புதுதில்லி:தில்லி மாடல் அழகியும், நடன மங்கையுமான ஜெஸிகா லால் கொலை வழக்கில் குற்றவாளிகளுக்கு விதிக்கப்பட்ட தண்டனையை உறுதி செய்து திங்கள்கிழமை உத்தரவிட்டது உச்ச நீதிமன்றம்.
1999-ம் ஆண்டு தில்லி ஹோட்டல் ஒன்றில் ஜெஸிகா லால் கொடூரமாக கொல்லப்பட்டார். இதுதொடர்பான வழக்கில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் வினோத் சர்மாவின் மகன் மனு சர்மாவும், உத்தரப் பிரதேச மாநில அரசியல்வாதி டி.பி.யாதவின் மகன் விகாஸ் யாதவும் குற்றவாளிகள் என தில்லி உயர் நீதிமன்றம் 2006-ல் தீர்ப்பளித்து தண்டனை அறிவித்தது.
அதில் மனு சர்மாவுக்கு ஆயுள் தண்டனையும், விகாஸ் யாதவுக்கு 4 ஆண்டு சிறை தண்டனையும் விதிக்கப்பட்டன.
தில்லி உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து மனு சர்மாவும், யாதவும் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இந்த மேல்முறையீட்டு மனு, நீதிபதிகள் பி.சதாசிவம் மற்றும் எஸ்.ஏ.குமார் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் விசாரித்தது. அப்போது, மனுதாரர்கள் மற்றும் அரசு தரப்பு வாதங்கள் விரிவாக விசாரிக்கப்பட்டன. வாதங்களுக்கு பிறகு இந்த வழக்கு தொடர்பான தீர்ப்பை திங்கள்கிழமை (ஏப்.19) அறிவிப்பதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.
இந்நிலையில் நீதிபதிகள் தங்களது தீர்ப்பை திங்கள்கிழமை அளித்தனர். அதில், ஜெஸிகா லால் கொலை செய்யப்பட்டதில் குற்றவாளிகளின் செயல்பாடு எவ்வித சந்தேகமும் இன்றி நிரூபிக்கப்பட்டுள்ளதால் தில்லி உயர் நீதிமன்றம் அளித்த தண்டனை உத்தரவை உச்ச நீதிமன்றமும் உறுதி செய்வதாக நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.
source:dinamani

0 கருத்துகள்: on "ஜெஸிகா கொலை வழக்கில் தண்டனையை உறுதிச் செய்தது உச்சநீதிமன்றம்"
கருத்துரையிடுக