15 ஏப்., 2010

காம்ரேட்டுகளின் கள்ள உறவு

ஐக்கியநாடுகள் சபை 1948 ஆம் ஆண்டு அமெரிக்காவின் நிர்பந்தத்திற்கு அடிபணிந்து ஃபலஸ்தீனை இரண்டாக பிரித்து ஃபலஸ்தீனர்களுக்கும், யூதர்களுக்கும் இரண்டு நாடுகள் உருவாக தீர்மானித்த பொழுது யூத நாட்டை அங்கீகரிக்க அமெரிக்காவுடன் சோவியத் யூனியனும் கைக்கோர்த்து நின்றது.

மத்திய கிழக்கு தேசமான ஃபலஸ்தீனை வன்முறை பூமியாக மாற்ற வல்லரசுகளுக்கு இருந்த ஆர்வத்தை விட சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியில் யூதர்களின் ஆதிக்கமும் சோவியத் யூனியன் யூதநாட்டை அங்கீகரிக்க காரணமாக அமைந்தது எனக் கருதப்படுகிறது.

இந்தியா முன்பு ஃபலஸ்தீன விடுதலைப் போராட்டத் தலைவர் யாசர் அராஃபத்தை ஆதரித்த பொழுதுதான் மேற்குவங்காளத்தின் முன்னாள் முதல்வர் மறைந்த ஜோதிபாசு இஸ்ரேலுக்கு சென்று வந்தார்.

மேற்குவங்காள முதல்வர் புத்ததேவ் பட்டாச்சார்யாவும், இந்தியாவில் இஸ்ரேலின் தூதரும் கொல்கத்தாவில் வைத்து ரகசிய பேச்சுவார்த்தை நடத்திய செய்தியைக் கேட்டு எவரும் அதிர்ச்சியடையத் தேவையில்லை என்பதற்காகவே மேற்கண்ட வரலாற்று நிகழ்களை இங்கு குறிப்பிடக் காரணமாகும்.

இஸ்ரேலும், மேற்குவங்காளமும் ஒரேவிதமான பாதுகாப்பு பிரச்சனையை எதிர்கொள்வதாகவும் அதனால் யூதநாடும் கம்யூனிஸ மாநிலமும் இணைந்து செயல்படவேண்டும் என்று இஸ்ரேலிய தூதர் சோஃபர் பத்திரிகையாளர்களிடம் தெரிவித்தார்.

விவசாயம், சூரிய சக்தி, உணவுப்பொருட்கள் பாதுகாப்பு போன்றவற்றில் இருநாடுகளுக்கிடையே ஒத்துழைப்பு என்பதெல்லாம் பொதுமக்களின் கண்களில் மண்ணைத்தூவும் மாயாஜால தந்திரமாகும். ராணுவரீதியான ஒத்துழைப்பும், அரசு பயங்கரவாதமும்தான் முக்கிய லட்சியம்.

சொந்த மண்ணையும், உறைவிடத்தையும் இழந்து ஃபலஸ்தீனிலும், அயல்நாடுகளிலும் அகதிகளாக வாழ்ந்துவரும் அரபு சமூகம் நடத்தும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த போராட்டத்தை தீவிரவாதம் என்று கூறும் இஸ்ரேலின் தூதருடன் பேச்சுவார்த்தை நடத்தி ஒத்துழைப்பை பலப்படுத்த முயலும் கம்யூனிச முதல்வரைக் குறித்து ஓய்வில்லாமல் ஏகாதிபத்தியத்தை குறித்து பிரச்சாரம் செய்துக் கொண்டிருக்கும் கம்யூனிச தலைவர்கள்தான் பதிலளிக்கவேண்டும்.

அமெரிக்காவிற்கு அடுத்தப்படியாக உலகத்தில் மிக அதிகமாக சட்ட வரம்புகளை மீறும் நாடு இஸ்ரேலாகும். 1948 ஆம் ஆண்டு முதல் ஐ.நா வும் இதர சர்வதேச அமைப்புகளும் நிறைவேற்றிய தீர்மானங்களையும், தடைகளையும் காற்றில் பறக்கவிட்டு மத்தியக்கிழக்கு நாடான ஃபலஸ்தீனில் கொடூரமாக கூட்டுப் படுகொலைகளையும், அழிவு வேலைகளையும் அதிகாரப்பூர்வமாக நடத்திக் கொண்டிருக்கும் ஒரு வன்முறை தேசத்துடன் உறவாட நினைப்பது ஏகாதிபத்தியத்திற்கு அஸ்திவாரம் போடுவதாகும்.

இஸ்ரேலுடன் எந்த நாடுகளெல்லாம் கூட்டுவைத்ததோ அங்கெல்லாம் வன்முறைகள் தாண்டவமாடவேச் செய்கின்றன. ஏறக்குறைய ஐந்து ஆயிரம் கூட வராத ஹமாஸ்-ஹிஸ்புல்லாஹ் போராளிகளை முறியடிக்க முடியாமல் திணறும் இஸ்ரேலின் முக்கிய நோக்கம் ஆயுத விற்பனையாகும்.
மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சிகளின் முன்பாகவே மேற்குவங்காள அமைச்சர்கள் டெல்அவீவிற்கு புனித பயணம் மேற்க்கொள்கிறார்கள். கம்யூனிச தோழர்கள் நடத்தும் அமெரிக்க-இஸ்ரேல் எதிர்ப்புப் போராட்டமெல்லாம் வெறும் கண்துடைப்பாகும்.

மாவோயிஸ்டுகளை பயங்கரவாதிகள் எனக் கூறிக்கொண்டு சேகுவாராவின் புகைப்படத்தை கையில் ஏந்தி செல்வதுபோல் தான் இதுவும். காம்ரேடுகளின் இஸ்ரேலுடனான கள்ள உறவை புரிந்துக் கொண்டு அவர்களின் இரட்டை வேடத்தை முறியடிக்க மக்கள் முன்வரவேண்டும்.

விமர்சகன்


Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "காம்ரேட்டுகளின் கள்ள உறவு"

கருத்துரையிடுக