20 ஏப்., 2010

சாட்டிங்கில் துவங்கும் சைபர் கிரைம்

கோவை:ஆன்லைன் 'சாட்டிங்' மூலம் நண்பராகும் நபர்களுக்காக வங்கியில் புதிய கணக்கை துவங்கி, ஆன்லைன் மோசடி நடைபெறுவது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

'வாழ்த்துக்கள். உங்களுக்கு ஆன்லைன் லாட்டரியில் பல கோடி ரூபாய் பரிசு விழுந்துள்ளது. உங்களது முகவரி, மொபைல் எண், வங்கியின் பெயர், வங்கி கணக்கு எண்ணை அனுப்புங்கள். மீண்டும் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்' இந்த வாசகங்களைக் கொண்ட இமெயில் பலருக்கும் வந்து கொண்டிருக்கிறது.

ஆர்வக்கோளாறும், ஆசையும் இருப்பவர்கள் தொல்லையை விலை கொடுத்து வாங்க வேண்டும். மேற்குறிப்பிட்ட இமெயிலுக்கு பதில் அனுப்பினும் தொடருவது தொல்லை இமெயில்கள் தான்.

'பண பரிவர்த்தனை செய்வதில் சில சட்ட சிக்கல் ஏற்பட்டுள்ளது. அதை சரி செய்வதற்கு சில ஆயிரம் ரூபாய் தேவைப்படுகிறது. நாங்கள் குறிப்பிடும் வங்கிக் கணக்கில் பணத்தை உடனே செலுத்தி, சில கோடிகளில் பணத்தை பெற்றுக் கொள்ளுங்கள்' எனத் தெரிவிக்கப்படும். இதை நம்பி, பணத்தை செலுத்துவோருக்கு கோடிக்கணக்கில் பணமும் கிடைக்காது. மீண்டும் இமெயிலும் வராது.

கோவையில் உள்ள பிரபல ஹோட்டல்களுக்கு அண்மையில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்து பணம் பறிக்கும் வேலையைத் துவங்கியுள்ளது ஆன்லைன் மோசடிக் கும்பல். கோவையில் உள்ள முக்கியமான 5 ஹோட்டல்களுக்கு 'அல்-கொய்தா' எனும் அமைப்பின் பெயரில் மிரட்டல் இமெயில் வந்தது.

அந்த இமெயில் முகவரிக்கு பதில் அனுப்பிய கோவை போலீஸார், அவர்கள் கேட்கும் பணத்தை தருவதாகத் தெரிவித்தனர். ஒரு வங்கிக் கணக்கு எண்ணை கொடுத்து, அதில், பணத்தை டெபாசிட் செய்யச் சொல்லி மீண்டும் இமெயில் வந்தது. இமெயிலில் குறிப்பிடப்பட்ட வங்கிக் கணக்கு யாருடையது என போலீஸ் விசாரித்தது, கோவையில் தங்கிப் படிக்கும் ஒரு நைஜீரியா இளைஞர் பெயரில் உள்ள வங்கிக் கணக்கு அது என்பது தெரியவந்தது. மேலும், அந்த இமெயில் தில்லியில் இருந்து அனுப்பியதும் கண்டுபிடிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து, அந்த மாணவனை போலீஸார் கைது செய்தனர். அவரிடம் மேற்கொண்ட விசாரணையில், தனக்கு 'சாட்டிங்' மூலம் தில்லியில் உள்ள ஒருவர் நண்பரானார். வங்கிக் கணக்கை துவங்கி, அந்தக் கணக்கு எண்ணை அனுப்பினால், ரூ.10 ஆயிரம் பணம் தரப்படும் என்றார். இதை நம்பி, நான் வங்கிக் கணக்கை ஆரம்பித்து, பணம் பெற்றுக் கொண்டேன். வெடிகுண்டு மிரட்டல் இமெயிலுக்கும், எனக்கும் எந்தச் சம்பந்தமும் கிடையாது' எனத் தெரிவித்துள்ளார்.

மோசடிக் கும்பல் பெரும்பாலும், 'சாட்டிங்' இணையதளங்களை பயன்படுத்தி, புதிய நண்பர்களை உருவாக்குகின்றனர். அவர்களிடம் நைசாகப் பேசி, வங்கிக் கணக்கை துவக்க வைக்கிறார்கள். பிறகு வங்கிக் கணக்கு எண், ஆன்லைன் பரிவர்த்தனை ஐடி, ரகசிய குறியீட்டு எண் ஆகியவற்றை வாங்கிக் கொள்கிறார்கள். மிரட்டி பணம் பறிக்கும்போது, அந்த வங்கிக் கணக்கை கொடுத்து, அதில் பணத்தை டெபாசிட் செய்யச் சொல்கிறார்கள் மோசடி நபர்கள்.பணம் கொடுக்காமல், போலீஸாருக்கு தகவல் கொடுத்தாலும், வங்கிக் கணக்கு அவர்களது பெயரில் இல்லாததால், சட்டப்படி அவர்கள் மீது போலீஸாரால் நடவடிக்கை எடுக்க முடிவதில்லை.

'சாட்டிங்' மூலம் அறிமுகமாகும் நபர்களை நம்பி, வங்கிக் கணக்கு விவரங்களை தெரியப்படுத்த வேண்டாம்' என எச்சரிக்கிறது சைபர் சொசைட்டி ஆப் இந்தியா.

ஆன்லைனில் நடைபெறும் மோசடிகள் குறித்து இந்த விழிப்புணர்வை அது ஏற்படுத்தி வருகிறது. லாட்டரியில் பரிசு விழுந்துள்ளதாகக் கூறும் 'பிஸ்ஸிங்' இமெயில்களை நம்ப வேண்டாம். அத்தகைய இமெயில்களுக்கு பதில் அளிக்க வேண்டாம். முடிந்த அளவிற்கு வங்கிக் கணக்கு எண், கிரெடிட் கார்டு எண் ஆகியவற்றை ரகசியமாக வைக்க வேண்டும். அவற்றை இமெயிலில் சேகரித்து வைக்கக் கூடாது' என்கின்றனர் சைபர் சொசைட்டி நிர்வாகிகள்.
source:dinamani

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "சாட்டிங்கில் துவங்கும் சைபர் கிரைம்"

கருத்துரையிடுக