் என கூறப்பட்டடது.
ஆனால் இதன் பிறகு இடிபாடுகளை தோண்ட தோண்ட சடலங்கள் ஏராளமாக கண்டெடுக்கப்பட்டன.இதுவரை 300 பேரின் சடலங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. சுமார் 8 ஆயிரம் பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு உள்ளனர்.
உயிர்சேதத்தைப் போலவே இந்த பூகம்பத்தில் ஏராளமான பொருட்சேதங்களும் ஏற்பட்டிருக்கும் எனத் தெரிகிறது. ஏராளமான கட்டிடங்கள் முற்றிலுமாக சிதைந்து இடிந்து விழுந்து கிடக்கின்றன.
குவின்காய் மாகாணத்தின் ஜூகூ நகரில் இருந்து சுமார் 30 கிமீ தொலைவில் உள்ள மலைப்பகுதியை மையமாகக் கொண்டு பூகம்பம் ஏற்பட்டது. இன்று புதன்கிழமை உள்ளூர் நேரப்படி காலை 7.49 மணிக்கு இந்த பூகம்பம் ஏற்பட்டுள்ளதாக சீன பூகம்ப ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்தனர். பூகம்ப மையப் பகுதிக்கு அருகே அமைந்துள்ள இடங்களில் 85 சதவீத வீடுகள் இடிந்து விட்டதாக மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளோர் தெரிவிக்கின்றனர்.
source:thatstamil

0 கருத்துகள்: on "சீனாவின் வடமேற்கு மாகாணமான குவின்காயில் பயங்கர நிலநடுக்கம்- 300 பேர் பலி"
கருத்துரையிடுக