வாஷிங்டன்:லெபனானில் செயல்படும் போராளி இயக்கமான ஹிஸ்புல்லாஹ்வுக்கு ஆயுதம் வழங்கியதாக குற்றஞ்சாட்டி அமெரிக்கா தனது தூதரை சிரியாவிலிருந்து திரும்ப வருமாறு உத்தரவிட்டுள்ளது.
வாஷிங்டனில் சிரியா தூதரக துணைத்தலைவர் சுஹைர் ஜாபரை அழைத்து அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சகம் தமது கண்டனத்தை தெரிவித்தது.
கடந்த வாரம் சிரியா ஹிஸ்புல்லாஹ்வுக்கு பாலிஸ்டிக் ஏவுகணைகளை வழங்கியதாக இஸ்ரேல் குற்றஞ்சாட்டியிருந்தது. 2006 ஆம் ஆண்டு இஸ்ரேலுக்கும் ஹிஸ்புல்லாஹ்வுக்கும் இடையே நடைபெற்ற போரில் 160 இஸ்ரேலிய ராணுவத்தினரும், 1200க்குமேற்பட்ட லெபனான் நாட்டைச் சார்ந்தவர்களும் கொல்லப்பட்டிருந்தனர்.
இதனைத் தொடர்ந்து ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் நிறைவேற்றிய தீர்மானத்தில் லெபனான் மீது ஆயுதத்தடையை விதித்திருந்தது. லெபனான் அரசு மற்றும் ஐ.நா வின் உத்தரவில்லாமல் ஆயுதம் பரிமாற்றம் கூடாது என்பதுதான் தீர்மானம். ஆனால் ஹிஸ்புல்லாஹ்வுக்கு சிரியாவும், ஈரானும் ஆயுதங்களை வழங்குவது தொடர்வதாக குற்றஞ்சாட்டப்படுகிறது.
ஹிஸ்புல்லாஹ் வசம் பாலிஸ்டிக் ஏவுகணைகள் இருந்தால் அது இஸ்ரேலுக்கு பெரும் பீதியை கிளப்பும் எனக் கருதப்படுகிறது. கடந்த சில மாதங்களாக நான்காவது முறையாக சிரியாவுக்கு எதிராக இதுத்தொடர்பான சந்தேகம் எழுந்துள்ளதாக அமெரிக்க வெளியுறவுத்துறையின் செய்தித் தொடர்பாளர் கார்டன் டுக்விட் கூறுகிறார்.
ஹிஸ்புல்லாஹ்வுக்கு ஆயுதம் வழங்குவதை கடுமையான வார்த்தைகளால் கண்டனம் தெரிவிப்பதாகவும் அவர் கூறுகிறார். இக்குற்றச்சாட்டுகளை சிரியா ஏற்கனவே மறுத்திருந்தது. தங்களின் அணுஆயுத திட்டங்களை குறித்த கேள்விகளிலிருந்து கவனத்தை திசைத்திருப்ப இஸ்ரேல் தம் மீது பொய்யான குற்றச்சாட்டை கூறுவதாக சிரியா தெரிவிக்கிறது. அமெரிக்கா சமீபத்தில் சிரியாவுடனான உறவை மேம்படுத்த முயற்சிகளை மேற்க்கொண்டிருந்தது.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்
0 கருத்துகள்: on "ஹிஸ்புல்லாஹ்வுக்கு ஆயுதம்:சிரியாவிற்கான தூதரை திரும்ப அழைத்தது அமெரிக்கா"
கருத்துரையிடுக