'அரசியல்வாதிகளை போல பேசத் தெரியாததால் தான் பிரச்னைக்கு ஆளாகிறேன்' என, மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் சசிதரூர் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாட்டு சபையின் அதிகாரியாக இருந்த சசிதரூர், பொதுச் செயலர் பதவிக்கு போட்டியிட்டு தோல்வியடைந்தார். இதையடுத்து அவர், காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து கடந்த லோக்சபா தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
சசி தரூர், நீண்ட காலமாக வெளிநாட்டில் தங்கியிருந்ததால் நம்நாட்டின் நடைமுறை வழக்கங்களை கிட்டத்தட்ட மறந்துவிட்டார். மத்திய அரசு சிக்கன நடவடிக்கை மேற்கொண்ட போது, விமானத்தில் எகனாமிக் வகுப்பில் பயணித்த தருர், மாட்டுக் கொட்டிலில் இருப்பதை போல உணர்ந்ததாக கூறினார். இவரது இந்த வார்த்தை சர்ச்சையை கிளப்பியது.
இந்தியா, பாகிஸ்தான் இடையே உள்ள பிரச்னையை தீர்க்க சவுதி அரேபியா மத்தியஸ்தம் செய்யலாம், எனக் கூறி வெளியுறவு அமைச்சர் கிருஷ்ணாவின் கண்டனத்துக்கு ஆளானார். விசா வழங்குவதில் கட்டுப்பாடுகளை அதிகரிக்க வேண்டும், என்ற போது, 'பயங்கரவாதிகள் விசா வாங்கிக் கொண்டா வருகிறார்கள்?' என, கேள்வி கேட்டார்.
இது குறித்து தனியார் ஆங்கில 'டிவி' சேனலுக்கு அளித்த பேட்டியில் தருர் குறிப்பிடுகையில், ' எனக்கு அரசியல்வாதியை போல பேச தெரியவில்லை. அதனால் தான் பிரச்னைகளுக்கு ஆளாகிறேன். இந்த வழக்கத்தை மாற்றிக் கொள்ள முயற்சி செய்து வருகிறேன்' என்றார்.
source:dinakaran
0 கருத்துகள்: on "எனக்கு பேசத் தெரியவில்லை: சசிதரூர் ஒப்புதல்"
கருத்துரையிடுக