காபூல் ஆப்கானிஸ்தானின் வட பகுதியில் திங்கள்கிழமை ஏற்பட்ட நில நடுக்கத்தில் 7 பேர் உயிரிழந்தனர். முப்பதுக்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.
ஆப்கானிஸ்தான் நாட்டின் வட பகுதியில் உள்ள சமங்கன் மாகாணத்தில் இந்த நில நடுக்கம் திங்கள்கிழமை அதிகாலை 1 மணி அளவில் ஏற்பட்டது. ரிக்டர் அளவு கோலில் இந்த நிலநடுக்கம் 5.3 ஆக பதிவானது.
நில நடுக்கம் குறித்து அந்த மாகாணத்தின் துணை கவர்னர் குலாம் சாகி பல்கானி கூறுகையில், "இந்த நில நடுக்கத்தில் 3 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. களிமண்ணால் ஆன குடிசைப் பகுதிகள் நிறைந்த கிராமங்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளன. 300 க்கும் அதிகமான வீடுகள் சேதம் அடைந்துள்ளன. ஏராளமான கால்நடைகள் உயிரிழந்துள்ளன.
மலைப்பாங்கான இடம் என்பதால் நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது. பொதுவாகவே இப்பகுதியில் போக்குவரத்து மற்றும் தொலைத் தொடர்பு வசதிகள் குறைவு. எனவே உயிரிழப்பு மற்றும் உடைமைகளுக்கு ஏற்பட்ட சேதம் குறித்து முழு விவரங்களும் தெரிய கால தாமதம் ஆகும்.
சேதத்தின் அளவை மதிப்பிடவும் மீட்பு பணிகளுக்காகவும் சிவில் பாதுகாப்புப் படையின் 3 பிரிவுகள் அப்பகுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன' என்றார்.
ஆப்கன் தலைநகர் காபூலிலும் அண்டை நாடுகளான உஸ்பெஸ்கிஸ்தான், தஜிகிஸ்தான் ஆகிய நாடுகளிலும் நில நடுக்கம் உணரப்பட்டது. இந்து குஷ் மலைப்பகுதிகளில் அடிக்கடி நிலநடுக்கங்கள் ஏற்பட்டு வருகின்றன.
தற்போது நில நடுக்கம் ஏற்பட்டு இருக்கும் சமங்கன் மாகாணத்திற்கு அருகில் உள்ள பகலான் மாகாணத்தில் 2002-ஆம் ஆண்டு ஏற்பட்ட நிலநடுக்கத்தில் ஆயிரம் பேர் உயிரிழந்தனர். தஜிகிஸ்தான் எல்லைப் பகுதியில் 1998-ம் ஆண்டு ஏற்பட்ட இரண்டு நில நடுக்கங்களில் 6 ஆயிரத்திற்கும் அதிகமானோர் என்பது குறிப்பிடத்தக்கது.

0 கருத்துகள்: on "ஆப்கனில் நில நடுக்கம்: 7 பேர் பலி"
கருத்துரையிடுக