21 ஏப்., 2010

லலித் மோடியின் கிடுகிடு வளர்ச்சி, தடாலடி வீழ்ச்சி

லலித் மோடியின் ஏற்றம்
கோடீஸ்வர குடும்பத்தில் பிறந்த லலித் மோடி, இந்தியாவில் பள்ளி படிப்பை கூட முழுதாக முடிக்காமல், அமெரிக்காவின் டியூக் பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார்.
1985ல் படித்துக் கொண்டிருந்தபோதே சிகரெட் கம்பெனி ஒன்றில் வேலைக்கு சேர்ந்தார். பின்னர், பல சிகரெட் கம்பெனியில் வேலை செய்தார்.

1992ல் இந்தியாவில் காட்ப்ரே பிலிப்ஸ் சிகரெட் நிறுவன செயல் இயக்குனராக இருந்தபோது, மோடி என்டர்டெய்ன்மென்ட் நெட்வொர்க் நிறுவனத்தை தொடங்கினார்.

முதலில் ஈ.எஸ்.பி.என். டி.வி. சேனலின் இந்திய ஏஜென்ட்டாக நியமிக்கப்பட்டதும், மோடி வாழ்க்கையில் ஏறுமுகம் தொடங்கியது.
டி20 போட்டிகளை அறிமுகப்படுத்த மோடி மேற்கொண்ட முயற்சிக்கு கிரிக்கெட் வாரியம் முட்டுக்கட்டை போட்டது.

கிரிக்கெட் வாரியத்தில் நிர்வாகியாக நுழைந்தால் நினைத்ததை செய்ய முடியும் என்று முடிவு செய்து அதற்காக காய்களை நகர்த்த தொடங்கினார் மோடி.

கிரிக்கெட் மைதானம் கட்டிக் கொடுப்பதாகக் கூறி 1999ல் இமாச்சல பிரதேச கிரிக்கெட் சங்க உறுப்பினர் ஆனார்.
2000ல் சங்கத்தில் குழப்பம் ஏற்படுத்த முயன்றதாக கூறி, மோடியை தூக்கிவீசிவிட்டு தனது மகனையே கிரிக்கெட் சங்க தலைவராக்கினார் இமாச்சல் முதல்வர் தும்பார்.

எதற்கும் மனம் தளராத மோடி, ராஜஸ்தான் கிரிக்கெட் சங்கத்தை குறிவைத்தார்.

இங்கு மோடி செய்த கலகம் அவருக்கு நன்மையில் முடிந்தது. ராஜஸ்தான் கிரிக்கெட் சங்கத்தை 40 ஆண்டுக்கு மேலாக கட்டுப்பாட்டில் வைத்திருந்த ரங்தா குடும்பத்தை விரட்டிவிட்டு, தலைவர் பதவியை கைப்பற்றினார்.
ராஜஸ்தான் சங்கத் தலைவர் என்ற முறையில் இந்திய கிரிக்கெட் வாரிய உறுப்பினரானார்.
கடந்த 2005ல் ஜக்மோகன் டால்மியா, சரத்பவார் இடையே நடந்த மோதல் காரணமாக கிரிக்கெட் வாரிய துணை தலைவரானார்.

மோடியின் வியாபார திறமை காரணமாக, கிரிக்கெட் வாரியத்தின் வருமானம் அடுத்த 3 ஆண்டில் ஏழு மடங்கு அதிகரித்தது.

மோடியின் ஆலோசனைப்படி கடந்த 2008ல் ஐ.பி.எல். டி20 கிரிக்கெட் போட்டிகளை கிரிக்கெட் வாரியம் நடத்த தொடங்கியது.

ஐ.பி.எல். அமைப்பின் தலைவராக மோடி நியமிக்கப்பட்டார் ஐ.பி.எல். போட்டிகள் மூலம் கிரிக்கெட் வாரியத்துக்கு கோடிக் கணக்கில் வருமானம் குவிந்தது. மோடியின் செல்வாக்கும் ஜெட் வேகத்தில் உயர்ந்தது.

லலித் மோடியின் இறக்கம்
கடந்த 1985ல் அமெரிக்காவின் டியூக் பல்கலைக்கழக மாணவராக இருந்த போது 400 கிராம் கொகைன் போதை மருந்துடன் மோடி சிக்கினார்.

ஆள் கடத்தல் புகாரும் மோடி மீது சுமத்தப்பட்டது.

எல்லா குற்றத்தையும் ஒப்புக்கொண்டதால் குறைந்த தண்டனையுடன் மோடி தப்பினார்.

கடந்த ஆண்டு தென்னாப்பிரிக்காவில் ஐ.பி.எல். போட்டிகள் நடந்தபோது, ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அழகிப்போட்டியில் பங்கேற்ற கேப்ரில்லாவுக்கும் மோடிக்கும் மோதல் ஏற்பட்டது.

கேப்ரில்லாவின் இந்திய விசாவை நீட்டிக்கக் கூடாது என்று அமைச்சர் சசிதரூரிடம் மோடி பரிந்துரைக்க, அதையும் மீறி விசா நீட்டிக்கப்பட்டதால் சசிதரூர், மோடி மோதலின் முதல் அத்தியாயம் கடந்த ஜனவரியில் அரங்கேறியது.

ஐ.பி.எல்.லில் புதிய அணிகளை சேர்க்க நடந்த ஏலத்தில் குஜராத்தின் அகமதாபாத் நகருக்கு ஆதரவு தெரிவித்த மோடி கொச்சியை தோற்கடிக்க முயற்சித்தார்.

மோடி போட்ட முட்டுக்கட்டைகளையும் தாண்டி ஏலத்தில் கொச்சி அணி வெற்றி பெற்றதும், கொச்சி அணியை கழற்றிவிடும் முயற்சியில் இறங்கினார்.
சசி தரூர் & சுனந்தா சர்ச்சையை கிளப்பினார்.

தரூர் & மோடி மோதலின் கடைசி அத்தியாயம் தொடங்கியது.

தரூர் பதவிக்கு வேட்டு வைத்துவிட்டோம் என்று மோடி மகிழ்ச்சியோடு இருக்க, வருமான வரித்துறை குடைச்சல் கொடுக்க தொடங்கியது.

கிரிக்கெட் சூதாட்டம், கறுப்பு பணம், வரி ஏய்ப்பு புகார் என மோடியின் முகத்திரை கிழியத் ஆரம்பித்தது.

தரூர் அமைச்சர் பதவியை இழக்க, ஐ.பி.எல்.லில் மோடியின் நாட்கள் எண்ணப்படுகின்றன. வருமான வரித்துறையின் பிடியும் இறுகத் தொடங்கி உள்ளது.
source:dinakaran

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "லலித் மோடியின் கிடுகிடு வளர்ச்சி, தடாலடி வீழ்ச்சி"

கருத்துரையிடுக