புதுதில்லி ஷார்ஜாவில் கொலை வழக்கு ஒன்றில் 17 இந்தியர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டதற்கு மக்களவையில் திங்கள்கிழமை கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
ஷார்ஜாவில் இந்தியர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த காங்கிரஸ் உறுப்பினர் மணீஷ் திவாரி, இந்த விவகாரம் தொடர்பாக இந்திய தூதரக அதிகாரிகள் ஷார்ஜா அரசுடன் பேச்சு நடத்த வேண்டும் என்று கோரினார்.
ஷார்ஜாவில் வேலைக்காகச் சென்றுள்ள இந்திய ஏழை தொழிலாளிகள் 17 பேரையும் அந்நாட்டு போலீஸார் கடந்த மார்ச் 17ம் தேதி கைது செய்தனர். அவர்கள் வேலை செய்துவிட்டு அயர்ந்து உறங்கிக் கொண்டிருந்த போது அவர்களை வலுக்கட்டாயமாக கைது செய்து அழைத்து சென்றுள்ளனர். அவர்கள் தரப்பு நியாயத்தை எடுத்துக்கூற அவர்களுக்கு வழக்கறிஞர் உதவியும் அளிக்கப்படவில்லை. 17 இந்திய தொழிலாளிகளுக்கும் தங்களது கருத்தை வெளிப்படுத்த வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது.
அவர்கள் மீதான விசாரணை நீதிமன்றத்தில் நடந்து வந்தநிலையில் அந்நாட்டில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் யாரும் சென்று அவர்களை சந்திக்கவில்லை. அவர்களுக்கு எவ்வித சட்ட உதவியும் செய்யவில்லை.
இது வருத்தத்துக்குரிய செயல். 17 இந்தியர்களுக்கும் இப்படியொரு நிலை ஏற்பட்டுள்ளது வெளிநாடுகளில் பணிபுரியும் இந்தியர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்று மணீஷ் திவாரி தெரிவித்தார்.
ஷார்ஜாவில் 17 இந்தியர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டதற்கு வேளாண் அமைச்சர் சரத் பவாரும் எதிர்ப்பு தெரிவித்தார். ஷார்ஜாவில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் இதை அந்நாட்டு அரசின் கவனத்துக்கு எடுத்துச் செல்ல வேண்டும் என்றார்.
source:dinamani

0 கருத்துகள்: on "ஷார்ஜாவில் 17 இந்தியர்களுக்கு மரண தண்டனை: மக்களவையில் எதிர்ப்பு"
கருத்துரையிடுக