புதுதில்லி:மாநிலங்களவையில் 98 கோடீஸ்வர எம்.பி.க்கள் உள்ளனர்; இந்த பட்டியலில் மகாராஷ்டிரத்தைச் சேர்ந்த ராகுல் பஜாஜ் முதலிடத்தில் இருக்கிறார்.
மாநிலங்களவை உறுப்பினர்களின் சொத்து விவரங்களை ஜனநாயக சீர்த்திருத்த சங்கம் (ஏடிஆர்) என்ற அரசு சாரா அமைப்பும், தேசிய தேர்தல் கண்காணிப்பு என்ற அரசு சாரா அமைப்பும் சேகரித்தது. மாநிலங்களவைத் தேர்தலின்போது உறுப்பினர்கள் அளித்த சொத்து விவரங்களின் அடிப்படையில் இந்த ஆய்வு நடத்தப்பட்டது.
இதில் மாநிலங்களவை உறுப்பினர் ராகுல் பஜாஜ் ரூ.300 கோடி சொத்துகளில் முதலிடத்தில் இருக்கிறார். இதைத் தொடர்ந்து தமிழகத்தைச் சேர்ந்த தொழிலதிபர் எம்.ஏ.எம்.ராமசாமி ரூ.278 கோடி சொத்து மதிப்புடன் 2-ம் இடத்தில் இருக்கிறார். கர்நாடகத்திலிருந்து மதச்சார்பற்ற ஜனதா தளம் சார்பில் எம்.பி.யாக ராமசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார். இவரைத் தொடர்ந்து ஆந்திரத்தைச் சேர்ந்த எம்.பி. டி. சுப்பராமி ரெட்டி ரூ.272 கோடி சொத்துகளுடன் 3-ம் இடத்தில் இருக்கிறார். சமாஜ்வாதி கட்சி எம்.பி.ஜெயா பச்சனுக்கு ரூ.215 கோடி சொத்தும், சமாஜவாதி கட்சியிலிருந்து நீக்கப்பட்ட அமர்சிங்குக்கு ரூ.79 கோடி சொத்தும் உள்ளது.
டி.ராஜாவுக்கு சொத்து இல்லை:
தமிழகத்தைச் சேர்ந்தவரும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச் செயலருமான டி. ராஜா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் எம்.பி.சமன் பதக் ஆகியோரது பெயர்களில் எந்தச் சொத்தும் இல்லை என்பது தெரியவந்துள்ளது. அதே நேரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் பிருந்தா காரத்துக்கு ரூ.1.74 லட்சத்துக்கு சொத்து உள்ளது.
கோடீஸ்வர எம்.பி.க்களில் 33 பேர் காங்கிரஸைச் சேர்ந்தவர்கள். 21 பேர் பாஜகவைச் சேர்ந்தவர்கள். 7 பேர் சமாஜவாதி கட்சியைச் சேர்ந்தவர்கள்.
மொத்தமுள்ள 219 மாநிலங்களவை எம்.பி.க்களில் 179 பேர் பட்டப்படிப்பு படித்தவர்கள். 18 பேர் 12-ம் வகுப்பு வரை பயின்றவர்கள் என்பதும் தெரியவந்துள்ளது. 11 எம்.பி.க்கள் உயர்நிலைப்பள்ளி வரை மட்டுமே படித்துள்ளனர். மேலும் 2 எம்.பி.க்கள் 8-ம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ளனர்.
மேலும் 37 எம்.பி.க்கள் மீது கிரிமினல் வழக்குகள் நிலுவையில் உள்ளதும் தெரியவந்துள்ளது. காங்கிரஸ் எம்.பி.க்கள் 7 பேர் மீது கிரிமினல் வழக்குகள் உள்ளன. பாஜகவைச் சேர்ந்த 6 பேர் மீதும், பகுஜன் சமாஜ் கட்சி, சிவசேனை கட்சிகளைச் சேர்ந்த தலா 4 எம்.பி.க்கள் மீதும் கிரிமினல் வழக்குகள் உள்ளன.
source:dinamani

0 கருத்துகள்: on "மாநிலங்களவையில் 98 கோடீஸ்வரர்கள், 37 எம்.பி.க்கள் கிரிமினல்கள்"
கருத்துரையிடுக